கம்பஹாவில் 2 உணவகங்களுக்கு வழக்கு; 4 க்கு சிவப்பு நோட்டீஸ்கம்பஹா மா நகர சபை மற்றும் கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பன இணைந்து, கம்பஹா மாவட்ட வைத்திய சாலைக்கு அருகில் உள்ள 18 உணவகங்களில்  மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, மனித பாவனைக்குப் பொருத்தமற்ற முறையில் உணவு வகைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 6 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கம்பஹா பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.எம். சுமனசேகர தெரிவித்துள்ளார். 

   இதன்பிரகாரம், மனித பாவனைக்குப் பொருந்தாத உணவு வகைகளை விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படும் இரு உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறான உணவு வகைகளை தம்வசம் வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நான்கு உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தலும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவகங்களிலுள்ள குளிர் சாதனப் பெட்டிகளில் கோழி இறைச்சி மற்றும் உணவுப் பொருட்கள் காலாவதியாகி இருந்தமை, இறைச்சி மற்றும் உணவுப் பொருட்களை ஒன்றாக வைத்திருந்தமை மற்றும் காலாவதியாகிய பிஸ்கட் வகைகளை விற்பனைக்காக வைத்திருந்தமை போன்ற குற்றச் சாட்டின் பேரிலேயே, இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )