முஸ்லீம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீனுக்கு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

முஸ்லீம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீனுக்கு

Share This


‘அன்புள்ள’ என்று ஆரம்பித்தேன் ஆனால் அழித்துவிட்டேன்.
‘கிழக்கான் மண்டியிடுபவன்’ ‘தொழிலுக்காய்க் கதவைத் தட்டுபவன்’
‘ஆளுபவன் அல்ல.ஆளப்படுபவன்’ என்று உங்கள் வக்கிரம் கொண்ட நெஞ்சத்தில் இருந்து வழிந்தோடும் வார்த்தைகள் எமது கிழக்கின் காற்றையும் வந்தடைந்தது.

இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் மனநிலையை உங்களுக்கு வளர்த்துவிட்டது யாருமல்ல.உங்களுக்கு தொழில் கொடுத்து வைத்திருக்கும் உங்கள் எஜமானன்தான்.

மட்டக்களப்பான் மட்டமானவன். ஆளப்பட வேண்டிய சூத்திரன் அவன். ஆளும் பிராமண வர்க்கம் நாம் என்று கிழக்கிலங்கை அரசியலுக்குள் பார்ப்பன வன்மத்தைப் புகுத்தியவன் உங்கள் தலைவன்தான். அதன் எதிரொலிதான் உங்கள் வார்த்தைகள்.

கிழக்கான் மலையகத்தான் என்று அன்று நாங்கள் பிரித்துப் பார்த்திருந்தால் இன்னேரம் உங்கள் தலைவர் கொல்லுப்பிட்டியில் ஐஸ் கிரீம் விற்றுக் கொண்டிருப்பார். அவரால் முடிந்தது அவ்வளவுதான்.

இவனின் மொழி வழக்கு வேறு எமது மொழி வழக்கு வேறு என்று நினைத்து உங்கள் தலைவரை இந்தக் கிழக்கான் அன்று விரட்டியிருந்தால் நீங்கள் இன்று வெளிநாட்டில் வெற்று ஊதியத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். வோட்ட போட்டில் அல்ல.

எங்கள் பண்பாடு வேறு, இவனின் பண்பாடு வேறு என்று இந்தக் கிழக்கான் நினைத்திருந்தால் குமாரியின் கல்கிஸ்ஸை வீட்டிற்கு வாடகை கொடுப்பதற்குக் கூட உங்கள் தலைவன் தலை கீழாய்த் தொங்கிக்கொண்டிருந்திருப்பான்.

மண் வாசனை வேறு மலை வாசனை வேறு என்று நாங்கள் அன்று நினைத்திருந்தால் உங்கள் தலைவன் கண்டியில் இருந்து கராம்பு ஏற்றிக் கொண்டிருந்திருப்பான்.

கிழக்கான் வேறுபாடு பார்ப்பவன் அல்ல. வந்தாரை வாழ வைப்பவன். கிழக்கின் மத்தியில் முளைத்த மரத்திற்கு கிழக்குக்கு வெளியே காவற்காரன் இருப்பதே அதற்கு உதாரணம்.

இன்று நீங்கள் இனிக்க இனிக்க சப்புக் கொட்டி பழம் தின்று கொண்டு விதையும்,தோலையையும் வீசி எறிகிறீர்களே இந்தக் கிழக்கு எனும் உங்கள் குப்பைக் கூடம் அந்தக் குப்பையில் முளைத்த குண்டுமணிதான் இந்த மரம் என்பதை மறந்துவிட்டீர்கள் போலும்.

எல்லா வேறுபாடுகளையும் மறந்து உங்கள் தலைவரை எங்கள் தோளில் சுமந்து மரத்தின் மலர்க் கிரீடத்தை அவர் மண்டையில் ஏற்றி அழகு பார்த்து,எங்கள் அரசியல் அதிகாரத்தை உங்கள் காலடியில் சமர்ப்பித்த கிழக்கானுக்கு நீங்கள் கொடுத்த தட்சணை என்ன தெரியுமா?அவனை அரசியல் அநாதையாக்கியது.

கிழக்கான் ஆளத்தகுதியில்லாதவன்.ஆளப்பட வேண்டியவன் என்றீர்கள்.

அப்படியென்றால் அஷ்ரப் என்ன மலைநாட்டின் மலையுச்சியில் பிறந்தவனோ? நீங்களும் உங்கள் தலைவரும் கிழக்கை வைத்துச் செய்து கொண்டிருப்பது அரசியல் அல்ல.ஏற்றுமதி வியாபாரம்.

கிழக்கானின் வாக்கு விளைச்சலையெல்லாம் கிழக்கானை வைத்து விதைத்து,அவனை வைத்தே அறுவடை செய்ததன் பின்னர் ஏற்றியதெல்லாம் உங்கள் தலைவர் கிழக்கு வெளியேதான். அந்த விளைச்சலைத்தான் நீங்கள் வோட்டர் போர்ட்டில் ரசித்து,புசித்து உண்கொண்டு உங்கள் காலடிக்கு நாங்கள் வரவேண்டும் என்கிறீர்கள்.இதை விட நகைச்சுவை இனி எங்கும் உண்டா?

உங்கள் தலைவர் கிழக்கை வைத்துச் செய்து கொண்டிருப்பது அடிமை வியாபாரம்.கிழக்கு மக்கள் தங்கள் அரசியல் தலைமையை பிரதேசம் பாராமல் அவருக்கு கொடுத்த நன்றிக்கடனுக்குத்தான் உங்களைப் போன்றவர்களை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.

கிழக்கான் உங்கள் தலைவருக்குப் போட்ட மடிப்பிச்சைதான் அவரின் பதவியும்,உங்கள் பதவியும்.நம்பிக்கொடுத்த மக்களை நடுவீதியில் கொண்டு வந்து விட்டிருக்கிறார் உங்கள் தலைவர்.

இந்த மட்டக்களப்பான் செய்த மாபெரும் தவறு என்ன தெரியுமா?

அப்பாவிக் கிழக்கானின் அரசியலை மூலதனமாக்கி வயிறு வளர்க்கும் வன் நெஞ்சக்காரனை தலைவானாக்கி அழகு பார்த்ததுதான்.
புலிகளால் வெட்டப்பட்ட வலியை இவன் புரிந்து கொள்வான் என்று நினைத்தது எங்கள் தவறுதான்.

மலை நாட்டில் இருந்தாலும் இடம் பெயர்ந்த மக்களின் இதயத்தை அறிவான் என்று நினைத்தது எங்கள் தவறுதான். கடலைக் காணாவிட்டாலும் வலை வீசுபவனின் வேதனை தெரியும் இவனுக்கு என்று நினைத்தது எமது தப்புத்தான்.

வயலைப் பார்க்காதவன் என்றாலும் வாழ்வு தருவான் என்று நினைத்து வலையில் வீழ்ந்தது எங்கள் தவறுதான். ஹக்கீம் ஒரு அற்புதமான அரசியல் வியாபாரி என்று அன்று எங்களுக்குத் தெரியாமல் போயிற்று. கிழக்கை விற்று வியாபாரம் செய்யும்,எங்கள் உரிமைகளை ஏலம் விட்டு ஏப்பம் விடும் ஹக்கீம் போன்றவர்கள் உருவாக்கிய அல்லகைகள்தான் நீங்கள்.

ஆனால் சபீக், வரம்பறுத்த கிழக்கான் நரம்பறுப்பான்.
புலிக்கே விரளாத மட்டக்களப்பான் இந்தப் பூனைக்கு மருளுவானா?குண்டடிபட்டுச் சாகாதவர்கள் நாங்கள் உனைப் போன்ற வண்டடிபட்டா சாகப் போகிறோம்.

இது வந்தாரை வாழ வைக்கும் பூமி.வந்து விட்டு உண்ட வீட்டு இருண்டகம் செய்தவர்களை விரட்டியடித்த பூமியும் இதுதான். விதைத்தவனுக்குத் தெரியும் எப்படி வீழ்த்துவது என்று. இந்த வெள்ளைக்காரன் விரட்டி அடிக்கப்படுவான். மரத்தை விதைத்தவனே இனிப் பழத்தைப் புசிப்பான்.

புது யுகம் ஒன்று இனிப் பிறக்கும். அப்போது நீ வேர்களோடு புதைந்து போவாய். உன் வார்த்தைகளுக்காய் நீயும் வருந்துவாய்.உன் தலைவனும் வருந்துவான்.

இனிப் பொறுத்திருந்து பார் புல்லுருவியே.

Raazi Muhammadh Jaabir
Akkaraipattu 

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE