Jan 5, 2018

சாய்ந்தமருது சுயேட்சையில் உறுப்பினர்கள் தெரிவானாலும் சபையில் அமரமுடியாதுசாய்ந்தமருதில் அவர்கள் தோண்டிய குழிக்குள் அவர்களாகவே விழுந்துள்ளார்கள். யாரும் வரக்கூடாது

என்று வன்முறை செய்தார்கள். ஆனால், இப்போது சாய்ந்தமருதில் தாரளமாக கூட்டம் நடத்தலாம். தேர்தல்கள் ஆணையாளர் இதுதொடர்பில் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையார் சாய்ந்தமருது பள்ளி நிர்வாகத்தை அப்படியே கலைக்கப்போகின்றார். சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் சுயேட்சைக்குழுவில் உறுப்பினர்கள் தெரிவானாலும் சபையில் உட்கார முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார அலுவலகங்களை நேற்றிரவு (04) திறந்துவைத்தபின், நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;

முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவதுபோல சிலர் மாயக்கல்லி மலைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் முடிச்சுப்போட்டு பேசித்திரிகின்றனர். எங்களது கோட்டையில் யானையில் கேட்பது என்பது ஒரு தேர்தல் வியூகம். உள்ளூராட்சி சபைகளுக்கு அனுகூலங்களை அடைந்துகொள்வதற்கான ஒரு முயற்சியே தவிர இதில் வேறொன்றுமில்லை. சின்னங்கள் வேறுபட்டாலும் எண்ணங்கள் மாறுபடவில்லை. 

யானையில் போட்டியிட்டுத்தான் வெல்லவேண்டுமென்ற தேவை எங்களுக்கு கிடையாது. ஆனால், யானையில் கேட்பதன்மூலம் பின்னர் ஏற்படுகின்ற விபரீதங்களுக்கு நாங்கள் யானையையும் சேர்ந்து கட்டிப்போடலாம். சில மதம்பிடித்த யானைகளும் இருக்கின்றன. அவை ஊருக்குள் புகுந்துவிடக்கூடாது. அதற்காகத்தான், முழு யானைக்கூட்டத்தையும் எங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம்.

எங்களது முன்னாள் செயலாளர் ஹஸன் அலி இப்போது றிஷாதின் படத்தையும் போட்டுக்கொண்டு மயில் சின்னத்துடன் குந்திக்கொண்டிருக்கிறார். மரத்தின் நிழல்கூட படாத றிஷாத் பதியுதீன், மர்ஹூம் அஷ்ஃரபின் காலத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் உறுப்பினராக இருந்தவர். மறைந்த தலைவர் இருக்கும்போது அவரின் காற்றுகூட படாத றிஷாத் பதியுதீன், இப்போது அவரின் படத்தையும் போட்டு தேர்தல் கேட்பது என்னவொரு அநியாயம்.

தலைவர் அஷ்ரஃப் மரணித்தபின்னர், தனக்கு வேட்புமனு கொடுக்காவிட்டால் நஞ்சு குடிக்கப்போவதாக மர்ஹூம் நூர்தீன் மசூரிடம் சொன்ன காரணத்தினால்தான் அவருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இப்படியானவர் இப்போது பெரிய அமைச்சர் என்றும், பெரிய தலைவர் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார். கட்சியை அழிப்பதற்கு பலரும் செய்துபார்த்த வேலையைத்தான் இப்போது அவரும் செய்துகொண்டிருக்கிறார். இந்த முயற்சி எந்த இடத்திலும் பலிக்காது.

எங்களுக்கு எதிரான கிளம்பிய எல்லா விடயங்களும் இப்போது அப்படியே தலைகீழாக மாறியுள்ளன. அக்கரைப்பற்றில் இப்போது அமோகமான ஆதரவுத்தளம் உருவாகியுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபையையும், பிரதேச சபையையும் கைப்பற்றுகின்ற சூழல் இப்போது நிலவுகிறது.

நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போதே பல சபைகளை வென்றிருந்தோம். இப்போது ஆளும் கட்சியில் இருக்கும்போது அவை தோற்பதாக யாரும் நினைக்குவிட முடியாது. நாங்கள் ஏராளமான நிதிகளை அபிவிருத்திகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்த வருடம் அதைவிட இரண்டு மடங்கு நிதியொதுக்கீடு செய்வதற்கு நாங்கள் தயாரக இருக்கிறோம். 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் உரைநிகழ்த்தியதுடன் கட்சி முக்கியஸ்தர்களும், வேட்பாளர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network