காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசு பொய் வேலைகள் செய்துகொண்டிருக்கின்றது, இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூடி மறைத்துக்கொண்டிருக்கின்றது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த நல்லாட்சி அரசு மூன்று வருடங்களாக காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்து கொண்டிருக்கின்றனர், அலுவலம் அமைக்க மூன்று வருடங்கள் தேவைப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்த எத்தனை வருடங்கள் தேவை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு, வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

அன்று மக்களுக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களை தமிழ் மக்கள் அறிந்து கொண்டால் என்ன நடக்கும்?

அரசாங்கத்திடம் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு செய்த சேதம் எனக்குத் தெரியும். கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களைப் பற்றி பின்னர் நான் வெளிப்படுத்துவேன்.

கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் வரப்பிரசாதங்களைப் பெற்று தமது பிள்ளைகளுக்கு வெளிநாடுகளில் வீடுகளை பெற்றுக்கொடுத்தமை, அவர்களுக்கு கல்வி சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுத்தமை எமக்குத் தெரியும். அதை நேரம் வரும்போது நான் வெளிப்படுத்துவேன்.

மக்களை மீள்குடியேற்றும்போது, ஒரு தண்ணீர் போத்தலைக்கூட கூட்டமைப்பினர் மக்களுக்கு வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பந்தன் இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார், ஆனால் அவர் தமிழ் மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுத்தார்? என அவர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share The News

Post A Comment: