Jan 22, 2018

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்அஸ்ஸலாமு அழைக்கும்
இன்று நாடு முழுவதிலும் அதிலும் குறிப்பாக 17 வருடங்களாக உங்களையும் உங்களின் நுண்ணரசியல் மற்றும் அதன் பின்புலங்களை நன்கு அறிந்த புத்தளம் மற்றும் வன்னி மாவட்டங்களில் உங்களின் பண அரசியல் பாரிய அளவில் மக்கள் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
 அங்காங்கே அரசல் புரசலாக கிசுகிசுக்கப்பட்ட விடயம் இன்று உங்கள் கட்சிக்காரர்களே எமது தலைவர் நூறு கோடி நல்லாட்சி அரசு அமைவதற்கு அள்ளிக்கொடுத்தார் என்று பெருமையாக பேசுவது வரை வந்து முடிந்திருக்கிறது. இந்த விடயத்தை மக்கள் பகிரங்கமாக பேச தலைப்படுவதற்கு தர்க்க ரீதியான நியாயங்களும் இல்லாமல் இல்லை.
அடிக்கடி முஸ்லிம்களின் உரிமை கடமை என்று முழங்கும் நீங்கள் அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், செய்தி இணையங்கள், ஊடகங்கள், சிவில் சமூகம் , வேட்பாளர்கள் என்று நீங்கள் எதையும் மிச்சம் வைக்காமல் எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது என்று நிறுபித்திருக்கிரீர்கள்.
 அதாவது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தினத்தினதும் அரசியல் ஆன்மாவும் இன்று உங்களின் பண வீச்சின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இந்த நிலையில் புத்தளம் தொகுதியின் ஒரு வாக்களனாக சிலவற்றை பேசலாம் என்று நினைக்கிறேன்.
இலஞ்ச ஊழல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் உங்களது குடும்பத்தின் பெயரில் இருக்கும் சுமார் 5000 ஏக்கருக்கும் அதிகமான காணி உறுதிகள் உட்பட இந்த 17 வருடங்களில் நீங்கள் சேகரித்திருக்கும் சொத்தின் மதிப்பு 15 ஆயிரம் கோடிகள் என்று பகிரங்கமாகவே மேடைகள் தோறும் மதிப்பிடப்படுகிறது. 

நீங்கள் முதலிடாத தொழிற்துறையே இல்லை என்றளவுக்கு இன்று ஆபிரிக்கா வரை வியாபித்திருக்கும் உங்களின் வியாபாரத்தில் வாகன இறக்குமதி, இரும்பு, அரசி, கடல் அட்டை முதல் கொட்டைப்பாக்கு வரை உள்ளடங்கும். ஒரு பேச்சுக்கு இந்த தொகையில் மூன்றில் ஒருபகுதிதான் உண்மை என்று வைத்துக்கொண்டாலும் 5000 ஆயிரம் கோடிகளை கடந்த 17 வருடங்களில் சேகரித்திருக்கிறீர்கள். அதாவது வருடத்திற்கு 300 கோடி, மாதத்திற்கு 25 கோடிகள், இந்த கணக்கின் படி ஒவ்வொரு நாளும் உங்களின் வருமானம் ஒரு கோடி !!
ஆக !! இலங்கையின் முதல்தர பணக்காரர்களான ஹரி ஜெயவர்த்தன, தம்மிக பெரேராவை பின்தள்ளிவிட்டு இன்றைய தேதியில் இலங்கையின் நம்பர் வன் கோடிஸ்வரர் நீங்கள்தான் !! மாஷா அல்லாஹ். ஒரு முஸ்லிம் இலங்கையின் நம்பர் வன் கோடிஸ்வரராக இருப்பது எங்களுக்கும் பெருமைதானே !! என்றாலும் மக்கள் வரிப்பணம் சம்பந்தப்படாமல் ஒருநாளைக்கு கோடிக்கணக்கில் ஹலாலாக எப்படி சம்பாதிப்பது என்ற இரகசியத்தை மட்டும் பகிரங்க படுத்திவிடுங்களேன் !
இதற்கு மேலதிகமாக, பட்டாணி ராசிக் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விடயத்தில் நீங்கள் சம்பந்தட்டீர்கள் என்று இங்குள்ள சிறு குழந்தையும் சொல்லும் குற்றச்சாட்டாகும். பல வருடங்களாக தொடரும் இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை நீங்கள் பதிலளிக்காமல் விலகி வருகிறீர்கள். ரிஷாத் ஒரு கொலைகாரன், அவனை கைது செய் என்று அன்று கோஷம் போட்டவர்களில் சிலர், சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் மரணித்த பட்டாணி ராசிக் இதன்பிறகு திரும்பி வரப்போவதில்லை, ஆகவே இதைப்பற்றி பேசி வேலையில்லை அவரை கொலை செய்தவர்களுக்கு அல்லாஹ் க்கு..க்கு..கூலி கொக்க..கொடுப்பான் என்று தட்டுத்தடுமாறி உரையாற்றும்போதே அவர்களின் மனசாட்சிக்கும் சேர்த்தே விலை பேசியிருக்கிறீர்கள் என்று புரிந்தது. ஒன்று செய்யுங்களேன்.. புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வந்து எனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தமே இல்லையென்று மக்கள் முன்னிலையில் சத்தியம் செய்துவிடுங்களேன் !! பிரச்சினை ஓரளவு தணிந்து போகட்டும்.
புத்தளத்தின் அரசியல் ஏனைய மாவட்டங்களை விட கொஞ்சம் வித்தியாசமானது. புத்தளம் இரண்டு மாவட்ட வாக்காளர்கள் வாழும் மாவட்டம். வாழ்விடம் ஒன்று என்றாலும் வாக்குரிமை பிரச்சினை என்பது வித்தியாசமானது. அரசியல் ரீதியில் வேறுபட்டு இருந்தாலும் வடபுலத்து மற்றும் புத்தளம் மக்களின் உறவுகள் மிகவும் நெருக்கமானது.

 அன்சாரிகள் முஹாஜிரீன்கள் என்று அழகாக வர்ணிக்ககூடிய வகையில் இன்று கணவன் மனைவியாக, பக்கத்து வீட்டுகாரர்களாக, நண்பர்களாக, தொழில் பங்காளர்களாக, சகலன்களாக என்று பிட்டும் தேங்காய் பூவுமாக மாறியிருக்கிறது. அந்த அழகிய உறவு தொடர வேண்டும் என்பதே எல்லா தரப்பினதும் ஆசை ஆவல். ஆனால் உங்களின் அரசியல் நடவடிக்கைகளை அவதானிக்கும் போது உங்களின் அரசியலை தக்கவைப்பதற்காக ஈற்றில் இந்த உறவுக்கும் உலை வைப்பீர்கள் போலவே தெரிகிறது. புத்தளத்து மக்களின் பட்டதாரி நியமனம், சமுர்த்தி அதிகாரிகளின் நியமனம் மற்றும் இன்னோரன்ன அரச வேலைவாய்ப்புக்களை நீங்கள் ஒரு கபினட் அமைச்சார் என்ற தோரணையில் உங்களின் அரசியல் சுயலாபத்திற்காக தொடர்ந்தும் கையடிக்க முயலுகிறீர்கள். 

உங்களின் வாக்கு வங்கியை தக்கவைப்பதற்காக வேலைவாய்ப்புக்களை வழங்குவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் நீங்கள் ஒரு தலை பட்சமாக புத்தளத்தின் கோட்டாக்களில் கைவைக்கும் போது இரண்டு மாவட்ட மக்களின் உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஏன் உங்களால் உணரமுடியாது இருக்கிறது? தங்களது பிள்ளைகளின் வேலைவாய்ப்புக்களை நீங்கள் பறித்து விட்டீர்கள் என்று பரிதவித்து தெரியும் தாய்மார்களின் அங்கலாப்புக்கள் உங்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையா அமைச்சரே !!
ஒருவேளை காதுக்கு எட்டியிருப்பதால்தானோ என்னவோ நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்யும் நீங்கள் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகியும் இதுவரை புத்தளத்தில் தலைகாட்டாமல் இருக்கிறீர்கள் !!
புத்தளம் மாவட்டத்தில் உள்ள சபைகளுக்கு யானையில் களம் கண்டிருக்கும் உங்கள் கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் உங்கள் வியாபார பங்காளர்கள் என்பதும் அவர்களிடம் இருப்பதாக சொல்லப்படும் பல கோடி சொத்துக்கள் அனைத்தும் உங்களின் பினாமி சொத்துக்களாக இருப்பதால் அவர்களுக்கு அரசியல் முகவரி கொடுப்பதன் ஊடாக உங்களின் சொத்துக்களுக்கு அரசியல் கவசம் கொடுத்து பாதுகாக்க முனைவதாகவும் அதற்கான விலை எங்களது வாக்குகளா என்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில் என்ன !!
புத்தளத்தின் கதை ஒருபக்கம் இப்படியிருக்க, மறுப்பக்கம் வன்னியிலும் சில காரியாலயங்களை திறந்துவிட்டு உங்கள் பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டீர்கள் என்று உங்கள் ஆதரவாளர்களே ஆதங்கப்படுகிறார்கள். வடக்கில் இருக்கும் ஒரேயொரு முஸ்லிம் பிரதேச சபையான முசலியின் அதிகாரம் உங்களின் கட்சியை விட்டும் பறிபோகலாம் என்ற பதட்டத்தில் உங்கள் ஆதரவாளர்கள் இருந்தாலும், கடந்த பாராளமன்ற தேர்தலில் நீங்கள் பல கண்டேயினர்களில் பைசிக்கில்களை கொண்டு இறக்கியதை போல இறுதி நேரத்தில் அமைச்சர் பண மூட்டையுடன் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கிறார்கள். 

அதாவது உங்களின் சொந்த மாவட்டத்திலேயே பணமூட்டையுடன் இறங்கினாத்தான் உங்களுக்கு வாக்கு கிடைக்கும் என்கிற நிலைமைக்கு ஒருவேளை உங்களிடம் இருப்பது எங்களை காட்டி உழைத்த பணம்தானே!! அதை எமக்கு தந்தாள் என்ன என்று வன்னி மக்கள் நினைக்கிறார்களோ என்று சந்தேகமாக இருந்தாலும் இதற்குள் இரண்டுஅரசியல் காரணங்களும் இருக்கிறது.
ஒன்று – முசலி மக்களின் மீள்குடியேற்றத்தில் ஆரம்பம் முதலே பல தடைகள் ஏற்படுத்தப்பட்டு வந்தன. முதல் தடையானது 2012 இல் நீங்கள் கபினட் அமைச்சராகவும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இருந்தபோது வெளியான அரச வர்த்தமானி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விழுங்கியது. 

2015 இல் வில்பத்து பிரச்சினை உக்கிரமடைந்தவுடன் எனக்கு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியது தெரியாது என்று அழுது நடித்து சமாளித்தீர்கள். நீங்கள் நடித்துக்கொண்டும் வீரவசனம் பேசிக்கொண்டும் காலம் கடத்தும் போதே மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் இன்னும் பல ஆயிரம் ஏக்கர்கள் விழுங்கப்பட்டன. 

இனி உங்களை நம்பி பிரயோசனம் இல்லை என்று மரிச்சுக்கட்டி மக்கள் மரிச்சுக்கட்டி பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக வர்த்தமானியை நிறுத்த கோரி வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம் செய்தபோது, உங்களின் அரசியல் எதிர்காலத்திற்கு ஆப்பு வந்திவிடும் என்று பதறியடித்துக்கொண்டு சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு சென்றதை போல அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அசாத் சாலியுடன் சென்று நடவடிக்கை எடுக்கிறோம் உங்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள் என்று ஆர்ப்பாட்டத்தை நிறுத்தினீர்கள். 

உங்களை நம்பி ஆர்ப்பாட்டத்தை நிறுத்தியவர்களின் கதி என்ன ? இன்று மாயக்கல்லி பற்றி ஆவேசமாக பேசும் நீங்கள் உங்களுக்கு வாக்களித்து உங்கள் வாக்குறுதியை நம்பிய மரிச்சுக்கட்டியை மறந்து போன மாயம் என்ன ?
முசளியில் இருக்கும் இரண்டாவது சவால் அரசியல் ரீதியானது. முசலி எப்போதும் உங்களுக்குரிய வாக்கு வங்கியாக மட்டுமே இருக்கவேண்டும் என்று நீங்கள் காய்களை நகர்த்துவது பரகசியமானது. 
முசலியில் ஏற்படும் எந்தவொரு அரசியல் எழுச்சியும் உங்களின் அரசியல் வாழ்வுக்கு ஆப்பாகவே முடியும். இந்த நிலையில் மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்திற்கு அமைய புதிய மாகாண சபை தொகுதிகளை உருவாக்கும் பொறுப்பு எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியால் பணிக்கப்பட்டு இருந்தது. சனத்தொகையை அடிப்படையாக கொண்டு தொகுதியை உருவாக்கும் முனைப்பில் ஆணைக்குழு ஈடுபட்டது. வட மாகாணத்தில் உருவாக கூடிய ஒரேயொரு முஸ்லிம் தொகுதியாக முசலி அடையாளம் காணப்பட்டது. 
ஆனாலும் மீள்குடியேற்றம் முற்றுபெறாததன் காரணமாக முசலியை அடிப்படையாக கொண்டு ஒரு தொகுதியை உருவாக்கவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டது. எல்லை நிர்ணய ஆணைக்குழு மன்னார் கச்சேரிக்கு விஜயம் செய்தபோது, முசலிக்கு மாகாண சபை தொகுதியை உருவாக்க முடியாதாம் என்றவுடன் அங்கிருந்த சமூக ஆர்வலர்களுக்கும் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கும் இடையில் பெரும் வாக்குவாதங்கள் கிளம்பின. ஆனாலும் ஏமாற்றங்களே எஞ்சியது.
அவர்கள் தங்களின் உரிமைக்காக போராடிய போது அவர்களின் வாக்குகள் பாராளுமன்றம் சென்ற நீங்களோ வடக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதிநித்துவம் தொடர்பாக எந்தவொரு முன்மொழிவையும் இதுவரை சமர்ப்பித்திருக்கவில்லை. முன்மொழிவை விடுங்கள், இந்த சிக்கலான பிரச்சினை பற்றி நீங்கள் இதுவரை மூச்சு கூட விடவில்லை. 
தனியான முசலி தொகுதி உருவாக்கப்படுமானால் உங்கள் அரசியல் வாழ்வுக்கு ஆபத்தாக முடிந்து விடும் என்ற உங்கள் கணிப்பீடுதான் நீங்கள் இன்றுவரை பேசாமடந்தையாக இருப்பதற்கு காரணமாக இருப்பதைத்தவிர வேறு காரணங்கள் இருக்க கூடும். மாகாண சபை தொகுதி உருவாக்கத்தில் மூச்சு காட்டாத நீங்கள், பாராளுமன்ற தேர்தல் முறை மூலம் நடத்தப்பட்டால் முஸ்லிம்களின் குரல் வலை நசுங்கி விடும் என்று திகாமடுல்லையில் வைத்து ஆவேசமாக பேசியிருக்கிறீர்கள். 
தொகுதி முறை உருவாக்கப்பட்டால் வன்னியில் இருந்து உங்களால் பாராளுமன்றம் போக முடியாது என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். ஆகவேஉங்கள் பாராளுமன்ற ஆசனத்தை பாதுகாக்க நீங்கள் தற்போது திகாமடுல்ல மாவட்டத்தை குறிவைத்திருக்கிறீர்கள். 

நீங்கள் திகாமடுல்ல மாவட்டத்தில் தேர்தலில் நிற்பதோ அங்குள்ளவர்கள் உங்களுக்கு வாக்களிப்பதோ விடுவதோ அவர்களின் ஜனநாயக உரிமை. அதில் தலையிட எமக்கு உரிமை இல்லை. சொல்லபோனால் உங்களின் பணபலத்தை கொண்டு இலகுவாக வெற்றியும் பெறுவீர்கள். ஆனால் போவதற்கு முன்னால் சிக்கலுக்குள் உள்ளாகியிருக்கும் வடமாகாண மக்களின் உரிமைகளுக்கு பதிலளித்துவிட்டு போவீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்களை பற்றி சிரச நிறுவனமும் அவ்வப்போது பேசி வருவதை அவதானித்து இருக்கிறேன். இந்த நாட்டின் அரசாங்க மற்றும் எதிர்கட்சிக்கு என்று ஒரு அஜெண்டா இருப்பதை போல மகராஜா நிறுவனத்திற்கும் ஒரு அஜெண்டா இருக்கிறது.அது மகாராஜா நிறுவனத்தின் நரித்தனமான அஜெண்டா. 
இந்த நாட்டின் அரசியலை கொன்றோல் பண்ணுவதற்கான அஜெண்டா. ஆனாலும் உங்களை அவர்கள் அடிக்கடி வம்புக்கு இழுப்பதற்கும் வேறொரு பின்னணி இருக்கிறது. அந்த பின்னணி ஒரு காணொளி தொடர்பானது. அதாவது 2004 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பு இன்டர்கொண்டிணன் ஹோட்டலின் 625 ஆம் இலக்க அறையில் நீங்கள் குமாரி குரேயை சந்தித்த போது அந்த அறையின் ஏசிக்குள் இரகசியமாக பொருத்தப்பட்டிருந்த கமரா மூலம் எடுக்கப்பட்ட காணொளி சிரசவிடம் மாட்டிக்கொண்டது. 

இந்த காணொளி தொடர்பாகவே உங்களுக்கும் சிரசவுக்கும் உரசல்கள் ஆரம்பமானது, இன்றுவரை தொடருகிறது. நீங்கள் இருவருமே யோக்கியவான்கள் இல்லை என்பதால் ஒன்றில் அந்த காணொளிக்கோ அல்லது முழு சிரச ஊடகத்திற்குமோ உங்கள் பாணியில் ஒருவிலையை பேசி முடித்துவிடுங்கள். பிரச்சினை முடிந்தது.

இறுதியாக, முப்பது வருட கொடிய யுத்தத்தில் இருந்து இந்த நாட்டை மீட்டெடுத்த மஹிந்த ராஜபக்சவை தலைமேல் வைத்து கொண்டாடிய இந்த நாட்டு மக்கள், அவரின் அபரிமிதமான ஊழல் காரணமாக அவரை அடுத்த ஐந்தாட்டில் வீட்டுக்கு அனுப்பிய வரலாறும் இந்த நாட்டில் நடந்தேறியிருக்கிறது என்பதை உங்களுக்கு நினைவூட்டி இந்த மடலை முடிக்கிறேன்.
வஸ்ஸலாம்
இவன்
ஒரு அப்பாவி வாக்காளன்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post