Jan 31, 2018

சிங்களப் பகுதிகளில் தமிழ் வளர்த்த பெருமகன் மர்ஹும் செனட்டர் மசூர் மௌலானா(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிழக்கு மாகாணத்தின் மருதமுனையில் எஸ்.ஐ. செயின் மௌலானா - இஸ்மாலெப்பை போடியார் செனம்பு என்போருக்கு  மகனாகப்பிறந்த, மர்ஹும் செனட்டர் மசூர் மௌலானாவின் 86 ஆவது பிறந்த தினம் (1932.01.31) இன்றாகும்.

நல்ல பேச்சாற்றலும் திறமையும் கொண்ட மசூர் மௌலானா நாவண்மை படைத்தவர் என்றும் போற்றப்பட்டார். தமிழரசுக் கட்சியின் தலைவர்  தந்தை செல்வநாயகத்தை அடியொட்டி பாடசாலை வாழ்விலிருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர், சொல்லின் செல்வர் செ. இராசதுரையுடன் இணைந்து மட்டுநகர் சென்று தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அயராது பாடுபட்டு உழைத்தார்.

1954ஆம் ஆண்டு தன்னுடைய சாச்சா பாரி மௌலானாவின் மகள்  புஷ்ரத்துன் நயீமாவை கரம்பிடித்து மிபுஹாமி, யஸ்மின், அக்ரம், சியாம், மபாஹிர், இல்ஹாம், நௌஸாத் ஆகிய ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார்.

 1957 ஆம் ஆண்டு கொழும்பு - காலி முகத்திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் வெறியாட்டமாக வெடித்ததால்  வெறியர்களால் பேரையாற்றில் தூக்கி வீசப்பட்டார்.

1960 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட போராட்டத்தினால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனால் தமிழரசுக் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப்போராளிகள் ஆகியோரைக் கைதுசெய்து அரசு வீட்டுக்காவலில் தடுத்து வைத்தது. இதில் மசூர் மௌலானாவும் தடுத்து வைக்கப்பட்டார்.

சட்டத்துறையில் பயில வேண்டும் என்ற குறிக்கோளுடன் இலங்கை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்த இவரால், தடுப்புப் காவலில் இருந்தமையினால் சட்டக்கல்லூரியின் இறுதிப்பரீட்சைக்கு தனது வாழ்நாளில் தோற்ற முடியாமல் போவிட்டது.

அக்காலத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர்களையும் கட்சியின் தொண்டர்களையும் நன்கறிந்து வைத்திருந்த மசூர் மௌலானா, கட்சி சம்பந்தமான எந்தப் போராட்டத்திலும் மனங்கோணாது தன்னுடைய பங்களிப்பை வழங்கினார்.

1947 ஆண்டு சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் உருவாக்கப்பட்ட செனட்சபையில் அங்கம் வகித்த இருவருள் ஒருவராக, தனது 35ஆவது வயதில் அதாவது 1967ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 20ஆம் திகதி செனட்டராகப் பதவியேற்றார்.

மசூர் மௌலானா இல்லாத கூட்டங்கள் அன்று எங்கும் இடம்பெற்றிருக்க முடியாது. தமிழினத்தின் தன்மானக் குரலை மீட்டிய போதெல்லாம் அதற்கு குரல் கொடுத்து உணர்ச்சி ஊட்டியவர் மசூர் மௌலானா. 

வடகிழக்கு வாழ் தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவுக்கு முதற் பாலமாக வரலாற்றில் தடம் பதித்த இவர், ஓர் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி, ஏழை மக்களுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

மறைந்த பெருந்தலைவர் அஷ்ரபின் பிரசாரத்தின் மூலமாக கவரப்பட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். அதில் மேயர் பதவிக்கும் ஏகமனதாக தெரிவு செயப்பட்டார். தனது மரணம் வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலே இருந்து தனது பங்களிப்பைச் செய்தார்.

கரவாகு வடக்கு கிராமசபையின் தலைவர், கல்முனை மாநகர சபையின் உதவி மேயர், கல்முனை மாநகரசபையின் மாநகர முதல்வர், இலங்கை - இந்திய முதலாவது செயலர் உட்பட பல பதவிகளை இவர் வகித்துள்ளார்.

இவர் செய்த சேவைகளில் மசூர் மௌலானா வீதி, பிரேமதாச காலத்தில் நிறுவப்பட்ட மசூர் மௌலானா வீட்டுத்திட்டம், மசூர் மௌலானா மைதானம், போன்றன குறிப்பிடத்தக்கன.

சிங்களப் பகுதிகளில் தமிழ் வளர்த்த பெரும் மகன் இவர் என்றால் அது மிகையாகாது.

மசூர் மௌலானா, 2015 டிசம்பர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது 84ஆவது வயதில் காலமானார்! அவரது விருப்பின் பேரில் அவர் பிறந்த இடமான மருதமுனையில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் பாவங்களை மன்னித்து இறைவன் உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸை அன்னாருக்கு வழங்குவானாக! 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network