Jan 26, 2018

மாற்றுக்கட்சியினர் சந்தர்ப்பவாத அரசியலுக்காக மு.கா.வின் அணுகுமுறையை விமர்சிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லைஎதிர்க் கட்சியில் இருந்துகொண்டே இறக்காமம் பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. தற்போது ஆளும் கட்சியில் இருந்துகொண்டு இந்த சபையை நாங்கள் ஒருபோதும் இழக்கப்போவதில்லை என்பதை சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச சபையில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (25) இறக்காமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டபோது, இறக்காமம் பிரதேச சபைக்கு தொல் பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒரு கடிதம் அனுப்புவதற்கு தயாராக இருந்தார். மாயக்கல்லி மலை அமைந்துள்ள இடம் தொல் பொருளியல் திணைக்களத்துக்கு சொந்தமானது என்றும் அங்கு வேலி அமைக்கப்படவுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதமரை சந்தித்து இந்த கடிதத்தின் பின்னாலுள்ள பிரச்சினைகள் குறித்து கூறினேன். உடனே அதற்கு பொறுப்பாகவிருந்த அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் கூறி, தொள் பொருளியல் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டு அந்தக் கடிதம் வாபஸ் பெறப்பட்டது.

மாயக்கல்லி மலை விவகாரத்தை பிரதமர் அங்கீகரிக்கவில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட ஐ.தே.க. அமைச்சரை அவர் கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுத்தான் அவர்மீது முன்வைக்கப்படுகிறது. முஸ்லிம் பிரதேசங்களில் எங்களது கட்சி என்ன அந்தஸ்தில் இருக்கிறது என்பதை அவர் இந்த தேர்தலின் மூலம் தெளிவாக புரிந்துகொள்வார்.

இங்குள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் மேடைகளில் ஏறமுடியாதளவு அவருடைய அந்தஸ்து இருந்துகொண்டிருக்கிறது. அவருக்கு ஆதரளவித்தவர்கள் கூட எந்த வரவேற்பும் கொடுக்கமுடியாத நிலையில் இருக்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

மாயக்கல்லிமலையில் சிலை வைத்த மறுநாளே, நாங்கள் களத்துக்கு வந்து பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். இந்தப் பிரச்சினையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆற்றிய பங்களிப்பு பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஆனால், மாற்றுக்கட்சியினர் மாயக்கல்லி மலை விவகாரத்தில் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், சந்தர்ப்பவாத அரசியலுக்காக முஸ்லிம் காங்கிரஸின் அணுகுமுறையை விமர்சிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. இதனை சாட்டாக வைத்து நாங்கள் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதை விமர்சனம் செய்கின்றனர்.

பெப்ரவரி 10ஆம் திகதி இறக்காமத்தின் சகல வட்டாரங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கம் இறக்காமம் மண்ணில் வியாபித்துவிட்டது என்ற அதிர்ச்சி வைத்தியம் அவர்களுக்கு காத்திருக்கிறது என்றார்.

இந்தக் கூட்டத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எச்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம். தவம், முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதிர், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network