சீர் குலைபுக்களை அனுமதிக்க முடியாது!! தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிம்எம்.வை.அமீர் 

மூவின மக்களின் சமாதான கேந்திர நிலையமாக திகழும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி பல்கலைக்கழகத்தை சீர் குலைப்பதற்கு சில தீய சத்திகள் செயற்படுகின்றது என்றும்  சட்டத்தை யாரும் கையில் எடுத்து செயட்ப்படமுடியாது என்றும் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

2018ம் ஆண்டுடின் முதல் நாள் வேலைகளை ஆரம்பிக்கும் சத்தியபிரமான நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (02) வைபவ ரீதியாக பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்துக்கு என உபவேந்தர்,பதிவாளர்,மற்றும் பீடாதிபதிகள் நிர்வாக உத்தியோகத்தர்கள் என கட்டமைப்பு ஒன்று இருக்கின்றபோது அதில் கையாடல்கள் செய்யப்படும்போதுதான் குழப்பங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்து வரும் சனத்தொகைக் கேட்ப உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த உபவேந்தர், அதனை அடிப்படையாகக்கொண்டே இவ்வாண்டை உணவு உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பான ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் நிலைபேறான அபிவிருத்தியை முன்னெடுத்து பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும்  இதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் பல பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு நாட்டின் அபிவிருத்திக்கும், உயர் கல்விக்கும் பெரும் பங்காற்றி வருகின்றது. கடந்த காலங்களில் இப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக இங்கு கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பும் இருந்ததுபோன்று எதிர் காலத்திலும் ஒற்றுமையாக செயற்பாடுகளை முன்னெடுத்து பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அசாங்க உத்தியோகத்தர்களான நாங்கள்  நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் மலர்ந்துள்ள இப் புத்தாண்டு எல்லோருக்கும் இனிய ஆண்டாக பிரகாசிக்க பிரார்த்திக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

 ஒரு நிறுவனத்தில் கடமையாற்றும் சகல தரப்பினரும் ஒரு குடும்பத்தைப் போன்றவர்கள். ஒரு குடும்பம் எவ்வாறு வாழ வேண்டுமோ அவ்வாறே அந்த  நிறுவனமும் தனது செயற்பாட்டை முன்மாதிரியாக கொண்டு செல்வதற்கு சகல தரப்பினரின் ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் அவசியமாகும். அந்த வகையில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒரு முன்மாதரியான நிறுவனமாக  காணப்படுகின்றமை குறித்து  சந்தோசமடைகின்றேன் என்றார்.

நிகழ்வில் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களின் 2018 ஆம் ஆண்டுக்கான  சத்தியப்பிரமான நிகழ்வும் இடம்பெற்றது.