ஈராக்கின் மறுகட்டமைப்புக்காக குவைத் அரசு 2 பில்லியன் டாலர் உதவி!
உள்நாட்டுப் போரினால் சிதிலமடைந்த ஈராக்கின் மறுகட்டமைப்புக்காக குவைத் அரசு 2 பில்லியன் டாலர் வழங்க உள்ளது. ஈராக் நாட்டின் மொசூல் உள்ளிட்ட பல நகரங்களை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு 2014-ம் ஆண்டில் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அங்குள்ள பழமை வாய்ந்த மசூதிகளை நாசமாக்கிய ஐ.எஸ். இயக்கத்தினர் பெரும்பாலான மக்களையும் கொன்று குவித்தனர்.

அவர்களுக்கு எதிராக சர்வதேச உதவியுடன் களமிறங்கிய ஈராக் அரசுப்படையினர் கடந்த ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துவிட்டதாக அறிவித்தனர். இதனையடுத்து, போரில் சிதிலமடைந்த நகரங்களை மறுகட்டமைக்கும் பணியை தற்போது மேற்கொள்ள உள்ளனர்.

இதற்காக, குவைத்தில் நன்கொடையாளர் மாநாடு நடந்தது. அதில், ஈராக்கில் மறுகட்டமைப்புக்கு மட்டும் 88.2 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வீடுகளை இழந்தோருக்கு வீடுகள் கட்டுவதே முதன்மை இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் குவைத் அரசரான எமிர் ஷேக் சபா அல் ஹ்மத் அல் சபா பேசும்போது, ஈராக் மறு கட்டமைப்புக்காக குவைத் அரசு 2 பில்லியன் டாலர் ஒதுக்கி உள்ளதாக  அறிவித்தார்.

இதில் ஒரு பில்லியன் டாலர் ஈராக் நாட்டிற்கு கடனாக வழங்கப்படும். ஒரு பில்லியன் டாலர் ஈராக்கின் மறுகட்டமைப்புக்கு உதவும் வகையில் நேரடி முதலீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

‘சர்வதேச நாடுகளின் ஆதரவு எதுவும் இல்லாமல் மறுகட்டமைப்பு பணிகளை ஈராக் அரசாங்கத்தால் தொடங்க முடியாது. அதனால்தான் உலகம் நாடுகள் இன்று ஈராக் பக்கம் நிற்கின்றன’ என்றும் குவைத் எமிர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...