Jan 31, 2018

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய NFGGயும் ஜனாதிபதியின் பதிலும்


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் அப்துர் ரஹ்மானை இன்று (31.01.2018) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்திற்காக காத்தான்குடிக்கு ஜனாதிபதி வருகை தரவிருக்கும் நிலையிலேயே இன்று காலை ஜனாதிபதி உரையாடியுள்ளார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி பிரதேச மக்களின் நலன்களோடு தொடர்பு பட்ட பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி ஜனாதிபதி அவர்களுக்கு நேற்று (30.01.2018) அசவர கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தது.  அந்தக் கடிதம் தொடர்பாக பதிலளிக்கும் வகையிலேயே இன்று பொறியியலாளர் அப்துர் ரஹ்மானோடு ஜனாதிபதி பேசியுள்ளார்.

 NFGG யின் கடிதத்தில் மக்கள் சார்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும்  ஜனாதிபதி உறுதியளித்தார்.

NFGG அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,

“எதிர் வரும் 31ம்  திகதி நீங்கள் காத்தான்குடிக்கு விஜயம் செய்யவிருப்பதாக அறிகிறோம். இப்பிரதேச  மக்கள் சார்பாக  உங்களை வரவேற்பதோடு உங்கள் விஜயம் வெற்றிகரமாக அமைய வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றோம்.

கடந்த 2014 டிஸம்பர் இறுதியில்  ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக எமது பிரதேசத்திற்கு நீங்கள் வருகை தந்த பிறகு இப்போதுதான் முதற்தடவையாக இங்கு வருகிறீர்கள் என நம்புகிறோம். அதாவது சரியாக மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த மண்ணுக்க நீங்கள் வருகிறீர்கள். இந்த இடத்தில் சில முக்கிய விடயங்களை உங்களுக்கு நினைவு படுத்தி உங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருவது பொருத்தம் என நினைக்கிறோம்.

அப்போதைய அராஜக ஊழல் நிறைந்த ஆட்சியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான போராட்டத்தில் முஸ்லிம் சமூகமும்  பங்கெடுக்க வேண்டும் என விரும்பியது. ஆனால், முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து மாற்றத்தின் பங்காளிகளாக முன்னின்று உழைப்பதற்கு எந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அல்லது அரசியல்வாதிகளும் முன்வரவில்லை. இதற்கான காரணம் சகல முஸ்லிம் கட்சிகளும் அரசியல் வாதிகளும் கடந்த கால அராஜக அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்து அதன் மூலம் கிடைத்த வரப் பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டிருந்தமையாகும்.

இந்நிலையில், உண்மையான நல்லாட்சி நிர்வாகம் ஒன்றை உருவாக்குவதற்காக கடந்த 11 வருடங்களுக்கு மேலாக அர்ப்பணத்துடன் இயங்கி வரும் எமது கட்சி துணிவுடனும் சமூக அக்கறையுடனும் தேசப்பற்றுடனும்  ஒரு சிறந்த  மாற்றத்திற்காக உழைப்பதற்கு அப்போது முன்வந்தது.

ஜனாதிபதி  தேர்தலுக்கான வேட்புமனுவை நீங்கள் தாக்கல் செய்த மறுதினம் முழு நாட்டிலும் முதன் முறையாக உங்களுக்கான ஆதரவு திரட்டும் கூட்டத்தை நாமே கொழும்பில் நடத்தினோம்.  இந்நாட்டில் ஒரு நல்லாட்சி மாற்றத்திற்கான ஒரு உழைப்பை தொடங்கி வைத்த மறைந்த மதிப்புக்குரிய சோபித தேரர் அவர்களும் கூட அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

அந்த வகையில் நாடுபூராகவும் 70க்கும் அதிகமான பிரச்சாரக்கூட்டங்களை எமது கட்சி நடத்தியது. பிந்திய காலங்களில் உங்களோடு இணைந்த
முஸ்லிம் அரசியல் வாதிகள் பெருந்தொகை பணத்தினை பேரம் பேசிப்பெற்றுக் கொண்டதாக சொல்லப்படும் நிலையில்,  எமது சொந்த நிதியினைப் பயன்படுத்தி பெருஞ் செலவோடு இதனை இந்த நாட்டுக்காக நாம்  செய்தோம்.  அந்த வகையில் எமது கட்சியின் பிரதான ஆதரவுத் தளமான காத்தான்குடிப் பிரதேசத்திலும் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான தீவிர பிரச்சாரங்களை எமது கட்சி மேற்கொண்டது.

அப்போது, காத்தான்குடிப் பிரதேசம் தற்போதைய உங்கள் மாவட்டப் பிரதிநிதியாக இருக்கின்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் செல்வாக்குமிக்க பிரதேசமாக இருந்த போதிலும்  அவர் இந்த மக்களின் உணர்வுகளை அனுசரித்து நடந்து கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்சவை வெல்ல வைப்பதற்காக   உங்களுக்கெதிராகவே  அவர் பிரச்சாரம் செய்தார். உங்களைத் தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக உங்கள் மீதான மிகப் பாரதூரமான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து கடுமையாகப் பிரச்சாரம் செய்தார்.
எனினும், அந்த  பொய்ப்பிரச்சாரங்களை  நம்புவதற்கு எமது மக்கள் தயாராக இருக்கவில்லை. இருப்பினும் உங்களின் தற்போதயப் பிரதிநிதியாகிய அவரும் உங்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியை விடவில்லை. பெருந்தொகைப் பணம் செலவழித்து மக்களின் வாக்குகளை உங்களுக்கொதிராக திருப்புவதற்கு முயற்சித்தார். இருப்பினும், எமது தீவிரமான பிரச்சாரத்தின் காரணமாக  90 வீதத்திற்கும் அதிகமான இப்பிரதேச மக்கள் உங்களுக்காகவே வாக்களித்தார்கள்.

அதற்கு ஒரேயொரு காரணமே பிரதானமாக இருந்தது. தேர்தல் காலங்களின் போது நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை மக்கள் நம்பினார்கள். மக்களுக்கு துரோகம் செய்கின்ற ஆட்சிமுறைகளுக்கு முடிவு கட்டி மக்களின் நலன்களை பாதுகாப்பேன் என நீங்கள் முழுமையாக வழங்கிய அந்த வாக்குறுதியே உங்களுக்காக எமது மக்களை  வாக்களிக்க வைத்தது.

ஆனால்,  உங்களது பிரதிநிதியின் தலைமைத்துவத்தின் கீழும் அவரது அரசியல் அதிகாரத்தின் கீழும் இப்பிரதேச மக்களின் நலன்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு  வருகின்றன. ஏராளமான ஊழல் மோசடிகள் நடைபெற்றுள்ளன. அப்பாவி ஏழைமக்களின் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. மக்கள் எதிர்பார்க்கும் ஒரு நாகரீகமான நல்லாட்சியை இந்த மண்ணில் ஏற்படுத்துவதற்கு உங்கள் பிரதிநிதியே பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.

மேலும், பெரும் மக்கள் எதிர்பார்ப்புடன் அமைந்த இந்த  அரசாங்கத்தின் போக்குகுள் எப்படி இருக்கின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயமே. இது பற்றிய கவலையினை நீங்களும் அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறீர்கள். எஞ்சியிருக்கும் பதவிக்காலத்திற்குள் மக்கள் விரோத அரசியல் செயல்களுக்கும் ஊழல் மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பேன் என ஒரு சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் மீண்டும் வாக்குறுதியளித்திருந்தீர்கள். இது, எமது நாட்டில் நல்லாட்சி உருவாகுவதற்காக எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி உழைத்த எம்மைப்போன்ற தேச நலன்கொண்ட சக்திகளுக்கு ஒரு புதிய நம்பிக்கைiயை மீண்டும் தந்திருக்கிறது.

எனவே, நீங்கள் காத்தான்குடிக்கு விஜயம் செய்யும் இந்த சந்தர்ப்பத்தில் எமது மக்களுக்கு  இழைக்கப்பட்ட சில முக்கிய அநீதிகள் தொடர்பாகவும், ஊழல் மோசடிகள் தொடர்பாகவும் அவர்கள் எதிர் கொள்ளும் பரச்சினைகள் தொடர்பாகவும் தங்களின்  கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.


01 காத்தான்குடி நகர சபையின் நிர்வாகம் தங்களின் தற்போதைய பிரதிநிதியான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அணியின் கைகளிலேயே 2006ம் ஆண்டு முதல்  2015 நடுப்பகுதி  வரை  இருந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் அதில் பிரதான எதிர்கட்சியாக அங்கம் வகித்த நாம் அங்கு நடை பெற்ற அதிகார துஸ்பிரயோகங்கள், நிதி முறைகேடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியும், அவற்றை நிறுத்துவதற்காக போராடியும் வந்துள்ளோம். அத்தோடு உரிய இடங்களுக்கு முறைப்பாடுகளையும் செய்துள்ளோம். இருப்பினும், காத்திரமான  எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே, 2006 முதல் 2017 வரையான காலப்பகுதியில் நடை பெற்ற விடயங்கள் அனைத்தையும் முழுமையாக கணக்காய்வு தொழில்நுட்ப ஆய்வு மற்றும் விசாரணைகளைச் செய்வதற்கான ஒரு விசேட குழுவை நியமிக்க வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

02 சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென குவைத் அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட குவைத் சிட்டி வீட்டுத் திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக ஒருகுழுவை நியமித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

03 கஸ்டப்பட்டு சிறுகச்சிறுக சேமித்து காத்தான்குடி கர்பலா பகுதியில் வாங்கிய  தமது காணிகளை, இழந்த ஏழை மக்கள் நீண்ட காலமாக நீதி கிடைக்கப் போராட்டம் நடாத்தி வருகிறார்கள். இதில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.

04 கடந்த 2010 ஆம் ஆண்டு உங்களது கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தேர்தல் பிரச்சார காலத்தில் புதிய காத்தான்குடி பள்ளிவாயல் முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் உடைக்கப்பட்டு உடனடியாக புதிய பள்ளிவாயல் அமைத்துத் தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது. இதனை  பல தேர்தல் பிரச்சாரங்களுக்கு பாவித்தும் விட்டார். ஆனால் எட்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதன் நிர்மாணம் இன்னும் பூர்த்தியடையவில்லை. எனவே, நீங்கள் இதில் தலையிட்டு உடனடியாக இதனைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

5. காத்தான்குடி நகர சபையின் நிர்வாக எல்லை தொடர்பான சர்ச்சை முடிவுறாத ஒற்றாக பல வருட காலமாக நீடித்து வருகிறது .
இதனை தீர்ப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேற்படி விடயங்களில் பல  உங்கள் கட்சிப் பிரதிநிதியினாலும்  தற்போது உங்களது கட்சி வேட்பாளர்களாக இருக்கின்ற நபர்களாலும் அவர்களின் தயவில் இயங்குகின்ற சிலரினாலுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை பாரதூரமான விடயங்களாகும். மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கின்ற விடயங்களாகும். நீண்டகாலமாக தீர்க்ப்படாமல் கிடக்கும் விடயங்களுமாகும்.

எனவே, காத்தான்குடிக்கு நீங்கள் மேற்கொள்ளும் விஜயமானது உங்கள் கட்சியின் தேர்தல் வெற்றிக்கான வாக்கு சேகரிக்கும் விஜயமாக மாத்திரமாக அமையாமல்  மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காணும் விஜயமாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

எமது மக்கள் வழங்கிய வாக்குகளின் மூலமாக உங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தின் மூலம் அந்த மக்களுக்கான நீதியினையும் தீர்வினையும் குறித்த தினத்தில் நீங்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் இந்த மக்களுக்கான தீர்வை நீங்கள் பெற்றுக்கொடுக்க  வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

எனவே, நீங்கள் விஜயம் செய்யும் சந்தர்ப்பத்தில்   எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக உங்களோடு உரையாட விரும்புகின்றோம்.

தங்களை மக்கள் மத்தியில் அவமானப்படுத்தி தோல்வியடையச் செய்ய கடுமையாக உழைத்தவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு இங்கு விஜயம் செய்யவிருக்கின்ற நீங்கள்,  எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி பல அநியாயங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் நல்லாட்சிமுறையொன்று நமது நாட்டில் உருவாக வேண்டும் என்தற்காக தங்களது வெற்றிக்காக உழைத்த எமது கோரிக்கையினையும் எமது மக்களின் பிரச்சினைகளையும் புறந்தள்ளிவிட மாட்டீர்கள் எனவும் நம்புகின்றோம்.

தங்களிடமிருந்து விரைவான பதிலொன்றை எதிர்பார்க்கின்றோம்.”

(NFGG ஊடகப் பிரிவு)

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network