முக்கிய 11 தீர்மானங்களை நிறைவேற்றிய ஜம்இய்யத்துல் உலமாதெஹிவளை முஹியத்தீன் பெரிய ஜுமுஆப் பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. கிராத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

வரவேற்புரையை தொடர்ந்து ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னேற்ற அறிக்கை  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் முபாறக் அவர்களால் முன்வைக்கப்பட்டது. இவ்வறிக்கையில் சென்ற வருடத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆற்றிய பணிகள் பற்றிய தெளிவு  வழங்கப்பட்டது.

தொடர்ந்தும் கடந்தாண்டின் செயற்பாட்டறிக்கைகளைச் சேகரிக்கவும், நடப்பாண்டுக்கான திட்டங்களை வரையவும் என அனைத்து மாவட்டங்களையும் ஐந்து குழுக்களாகப் பிரித்து அவற்றுக்கென பொறுப்பாக ஒருவரை நியமித்து வெற்றிகரமாக அந்நிகழ்வு செய்து முடிக்கப்பட்டது.

அஷ்-ஷைக் முஹம்மது இர்பான் (உப தலைவர் கொழும்பு மாவட்டக் கிளை) அவர்களின் தலைமையில்  கொழும்பு, புத்தளம், பதுளை, மன்னார், முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களும்,அஷ்-ஷைக் தாஸிம் (கௌரவ உப செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா) அவர்களின் தலைமையில்  கண்டி, நுவரெலியா, கேகாலை, அநுராதபுர ஆகிய மாவட்டங்களும்,
அஷ்-ஷைக் ஷுஐப் (கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா) அவர்களின் தலைமையில்  குருநாகல், யாழ்ப்பாணம், திருகோணமலை, பொலன்னறுவை, மட்டகக்ளப்பு ஆகிய மாவட்டங்களும்
அஷ்-ஷைக் நுஃமான் (கௌரவ செயலாளர், கம்பஹா மாவட்டக் கிளை)  அவர்களின் தலைமையில்  கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களும்
அஷ்-ஷைக் உமர்தீன்  (கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா) அவர்களின் தலைமையில் அம்பாறை, இரத்தினபுரி, மொனறாகலை, வவுனியா ஆகிய மாவட்டங்களும் குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

குழுக்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின் தமது கருத்துக்களை ஒவ்வொரு குழுவுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்கள் சபையோருக்கு சுருக்கமாக முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து நிகழ்வின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்தது.

லுஹர் தொழுகையத் தொடர்ந்து இரண்டாம் அமர்வு சமகால சவால்களும் உலமாக்களின்  வெற்றிகரமான முன்னெடுப்புக்களும் எனும் கருப்பொருளில் அஷ்-ஷைக் ஏ.ஸி. அகார் முஹம்மத் (கௌரவப் பிரதித் தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா) அவர்களின் உரையுடன் ஆரம்பமானது.

தனது உரையில் அண்மையில் இடம் பெறவுள்ள தேர்தலில் சிறந்த முன்மாதிரியானவர்களை தெரிவு செய்ய வழிகாட்டுவதும், போதை வஸ்துக்களுக்கு அடிமையாகியுள்ள எமது வாலிபர்களை பாதுகாப்பதும் உலமாக்களின் மிகப் பெரிய பொறுப்பு என குறிப்பிட்டார்.

நிகழ்வின் அடுத்த நிகழ்சியாக அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி (கௌரவத் தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா) அவர்களின் உரை இடம் பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்த அடிப்படையில் தனது செயற் திட்டங்களை முன்னெடுக்கின்றது, நாட்டில் பள்ளிவாசல்களில் கடமை புரிகின்றவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்ன நடவடிக்கைகள் செய்திருக்கின்றன, முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பது அனைவரினதும் கடமை, முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலை எவ்வாறு இருக்கின்றது என்பன சம்பந்தமாக தனது உரையில் சுட்டிக்காட்டினார்கள்.

தலைவரின் உரையை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் பிரகடனம் அஷ்-ஷைக் ஹாஷிம் ஷூரி (கௌரவ உப தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா) அவர்களால் முன்வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அஷ்-ஷைக் அப்துர் றஹ்மான் (கௌரவ உப பொருளாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா) அவ்ரகள் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்வை முடிவுக்கு கொண்டு சென்றார். இந்நிகழ்வில் நாட்டின் நாலா புறங்களில் இருந்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட, பிராந்திய கிளைகளின் பதவி தாங்குனர்கள் கலந்து சிறப்பித்ததுடன் நாட்டு மக்களின் நலன் கருதி இன்னும் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
மாநாட்டின் இறுதியில் வாசிக்கப்பட்ட மாநாட்டின் பிரகடனம்

2018.01.06ஆம் திகதி சனிக் கிழமை தெஹிவளை முஹையுத்தீன் பெரிய ஜும்ஆப் பள்ளவாயலில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதவி தாங்குஞர்களுக்கான  வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜம்இய்யாவின் மத்திய, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உட்பட பிரதேசக் கிளைகள், மாவட்டக்கிளைகளின் பதவிதாங்குஞர்கள் அனைவரும் பின்வரும் தீர்மானங்களை ஏக மனதாக நிறைவேற்றினர்.

1)அண்மையில் புனித ஜெரூசல நகரத்தை இஸ்ரவேலின் தலை நகராக பிரகடனம் செய்யப்பட்டதை எதிர்த்து ஐ.நா சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு உலக நாடுகளுடன் இணைந்து ஆதரவாக வாக்களித்த இலங்கை அரசை இந்த மாநாடு பாராட்டுகின்றது.

2) வக்பு, முஸ்லிம் விவாக விவாகரத்துத் தனியார் சட்டம் போன்ற முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை பாதுகாப்பதில் சகலரும் இயக்க கட்சி வேறுபாடுகளின்றி கவனம் செலுத்த வேண்டுமென இம்மாநாடு சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றது.

3)பல்லினத்தவர்களும் பல் சமயத்தவர்களும் வாழும் நம் இந்நாட்டில் சமூக நல்லிணக்கத்தைப் பேணி வாழ்வதற்கும், பிறருக்கு முன்மாதிரியாக  நடந்துகொள்வதற்கும் உலமாக்கள் அனைவரையும் தூண்ட வேண்டும் என இம்மாநாடு வேண்டிக்  கொள்கின்றது.

4) நாட்டிலுள்ள மஸ்ஜித்களில் கடமை புரியும் உலமாக்களின் நலன்கருதி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக்குத் தீர்வாக  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முன்வைத்துள்ள கோரிக்கைகளை அமுல் படுத்துமாறு இச்சபை முஸ்லிம் சமய பண்பட்டலுவல்கள் அமைச்சையும், திணைக்களத்தையும், வக்பு சபையையும் வேண்டிக் கொள்வதுடன்  இமாம்கள், கதீப்கள், முஅத்தின்கள் உட்பட பள்ளிவாயல்கள் உத்தியோகஸ்த்தர்கள், ஊழியர்கள், விடயத்தில் மஸ்ஜித் நிர்வாகிகளும் கூடிய  கவனம் செலுத்தவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

5)அண்மையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபை தேர்தலில் சம்பந்தப்படும் முஸ்லிம் வேட்பாளர்கள் மார்க்க வரையறைகளைப் பேணி நடந்துகொள்ளுமாறு வேண்டிக் கொள்ளும் இம்மாநாடு சமூக உணர்வும் பொதுநல மனப்பான்மையும் கொண்ட பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றது. மேலும் உலமாக்கள் வேட்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்குமாறும் இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

7) முஸ்லிம் பாடசாலைகளில் நிலவிவரும் அறபு, இஸ்லாம் பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்ப்பபட வேண்டுமென இம்மாநாடு உரிய தரப்பினரைக் கேட்டுக் கொள்கின்றது.

8) அறிவுமைய சமூகமாக எமது சமூகம் திகழ வேண்டும் என்ற வகையில் எல்லாக் கிளைகளும் கல்விமேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நாடளாவிய ரீதியில் நடாத்த முன்வருமாறு இச்சபை வேண்டு கோள் விடுக்கின்றது.

9) எமது இளம் சிறார்களை இஸ்லாமிய நெறிமுறைகளின் அடிப்படையில் வளர்த்தெடுக்கும் மிகப் பெரிய பணியை முன்னெடுத்துவரும் மக்தப் அமைப்புக்கு சமூகத்தின் எல்லா மட்டங்களில் உள்ளவர்களும் உதவி ஒத்தாசைகளை வழங்கவேண்டுமென இச்சபை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றது.

10)   பைத்துஸ் சகாத் நிறுவன அமைப்பு முறையை நாடெங்கிலும் வியாபிக்கச் செய்வதில் உலமாக்கள் கரிசணைகொள்ள வேண்டுமென இம்மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் வலியுறுத்துகின்றனர்.

11)   இதுவரை ஜம்இய்யா வெளியிட்டுள்ள பிரகடனங்களை சமூகமயப்படுத்தும் முயற்சியில் உலமாக்கள் தொடர்ந்தும் ஈடுபடவேண்டுமெனவும் கத்முன் நுபுவ்வா, மனாகிபுஸ் ஸஹாபா முதலான ஜம்இய்யாவின் நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வெண்டுமெனவும் இச்சபை ஏகமனதாக தீர்மானிக்கின்றது.

எம் நுஸ்ஸாக்