காத்தான்குடியில் வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்!காத்தான்குடி பொலிஸ் பிரிவில்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுப்பட்டியலில் உள்ள வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது இன்று அதிகாலை பெற்ரோல் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள புதிய காத்தான்குடி 3, தக்வா நகர் வட்டார வேட்பாளர் அப்துல் மஜீத் முஹம்மது பர்ஸாத் என்பவரது வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அதிகாலை 2.45 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் வீட்டிலிருந்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையாயினும் வீட்டுக்கு சிறிது சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...