வாக்குகளை வீணாகச் சிதறடிக்காமல் சிந்தித்துச் செயல்படவும்( மினுவாங்கொடை நிருபர் )

   உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய எல்லை நிர்ணய முறைமைக்கு அமைவாக, கல்லொழுவை முஸ்லிம் பிரதேசம் இம்முறை "கல்லொழுவை மேற்கு" மற்றும்  "பொல்வத்தை"  என இரு வட்டார எல்லைகளாகப் பிரிக்கப்பட்டு்ள்ள நிலையில், இந்த இரு வட்டாரங்களிலிருந்தும் மினுவாங்கொடை பிரதேச சபைக்குப் போட்டியிடும் கட்சிகளின் வாக்குகள் இம்முறை சிதறடிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை பிரதேச வாழ் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

   குறித்த பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய கட்சிகளிலிருந்து போட்டியிடுவதற்காக முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மாத்திரம் ஒரு முஸ்லிம் வேட்பாளரேனும் உள் வாங்கப்படாமல், தேசியப் பட்டியலில் மாத்திரம் இடம்  ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருப்பது, பாரபட்சத்தையும், புறந்தள்ளும் போக்கையும்  காட்டுவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 

   ஐ.தே.க. வின் பிரதான கோட்டையாக, கல்லொழுவை முஸ்லிம் பிரதேசம் அன்று முதல் இது காலவரை இருந்து  வருகிறது.  கல்லொழுவை மேற்கு வட்டாரத்தில்  முஸ்லிம்களின் வாக்குகள் மாத்திரம் 2,518 ஆக இம்முறை அதிகரித்துள்ளன.  பெரும்பான்மை இனத்தின் வாக்குகள் 1,090 ஆக மாத்திரமே  பதியப்பட்டுள்ளன. 

இந்நிலையில்,  இவ்வட்டாரத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் ஐ.தே.க. சார்பில் போட்டியிடுவதற்காக நியமிக்கப்பட்டு, அவர் ஆகக்கூடுதலான வாக்குகளைப் பெற்றுத் தெரிவானால், குறித்த பிரதேச சபையின் தலைமைத்துவப் பதவியை குறித்த முஸ்லிம் வேட்பாளருக்கு கட்டாயம் வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என ஊகிக்கப்பட்டிருப்பதாலேயே, முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு இப்பிரதேசத்தில் போட்டியிடுவதற்கு ஐ.தே.க. சந்தர்ப்பம் வழங்காமல் நிராகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். 


   எனவே, முஸ்லிம்கள் செறிந்து வாழும் கல்லொழுவை பிரதேச ஒட்டு மொத்த வாக்குகளையும்  வீணாகச் சிதறடிக்கச் செய்யாமல், அபிவிருத்தியின் இலக்கை நோக்கிப் பயணிக்கும் ஒரு சிறந்த கட்சியைத் தெரிவுசெய்து, அதனூடாக களமிறங்கியுள்ள வேட்பாளரை ஆதரிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...