Jan 29, 2018

தலைவர் அஷ்ரஃப் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்; அதாவுல்லாஹ் பகிரங்க அறிவிப்புஎமது தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் விபத்தில் மரணிக்கவில்லை. அவர் திட்டமிட்டே கொலை செய்யப்[பட்டிருக்கிறார் என்கின்ற மர்மம் தற்போது துலங்கி வருகிறது என தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து கல்முனைக்குடியில் நேற்று இரவு நடைபெற்ற கட்சியின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“உலகில் மிகப்பெரிய திருடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்ற விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாள் வீச்சில் அவர் இன்று அகப்பட்டிருக்கிறார். அதனால் ரணில் விரைவில் பிரதமர் பதவியை இழப்பார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்நாட்டு முஸ்லிம்களின் விரோதி என அன்று எமது மறைந்த தலைவர் அஷ்ரப் பிரகடனம் செய்திருந்தார்.

அவர் ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்கவை அங்கீகரித்ததில்லை.
நாம் எல்லோரும் முஸ்லிம் காங்கிரசில் இருக்கும்போது இந்த விடயத்தில்தான் ரவூப் ஹக்கீமுக்கு எனக்கும் முரண்பாடு ஏற்பட்டது. ரணில் ஒழிய வேண்டும் என்று அஷ்ரப் சொல்லியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அஷ்ரப் அங்கீகரிக்கவில்லை.

பிரபாகரனின் கழுத்தை அறுப்பது போன்றே நிய்யத் செய்து மக்காவில் குர்பானிக்காக ஆட்டை அறுத்தேன் என்று அஷ்ரப் நாடாளுமன்றத்தில் மிகத் துணிச்சலாக உரையாற்றியிருந்ததை எவரும் மறந்து விட முடியாது.

அப்படிப்பட்ட பிரபாகரனை ரவூப் ஹக்கீம் சந்திக்க விரும்பி என்னையும் அழைத்தார். நான் அதற்கு உடன்படவில்லை. பிரபாகரனை சந்திக்க கூடாது என்று விடாப்பிடியாக நின்றேன். ஆனால் என்னை பலாத்காரமாக தூக்கிக்கிக் கொண்டு ஹெலிகொப்டரில் ஏற்றினார்கள்.

அஷ்ரப் அங்கீகாரம் வழங்காமல் சபித்திருந்த ரணிலையும் பிரபாகரனையும் ரவூப் ஹக்கீம் தலையில் தூக்கி வைத்து ஆடினார். இன்றும் ஹக்கீம் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். அதனால்தான் நமது தனித்துவமான கட்சியை குழிதோண்டிப் புதைத்து விட்டு, யானையில் களமிறங்கியுள்ளார்.

அந்த மாபெரும் தலைவர் அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி மரணிக்கவில்லை. அவர் திட்டமிட்டே கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற மர்மம் இன்று துலங்கி வருகிறது. இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்ற உண்மை வெளிவராமல் போகாது.

ரணிலையும் ரவூப் ஹக்கீமையும் முஸ்லிம்கள் இத்தேர்தலில் நிராகரிக்க வேண்டும். அதற்காக வன்னியில் இருந்து வந்திருக்கின்ற ரிஷாத்தை ஏற்றுக்கொள்ளப் போகிறீர்களா? ஹக்கீம் எவ்வாறு முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து கொண்டிருக்கிறாரோ அதுபோலவே றிஷாத்தும் செய்து கொண்டிருக்கிறார்.

கல்முனை மண்ணில் பிறந்த பிரதி அமைச்சர் ஹரீஸ் உண்மைகளை புரிந்து கொண்டாலும் ரவூப் ஹக்கீமின் வலைக்குள் அகப்பட்டிருப்பதால் அவரால் சமூக ரீதியாக சிந்தித்து செயற்பட முடியாது என்பதை மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதன் மூலம் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்” என தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network