Jan 22, 2018

ஒட்டுமொத்த 20 இலட்ச முஸ்லிம் மக்களை ஹக்கீம் ஏமாற்றுகிறார் - ரிசாத் காட்டம்


எம்.ஏ.றமீஸ்

அம்பாறை மாவட்டத்தில் மயில் வீரியம் கொண்டு தோகை விரித்தாடுவதைக் கண்டு அச்சம் கொண்ட காரணத்தினால்தான் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் இராஜினாமா செய்து விட்டு அந்தப் பாராளுமன்ற உறுப்புரிமையினை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சொல்லி வருகின்றது ஆகையினால் அம்பாறை மாவட்ட மக்கள் மயில் சின்னம் கொண்ட கட்சிக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சனிக்கிழமை(20) மாலை இடம்பெற்ற தேர்தற் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முஸ்லிம்களின் இதயம் என வர்ணிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கட்சியின் பெயரை வைத்துக் கொண்டு பெருந் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் மரணத்தற்குப் பின்னர் கடந்த 17 வருடங்களாக அத்தலைமைப் பதவியினைப் பெறுவதற்கு என் மனம் விரும்பம் கொள்கின்றது என கூறி அக்கட்சியின் தலைமையினைப் பொறுப்பேற்ற தற்போதைய தலைமை தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி பல்வேறான நமது முஸ்லிம் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்து வருகின்றது.

இத்தலைமை கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து இச்சமுதாயம் இழக்க வேண்டிய அனைத்து விடயங்களையும் இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றளவிற்கு இழந்து பரிதவிக்கின்றது. எதிர்காலத்தில் எம்மை எதிர்நோக்கி வரும் பெரும் ஆபத்துக்களை தவிர்ப்பற்காகவும், நமது மக்களுக்கு உரிய சிறந்த பாதையினை காட்டுவதற்காக பிரிந்து நின்று செயற்பட்டவர்களை ஒன்று சேர்த்து கூட்டமைப்பொன்றை உருவாக்கி நமது மக்களின் நலனுக்காக செயற்பட தீர்மானித்துள்ளோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினைக் காப்பாற்ற வேண்டும் இக்கட்சியில் உள்ள அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையாக இக்கட்சியினைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கட்சியினை கட்டுக்கோப்புக்குள் வைத்திருந்த கட்சியின் ஆரம்பித்த முக்கியஸ்தர்கள் தற்போதைய கட்சியின் தீய செயற்பாட்டினைப் பொறுத்துக் கொள்ள முடியாததால் வெளியேறி வந்துள்ளனர்.

வடக்கும் கிழக்கும் இணையக் கூடாது. இம்மாகாணங்கள் இணைந்தால் முஸ்லிம்களுக்கு பல்வேறு பாதிப்புக்கள் உள்ளது என வடக்கில் பிறந்த நான் பகிரங்கமாக குரல் கொடுத்து வரும் இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மக்களின் ஒட்டு மொத்த ஆணையினைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் கட்சி தனது பதவியினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதுவரை அத்தலைமை கிழக்கு மாகாணம் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று ஓரிடத்திலாவது குரல் கொடுத்திருக்கிறதா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மாயக்கல்லி மலையில் உள்ள சிலையினை அகற்றுவதாய் அமையும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை கோரி வருகின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இவ்வாறு பசப்பு வார்த்தைகளை பேசி மக்களை ஏமாற்றி வருவதை நன்கு புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

இதே ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு மூன்று பாராளுமன்ற உறுப்புரிமையினைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அப்போது சொன்னது அம்பாறை மாவட்டத்தின் சாரதியும் நாமே நடத்துனரும் நாமே என மார்தட்டிப் பேசிக் கொண்டிருந்தது. ஆனால் மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்ட சிலையினை அப்போது அகற்ற முடியாமல் போன நடத்துனரும் சாரதியும் இப்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெட்கம் இல்லாமல் கட்சியினைக் காப்பாற்ற ஆணை தாருங்கள் என்று யானைச் சின்னத்திற்கு வாக்குக் கேட்கின்றார்கள்.

நமது முஸ்லிம் மக்களின் கண்ணீராலும் நமது மக்கள் சிந்திய உதிரத்தினாலும் வளர்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பெருந் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் நமது கிழக்கு மக்கள் சுதந்திரமாகவும்  நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்று பல்வேறு தியாகங்களை மேற்கொண்டார். ஆனால் தற்போதைய தலைமை வட கிழக்கு இணைப்புக்கு தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துக் கொண்டு இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த 20 இலட்ச முஸ்லிம் மக்களை அடிமைகளாக மாற்றுவதற்கும் கிழக்கு மாகாணத்தினையும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தினையும் இன்னுமோர் சமூகத்திற்கு தாரை வார்துக் கொடுக்க முயற்சித்து வருகின்றது என்றார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post