Jan 3, 2018

அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடிறிசாத்  ஏ காதர் 
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை நுழைவாயிலை விஸ்தீரணப்படுத்தும் பொருட்டு, காணித்துண்டினை கொள்வனவு செய்வதற்காக வசூலிக்கப்பட்ட பணத்தில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்றும், அந்தப் பணத்தில் மோசடி இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகம் உள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மு.காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளருமான ஐ.எல். நசீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், தேசிய காங்கிரஸ் கட்சியின் குதிரைச் சின்னத்தில் போட்டியிடும் அறபா வட்டார வேட்பாளரை ஆதரித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
“அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினுடைய செயலாளராக 10 வருடங்களுக்கும் அதிகமான காலம் நான் பணி செய்துள்ளேன். அக்காலப்பகுதியில் இரண்டு காணித்துண்டுகளை – பொதுமக்களின் நிதியுதவியின்றியே கொள்வனவு செய்தோம். அக்காலப்பகுதியில் எந்த ஆட்சி அதிகாரங்களும் எம்மிடம் இருக்கவில்லை.

ஆனால், தற்போது என்ன நடந்திருக்கின்றது? கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவி வகித்தவர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவராகவும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரமுகாராகவும் இருக்கின்றார். மத்திய சுகாதார பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தராகவும் உள்ளார்.

இந்த அதிகாரங்கள் இருக்கத்தக்கதாகவே, மேற்படி நிதி வசூலிப்பு இடம்பெற்றது. இந்த நிதி வசூலிப்பில் எந்த வெளிப்படைத் தன்மையும் பேணப்படவில்லை.

நன்கொடை வழங்கியவர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்குமாறு பணித்தும் அந்த நடைமுறை பின்றப்படவில்லை. அது மாத்திரமன்றி நன்கொடையாக பெறப்பட்ட பணத்தினை அப்பிவிருத்திக் குழுவின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடச் சொன்ன போது, அவசர அவசரமாக வெறும் ஐந்து லட்சத்து இருபத்து ஐயாயிரம் (5,25000) ரூபாவினை மாத்திரம் வைப்பலிட்டனர். மீண்டும் அதிலிருந்து உடனடியாக ஐந்து லட்சம் ரூபாவினை மீள எடுப்பதுக்கு அனுமதி கோரியிருந்தனர்.
அதற்கு நான் மறுப்புத் தெரிவித்திருந்தேன். அதனால் என்னை எதிரியாகப் பார்க்கத் தொடங்கினர். இதுவே இன்றுள்ள மு.காங்கிரஸ் கட்சிக்காரர்களின் நிலையாக உள்ளது. அதிகாரங்களை கைகளிலே வைத்துக்கொண்டால் எதுவும் செய்து விடமுடியும் என்கிற சிந்தனை இன்னும் இவர்களை விட்டு அகலவில்லை.
மக்கள் பணங்களில் விழாக்களை நடாத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது வெட்கம் கெட்ட செயலாகும்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல். நசீர் பதவி வகித்த போது, அவரின் தலைமையிலேயே மேற்படி நிதி வசூலிப்பு இடம்பெற்றது. இந்த நிலையில் அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கான காணியைக் கொள்வனவு செய்வதற்கு நன்கொடையாக நிதி வழங்கியவர்களின் பெயர்ப்பட்டடியலை தயாரித்து மக்கள் பார்வைக்கு இடுமாறும் கோரிக்கை விடுத்திருந்தேன். எனது எந்தக் கோரிக்கையும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரினாலோ, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினாலே ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
காணிக் கொள்வனவுக்காக மக்கள் வழங்கிய பணத்துக்கு ஆதாரங்கள் எங்கே? அவ்வாறான ஆதாரங்கள் இருக்குமானால் மக்கள் மன்றுக்கு சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வருவார்களா என கேட்கிறேன்.
இவ்வாறுதான் அட்டாளைச்சேனை பிரதே சபைக்குரிய காணி கொள்வனவிலும் பாரிய திருகுதாளங்கள் இடம்பெற்றன. அதனையும் மக்கள் ஆராய்தல் வேண்டும்” என்றார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post