Jan 4, 2018

பெண்களின் தேவை அ.இ.ம.காங்கிரஸின் சேவை - டாக்டர் ஹஸ்மியா புகழாரம்
( ஐ. ஏ. காதிர் கான் ) 

பெண்களின் நிறைந்த தேவைகளை,  மக்கள் காங்கிரஸ் சிறந்த  சேவைகளாக நிறைவேற்றி வருகிறது.  இன்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நாட்டு மக்களுக்கு மாத்திரமல்ல, பெண்களுக்கும் அதி சிறந்த சேவைகளைச் செய்து வருவதை, உண்மையில் பாராட்டாமல் இருக்க முடியாது. என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய மகளிர் அணித் தலைவி டொக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை புகழாரம் சூட்டினார். 

பெண்களின்  வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்  தொடர்பில், நேற்று முன் தினம் நீர்கொழும்பு, பெரியமுல்லையில் இடம்பெற்ற மகளிர்களுடனான விசேட கலந்துரையாடலின்போதே டொக்டர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

நாடளாவிய ரீதியில் இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஆகக்கூடுதலான பெண்கள் கலந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்நிகழ்வில் சமூகந்தந்திருந்த பெண்கள் டொக்டர் ஹஸ்மியாவுக்கு அமோக வரவேற்பளித்தனர். அத்துடன், டொக்டரினால் மகளிர் அணியில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்தும் பெண்களுக்கு மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போது டொக்டர் குறிப்பிட்டதாவது, 

உலகின் முதற் பிரதமர் உருவான பெருமையும் கெளரவமும் நமது இலங்கை மக்களுக்குண்டு. அந்த கெளரவத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, பெண்களின் பாதுகாப்பு வழிகாட்டல்கள்  அரசியலிலும், புதிய தேர்தல் சட்டத்திலும்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் முயற்சிகள்  அதிகளவில் காணப்படுவதினால்தான், இன்று அவர்கள் இவ்வாறு கெளரவப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது பெண்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரும் வரப்பிரசாதமாகும். 

சிறந்த வேலைகளைத் தாமதிக்காமல் நேரத்திற்குச் செய்யக் கூடியவர்கள் பெண்கள். இவ்வாறான பெண்கள் சமூகம் இன்று முன்னேறிக் கொண்டு வருகிறது. எமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க வேண்டும். இதற்கு உதவி செய்யக் கூடியவர்களும்  பெண்கள் சமூகமே என்றால் அது மிகையாகாது. எனவே, பெண்கள் தமது பங்களிப்புக்களை மேலும் நல்குவது சிறந்ததாகும். 

இன்று மக்கள் காங்கிரஸ் கட்சி பேதங்களைப் பாராது,  நாடளாவிய ரீதியில் பல சமூக நல வேலைத் திட்டங்களைச் செய்து வருகிறது. பெண்களுக்கும் வாழ்வாதார மற்றும் சுயதொழில் வேலைத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. கைத்தொழில்  அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதற்காக அயராது உழைத்து வருகிறார். கைத்தொழில் அமைச்சராக இருந்துகொண்டு, கல்வித்துறைக்கும் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்துவருவதையும் பாராட்டாமல் இருக்க முடியாது.  உண்மையில், மறைந்த தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபுக்கு அடுத்துள்ள ஒரேயொரு தலைவர் யார் என்றால், அது அமைச்சர் றிஷாட் பதியுதீன் தான் என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்வதில் நான் பெருமிதம் அடைகின்றேன்.  அந்தளவு  முஸ்லிம்களுக்கான அமைச்சரது சேவைகள், நாடு முழுவதும் வியாபித்த வண்ணமுள்ளன. மேலும்  இடைவிடாது அமைச்சரது சேவைகள் தொடரும் என்றார். 

நீர்கொழும்பு மாநகர சபை முன்னாள் (ஸ்ரீல.மு.கா.)  உறுப்பினரும் அ.இ.ம.கா. முதன்மை வேட்பாளருமான எம்.ஓ.எம். இஹ்ஸான், வேட்பாளர்களான எம்.பீ.எம். முஹாஜிரீன், எம்.எச்.எம். நெளஷாத் (ராபி), ஏ.ஜீ.எம். அஸ்லம் ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றினர்.


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network