புதிய தேர்தல் முறையானது நீண்ட காலங்கள் ஆராயப்பட்டு, அது தொடர்பான சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தான் புதிய உள்ளூராட்சி மன்றத் ​தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது என, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் மொஹமட் மனாஸ் மக்கீன் இன்று(31) தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், தமிழ் மிரர் செய்திப் பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய அம்சங்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை முக்கியமான விடயமாகும் வட்டார முறையும் விகிதார பிரதிநிதித்துவ முறையும் இணைந்த கலப்பு தேர்தல் முறை நடைமுறைக்கு வருதல், வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்கு எண்ணும் நடவடிக்கை இடம்பெறுதல், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் குறைந்தது 25 சதவீதம் பெண் பிரதிநிதித்துவத்தை​ உறுதிப்படுத்துதல் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய பெண்களின் அரசியல் பிரவேசம் இலங்கை வாக்காளருக்கு புதிய விடயமென்பதனால் ,பல்வேறு கருத்துக்கள் பல மட்டங்களிலும் பேசப்பட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதனடிப்படையில் அ​ண்மையில் முஸ்லிம் மதப்போதகர் ஒருவர் வெளியிட்ட கருத்தானது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது.

அவரின் கருத்து வெளிப்பாடானது, முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெண்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், புதிய தேர்தல் சட்டத்தின் பிரகாரம் எந்வொரு உள்ளூராட்சி மன்றமும் குறைந்தளவு 25 சதவீதப் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படாத விடத்து, உள்ளூராட்சி மன்றத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதியோ, அவகாசமோ கிடைக்கப்பெறாது.

மேலும் பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் வேட்பு மனுத் தாக்கல் செய்கின்றப்போது வட்டார முறையில் நேரடியாக போட்டியிடக்கூடிய அபேட்சகர்களில் குறைந்தது 10 சதவீதம் பெண்கள் போட்டியிட வேண்டும் என்பதாகவும், இரண்டாவது மேலதிக வேட்பாளர் பட்டியலில் குறைந்தது 50 சதவீதம் பெண்களின் பெயர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் தேர்தல் சட்டத்தில் தெளிவான முறையில் குறித்து காட்டப்பட்டுள்ளது.

எனவே, வட்டார முறையில் போட்டியிடக்கூடிய பெண் வேட்பாளர்கள் குறித்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25 சதவீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக விகிதாசார பிரதிநிதித்துவத்தில் ஆசனங்கள் ஓதுக்கக்கூ​டிய சந்தர்ப்பத்தில் பெண் உறுப்பினர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

எனவே, பெண்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என, முஸ்லிம் மத போதகர் குறிப்பிடுவதைப் பார்க்கின்றப்போது, வேட்பு மனுத் தாக்கல் செய்கின்ற சந்தர்ப்பத்தில் பெண்களின் பெயர்களை உள்வாங்க முடியாது. இவ்வாறு பெண்கள் உள்வாங்கப்படாதவிடத்து தற்போது தேர்தல் சட்டங்களின் படி ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களிலும் வேட்பு மனு நிராகரிக்கப்படும்.

அவ்வாறு நிராகரிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கட்சி ரீதியாகவோ சுயேட்சை குழு ரீதியாகவோ, அரசியலில் ஈடுபடும் ஆண்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும்.

எனவே, குறிப்பிட்ட முஸ்லிம் மத போதகரின் கருத்தினை கபே அமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது எனக் குறிப்பிட்டார்.

தமிழ்மிரர்

Share The News

Post A Comment: