ஈரானில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன் டோனியோ குட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டு மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை கேட்டும், ஊழலுக்கு எதிராக போராடியும் வருகின்றனர். அரசுக்கு எதிராக நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

கடந்த 2009-ம் ஆண்டு அந்நாள் ஆட்சியாளர்களை எதிர்த்து வீதியில் இறங்கி போராடிய மக்களை அரசு இரும்புக்கரம் ஒடுக்கிய நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தின் இறுதியில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், தற்போது நடைபெற்றுவரும் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ளது. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, அமைதியான வழியில் போராடி வரும் அவர்களை அந்நாட்டு அரசு சிறையில் அடைத்து வருகிறது. தலைநகர் டெஹ்ரானில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் வெடித்தது. நாட்டின் சில பகுதிகளில் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. வங்கிகளும் தாக்குதலுக்குள்ளானது.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  ஈரானில் போராட்டக்காரர்கள் மீது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஐ.நா. சபை பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், ‘போராட்டத்தின் போது உயிரிழந்தவர்கள் குறித்து ஆழ்ந்த கவலை அடைகிறோம். மேலும், இதுபோன்ற வன்முறைகள் மீண்டும் நடக்காமல் இருக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Share The News

Post A Comment: