மகேந்திரனுக்கு வலை: இன்டர்போல் உதவியுடன் மடக்கிப்பிடிப்போம்!“பிணைமுறி மோசடியின் குற்றவாளிகளில் ஒருவரான அர்ஜுன மகேந்திரன் உலகில் எங்கும் தப்பிச்செல்ல முடியாது. சாதாரண நபரொருவரைவிட பொறுப்புக்கூறவேண்டியவராக அவர் மாறியுள்ளார். எவர் தப்பிச்சென்றாலும் மோசடியாளர்களைத் தண்டிக்க சர்வதேச பொலிஸாரின் (இன்ரபோல்) உதவியையும் பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது.
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவந்தால் அதன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஆதரவளிப்பதா, இல்லையா என்று தீர்மானிப்போம்” என்றும் சு.க.கூறியுள்ளது.
கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

“பொது எதிரணி பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முன்மொழிவுகளின் அடிப்படையில்தான் அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்று தீர்மானிக்கப்படும். இதற்கு முன்னரும் பலருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதாக அவர்கள் கூறினர்.
ஆனால், இறுதிச் சந்தர்ப்பத்தில் அதனைக் கைவிட்டுவிடுகின்றனர். அதற்குக் காரணம் பஸில் ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலுள்ள கொடுக்கல் வாங்கல்களேயாகும். பொது எதிரணியின் சில உறுப்பினர்கள் அர்ஜுன மகேந்திரனின் மருமகன் அர்ஜுன் அலோஸியஸுடன் நெருங்கிய உறவைப் பேணினர். அதன் காரணமாகவே சிலர் பிணைமுறி மோசடியை மூடிமறைக்கவும் முயன்றனர். தற்போது அவர்களே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருகின்றனர்.
இது வரவேற்கத்தக்கது. அதிலுள்ள காரணிகளின் அடிப்படையில் நாங்கள் எவ்வாறு செயற்படுவதெனத் தீர்மானிப்போம். மாமாவைப் பாதுகாத்தவரையும், மருமகனைப் பாதுகாத்தவர்களையும் பார்த்தே தீர்மானிப்போம்” என்றார்.
இதேவேளை, அர்ஜுன மகேந்திரன் இலங்கையில் அண்மைய நாட்களாக இல்லையே என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“”அர்ஜுன இலங்கையில் இல்லாவிட்டாலும், அவரை இங்கு அழைத்துவரும் வகையில் சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த விடயம் தொடர்பில் தற்போது சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டுவருகின்றது. விசாரணைகளை முன்னெடுக்கும்போது இலங்கையில் தற்போது காணப்படும் சட்டங்களில் சில மறுசீரமைப்புகளையும் செய்யவேண்டிவரும்.
அர்ஜுன மகேந்திரனோ எவரோ இந்த மோசடியிலிருந்து விடுதலையடையவேண்டும் என்று நினைத்தால் அது பகற்கனவாகும். ஆணைக்குழுவை நியமிக்கும்போது ஊடகங்கள் முதல் பல்வேறு மட்டங்களால் சந்தேகங்கள் தொடுக்கப்பட்டன. ஆனால், வரலாற்றில் முதன்முறையாக ஆணைக்குழுவொன்றின் அறிக்கை சட்டநடவடிக்கையெடுக்கும் நிலைவரை கொண்டுவரப்பட்டுள்ளது. அர்ஜுன மகேந்திரன் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தாலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் செயற்பாட்டில் சாதாரண நபர்களையும்விட அதிக பொறுப்புடையவராகவுள்ளார்.
திருடப்பட்டவை தொழிலாளர்களின் பணமாகும். தொழிலாளர்களின் பணத்தைச் சூறையாடிய இந்த மகாதிருடர்களுக்குத் தண்டனை வழங்கும்போது சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவேண்டுமென்றால் அதனையும் செய்வோம். அத்துடன், இந்த ஆணைக்குழுவின் சாட்சிக்கோரலை முழுநாடும் பார்த்தது.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொய் கூறியதாகவே ஜனாதிபதி ஆணைக்குழு முன்னர் தெரிவித்திருந்தது. தற்போது அவர் கூறிவரும் கருத்துகள் வேடிக்கையானவை. ஐ.தே.கவினரே அவரைக் கட்சியை விட்டு நீக்குமாறு விரைவில் கூறுவார்கள்’என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...