Feb 13, 2018

என்.எம். அமீன்; எழுதிய கடிதமும், அதற்கு பின்னாலுள்ள அரசியல் காய்நகர்த்தல்களும்
அஹமட்

முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன்; எழுதிய கடிதமும், அதற்கு பின்னாலுள்ள அரசியல் காய்நகர்த்தல்களும். 

கண்டி கலகெதர பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் சிங்கள சகோதரருக்கு சொந்தமான கடையும், முஸ்லிம் சகோதரருக்கு சொந்தமான கடையும் இன்று தீக்கிரையாகியுள்ளது. அந்த சம்பவத்தை அடியொட்டி முஸ்லிம் கவுன்சிலின் தலைவரும், நவமணி பத்திரிகையாசிரியருமான என். எம்.அமீன் பொது ஜன பெரமுன கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளதாக அறியமுடிகிறது. அதில் ஜீ.எல். பிரிசுக்கு எழுதியுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது.

தேர்தல் காலங்களில் ஆங்காங்கே வன்முறை அவ்வப்போது இடம்பெறும். அவ் வன்முறைகள் தனிப்பட்ட ஒரு கட்சிகளால் மாத்திரம் இடம்பெறுவதுமில்லை. அதனை எவ்வாறு அனுகவேண்டும் என்கிற அறிவே முதலில் இங்கு தேவை.

இவ்வாறு கடிதம் எழுதுவதனை சாதாரண ஒரு விடயமாக கருதிவிடமுடியாது. பெரும் அரசியல் பின்புலங்கள் இல்லாமல் இதனை எழுதவும் முடியாது என்பது அரசியல் அரங்கில் சொல்லப்படுகின்ற  விடயம். 
முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என். எம். அமீன் இந்த நாட்டில் மிக முக்கியமான ஒருவர். சிரேஷ்ட ஊடகவியலாளர். முஸ்லிம் சமூகத்துக்கு பணியாற்றுகின்ற ஒருவர் என்கிற பார்வையும் உள்ளது. ஆனால் இங்கு இடம்பெற்ற சம்பவத்துக்கு யாரக்கு கடிதம் எழுதுவது என்கிற அடிப்படை அறிவு அவரிடம் இல்லாமலில்லை. ஆனால் ஏன் பொது ஜன பெரமுன கட்சிக்கு எழுத வேண்டும் என்பதுவே இங்குள்ள கேள்வி.

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு கடிதம் எழுதிய என்.எம். அமீன் ஏன் உலப்பன, பயனவங்குவையில் இடம்பெற்ற சம்பவத்துக்கு கடிதம் எழுதவில்லை. அதே போல் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி அலுவலகத்துக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டதுக்கு ஏன் கடிதம் எழுதவில்லை என்கிற  கேள்வியும் எழாமலில்லை.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 'இருட்டில் தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடும் முஸ்லிம் புத்திஜீவிகள்' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்ததனை வாசகர்கள் மறந்திருக்க வாய்ப்பிருக்காது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஸ்ரீலங்கான முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் தேசிய ஐக்கிய முண்ணனியின் தலைவர் ஆஸாத் சாலி ஆகியோர் பொதுபல சேனாவுடைய பொதுச் செயலாளர் ஞானசார தேரரை சந்தித்த விடயமே அந்தக்கட்டுரை சொல்லியிருந்தது. என்பதும் இங்கு ஞாபகித்துக்கொள்ள வேண்டியதுவே.
இந்த நிலையிலே என்.எம். அமீனுடைய கடிதம் அமையப்பெற்றுள்ளது. சரி அப்படித்தான் ஜீ.எல்.பிரிசுக்கு கடிதம் எழுதியதை நியாயப்படுத்தினால். காத்தானகுடி விவகாரத்துக்கு யாருக்கு கடிதம் எழுதுவது என்கிற கேள்வி எழுமல்லவா? 

ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு கடிதம் எழுதாத என்.எம்.அமீன் இந்த சம்பவங்களை இவ்வாறு கடிதம் எழுதி பொது ஜன பெரமுன கட்சியுடன் முடிச்சுப்போடுவது எதற்காக என்று சாதாரண மக்கள் கூட புரிந்துகொள்வர்.

அப்படித்தான் எழுதுவதாக இருந்தால் ஜனாதிபதி, பிரதமர் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஆகியோருக்கே எழுதியிருக்க வேண்டுமல்லவா.

யாருக்கு கடிதம் எழுதுவது என்று தெரியாமலா என்.எம்.அமீன் கடிதம் எழுதியுள்ளார். இல்லவே இல்லை. இது பிரதமர் ரணிலின் திட்டத்துக்குள் உள்ள விடயம். என்.எம்.அமீன் ரணில் சார்பு அரசியல் பின்புலமுள்ளவர். தற்போது எழுந்துள்ள அரசியல் சூழலும், மஹிந்தவின் மீள் வருகைக்கான எழுச்சியையும் ரணிலோ, என்.எம். அமீனோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அந்த எழுச்சியை  உடனடியாக முஸ்லிம்களிடமிருந்து பிரிப்பதுக்கான உத்தியாகவே குறித்த கடித விடயம் பார்க்கப்படல்; வேண்டும்.
மேலும் இங்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தின் ஊடாக ரணிலுக்கு தனது விசுவாத்தை இன்னும் அதிகப்படுத்தி காட்டுவதுக்காகவும் இருக்கலாம்.
ஜீ.எல்.பீரிஸுக்கோ, பஷில் ராஜபக்ஷவுக்கோ கடிதம் எழுதவில் உள்ள நியாயங்கள் என்ன? பொது ஜன பெரமுன கட்சி எதுவித அதிகாரத்திலும் இல்லைதானே. அதிகாரத்திலுள்ளவர்களுக்கு எழுத வேண்டிய கடிதத்தினை ஏதுமற்றவர்களுக்கு  எழுவதனை என்னவென்று சொல்வது.
மிக்க குறுகிய காலத்துக்குள் உருவான பொது ஜன் பெரமுன கட்சி பெரும்பான்மையாக கிராமங்களில் எழுச்சியை  ஏற்பட்டுத்தியுள்ளது. இப்படியே போனால் முஸ்லிம் கிராமங்களிலும் இதன் வளர்ச்சி மேலோங்கும். அதனால்; ஐக்கிய தேசிய கட்சி இன்னும் பலமிழக்கும். அதனை என்.எம். அமீன் விரும்பமாட்டார். 

குழுக்கள் அமைத்து தேடப்பட்டு வந்த ஜானசார தேரரை வெறும் அரை மணி நேரத்துக்குள் மூன்று பிணைகள் வழங்கப்பட்டது. இது தொடர்பில் குறைந்தது சட்டமா அதிபருக்கேனும் கடிதம் எழுதியிருக்க வேண்டும்.
காலி, ஜின்தோட்டை விடயம் தொடர்பில் இதுவரை வாய்திறக்காத நாட்டினுடைய ஜனாதிபதிக்கு முஸ்லிம்கவுன்சில் கவலையோடு கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் அதனை செய்ததாக எந்த ஊடகங்களிலும் கண்டுகொள்ள முடியவில்லை.

அழுத்கம கலவரத்துக்கு ஆணைக்குழு அமையுங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதனை துரிதப்படுத்துங்கள் என இதுவரை என்.எம்.அமீனோ, முஸ்லிம் கவுன்சிலோ கோரியிருக்க வேண்டும்.
மேலும், நல்லாட்சி நிறுவப்பட்டதன் பின்பு முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை கட்டுப்படுத்துங்கள் என்றாவது இந்த நாட்டினுடைய தலைமைகளை கோரினார்களா?

இது எதனையும் செய்துகொள்ளாமல், மீண்டும் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களை உணர்வு ரீதியாக கட்டுப்படுத்தி வைக்கமுடியும் என நம்புகின்ற அரசியல் இல்லாமலாக்கப்படல் வேண்டும்.

இந்த முஸ்லிம் சமூகம் ஒரு விடயத்தினை புரிந்து கொண்டுள்ளது என்பதனை என்.எம். அமீன் போன்றவர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அழுத்கம வன்முறைகளுக்கு பின்னாலிருந்த அத்தனை சக்திகளும் இப்போதுள்ள ஆட்சியில் இருக்கின்றது என்பதுவே அது.  . அதற்காகவே அங்குள்ள உள்ளுராட்சி மன்றங்களை பொது ஜன பெரமுன கட்சியும், அதுசார் குழுக்களும் கைப்பற்றியது. அவ்வாறு அந்த மக்கள் மஹிந்த ராஜபக்ஷதான் இதன் சூத்திரதாரி என நம்பியிருந்தால் அவருடைய கட்சியைiயும், குழுக்களையும்  தோற்கடித்திருக்கவேண்டும். அது அங்கு நடைபெறவில்லை என்பது மிகப்பெரும் சாட்சியாகும் என்பது பட்டவர்தனமான உண்மை.
எனவே, இவ்வாறு தங்களுக்குள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முஸ்லிம்கள் மீதி திணித்து, உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுத்துகின்ற நிலை மாறவேண்டும். புத்திஜீவிகள் என்கின்றவர்கள் இந்த சமூகத்தை அறிஞர் ரீ.பி. ஜாயா சொன்ன 'எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் இடக்கூடாது' என்கிற விடயத்தை வைத்து  வழிப்படுத்த வேண்டும். இல்லையேல் வரவிருக்கின்ற அரசியல் மாற்றங்கள் எமது மக்களுக்கு எந்த விமோசனத்தையும் தரப்போவதில்லை.


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network