கள்வர்களை பாதுகாத்து வரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரிகில்ஸ்கஸ்கொட பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 96 உறுப்பினர்களும் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தேன். அனைவரினாலும் எனது அரசியல் கொள்கைகளுடன் ஒத்துப் போக முடியாது என்பதனை தெரிந்து கொண்டே இவ்வாறு அழைப்பு விடுத்திருந்தேன்.

ஊழல் மோசடிகளை மேற்கொள்ளும் நோக்கில் சிலர் முயற்சித்தாலும் நாட்டுக்கு தேவையான தூய்மையான அரசியலை முன்னெடுப்பதில் நிலவும் சகல சவால்களையும் வெற்றிக்கொள்ளத் தயார்.

களவு எடுக்காத, களவு எடுத்ததாக குற்றம் சுமத்தப்படாத நாடாளுமன்றின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடன் இணைந்து தூய்மையான அரசாங்கமொன்றை உருவாக்க முடியும்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திரக் கட்சி தோல்வியைத் தழுவியிருந்தது. எனினும், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி வலுவான ஓர் நிலையில் காணப்படுகின்றது.

1994ம் ஆண்டு ஆட்சி அமைத்த அரசாங்கம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினை நிறுவி புதிய சட்டங்களை உருவாக்கியது.

எனினும் கடந்த 23 ஆண்டுகளில் இந்த சட்டங்களின் அடிப்படையில் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் வெறும் நான்கு பேர் மட்டுமேயாகும்.

ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்காது நாட்டுக்கு எவ்வித நன்மையும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share The News

Post A Comment: