Jan 29, 2018

பீதியில் அங்கும் இங்கும் உளரித் திரியும் ஹக்கீம்!கடந்த 26ம் திகதி காத்தான்குடியில் மகிந்த ராஜபக்ஷ நடத்திய பொதுக்கூட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்தலைவருக்கு பீதியை ஏற்படுத்தி அவரை கொண்டு சென்று குருணாகல் பன்னலையில் உளற விட்டிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில், பொத்துவில், அக்கரைப்பற்று,  அட்டாளைச்சேனை, பாலமுனை, வரிப்பத்தான்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், கல்முனை, வாழைச்சேனை, திருகோணமலை, போன்ற இடங்களிலும்,

கிழக்கிற்கு வெளியே நுவரெலியா, கண்டி, கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், புத்தளம், வன்னி போன்ற மாவட்டங்களில் எல்லாம் தனியாகவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடனோ கூட்டு சேர்ந்து சென்று கூட்டம் நடத்தும் தலைவருக்கு சாய்ந்தமருதும், காத்தான்குடியும் நுழைய முடியாத மிகுந்த சவால் நிறைந்த பிரதேசங்களாகவே விளங்குகின்றது. 

முஸ்லீம் காங்கிரசிற்கும் காத்தான்குடிக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கின்றது, நியாயமாக பார்க்க போனால் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் காத்தான்குடியில் இருந்தே தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்க வேண்டும், ஆனால் காத்தான்குடியில் தராசு சின்னத்தில் வாக்கு கேட்கும் தனது உறுப்பினர்களை ஆதரித்து பேச கூட முடியாத ஒரு கையறுந்த நிலையிலேயே காணப்படுவது வேதனை மிக்க ஒரு சம்பவம்தான்.

சாய்ந்தமருதுக்குள்ளும், காத்தான்குடியிற்குள்ளும், நுழைய முடியாத தனது ஆற்றாமையை கிழக்கிற்கு வெளியே நடக்கும் கூட்டங்களில் கொட்டி தீர்ப்பதை காண முடிகின்றது, அதில் ஒன்றுதான் நேற்று பன்னலையில் நடந்த கூட்டத்தில் அவர் கொட்டி தீர்த்ததும், மகிந்த ராஜபக்ஷ அல்ல, பொதுபல சேனா கூட்டம் நடத்தினாலும் காத்தான் குடி மக்கள் அலை மோதுவார்கள் ஏனெனில் மகிந்த என்கின்ற ஒரு மனிதனை பார்ப்பதற்காகவும் அவர் என்ன சொல்கிறார் என கேட்பதற்காகவும் வந்த மக்களே அதுவன்றி மகிந்தவுக்கான ஆதரவாளர்கள் அல்ல அவர்கள் என்று ஹக்கீம் கூறியிருந்தது தன்னால் காத்தான்குடிக்குள் நுழையவில்லையே என்கின்ற ஆதங்கத்தில் மட்டும்தான்.

ஹக்கீம் போகின்ற இடங்களுக்கு கூட்டம் அலைமோதினால் அது ஹக்கீமுக்கான ஆதரவும் கட்சிக்கான ஆதரவாளர்களும் என பெருமை கொள்ளும் ஹக்கீம் ஏனையவர்களின் கூட்டங்களுக்கு வரும் மக்கள் வேடிக்கை பார்க்க வருகிறார்கள் என்று கூறுவது வேடிக்கையானது, ஏன் அதே மக்கள் முஸ்லீம் காங்கிரசின் தலைவர் என்று கூறிக்கொள்ளும் நபர் ஒருவர் எங்கிருந்தோ நீண்ட காலங்களுக்கு பிறகு வந்திருக்கிறாராம் அவர் என்ன நகைச்சுவைகளையும், ஏமாற்று வித்தைகளையும், பொய் மூட்டைகளையும், அவிழ்த்து விடுகிறார் என்று வேடிக்கை பார்ப்போம் என கருதிக்கொண்டு ஹக்கீமின் கூட்டங்களுக்கு வர முடியாது என்பது எமது கேள்வி.

மகிந்த என்கின்ற விசப்பாம்பின் பற்கள் இன்னும் முழுமையாக பிடுங்கப்படவில்லை என்பதன் எடுத்துக்காட்டுதான் மகிந்த போகும் கூட்டங்களுக்கு கூடும் மக்களின் எண்ணிக்கை, மகிந்தவிற்கான செல்வாக்கு இலங்கை மக்கள் மத்தியில் அப்படியே இருக்கின்றது என்பதை மகிந்தவின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்களின் தொகை மூலம் அறிந்துகொள்ள முடியும், இவ்வளவு ஏன் மகிந்தவின் கட்சியான பொது ஜன பெரமுன கட்சியில் வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லீம்களே அதற்கு சாட்சி. 

அந்த செல்வாக்கின் மூலமாகவேதான் மக்கள் காத்தான்குடியில் ஒன்று கூடினார்களே தவிர ஹக்கீம் பிதற்றுவது போல் அவரை பார்ப்பதற்காக அல்ல. முஸ்லீம்களின் தனித்துவ அடையாளமொன்று அழிந்து போவதை காணும்போது சாதாரண அடித்தட்டு வாக்காளனுக்கு காணப்படும் கவலை கட்சியின் தலைவருக்கோ, அதன் உயர்பீட உறுப்பினர்களுக்கோ இல்லை, அப்படி இருந்திருந்தால் இன்று தைரியமாக காத்தான்குடியிற்குள்ளும் சாய்ந்தமருதுக்குள்ளும் சென்று மேடை போட்டு பிரமாண்டமான கூட்டம் நடத்த தலைமையினால் முடிந்திருக்கும். அதை விடுத்து கோழி திருடன் போன்று நள்ளிரவு இரண்டு மணிக்கு ஒரு ஊருக்குள் ஒளித்து போகும் தேவை முஸ்லீம் மக்களின் தலைவர் என்று சொல்லிகொள்ளும் ஒருவருக்கு ஏற்பட்டிருக்காது.


இனி வருங்காலங்களில் அடுத்த கட்சிக்காரனின் கூட்டத்திற்கு விளக்கம் சொல்லியே முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் நாட்கள் நகரும் என்பது பேருண்மை.

றஸானா மனாப்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post