Feb 5, 2018

ஒரு கட்சி சார்ந்து அரச வேலைத்திட்டங்களை ஒரு பொதும் செய்யமாட்டேன்வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி இன்று (5) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற இப்பிரச்சார கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், சிறிடெலோ கட்சியின் செயலளார் ப. உதயராசா, உட்பட வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி.. வன்னி மாவட்டத்தில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அத்துடன் வன்னியில் பாடசாலைகள், கிராமங்கள், மற்றும் வன்னியின் அபிவிருத்திகளை பார்வையிட கடந்த காலங்களில் வவுனியாவிற்கு வந்துள்ளேன். கட்சி பார்த்து அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 2015 ஆண்டு என்னை ஜனாதிபதியாக்கியமைக்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அரசாங்கத்தினூடாக அபிவிருத்திகளை செய்யும் போது ஒரு கட்சி சார்ந்து வேலைத்திட்டங்களை நான் ஒரு பொதும் செய்யமாட்டேன் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன், சிங்களம் ,தமிழ், முஸ்லிம் என பிரித்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது பிழையான முறையாகும். வவுனியாவில் மாத்திரமல்ல வடபிராந்திய அபிவிருத்தி வேலைகளுக்கு ஜனாதிபதி தலைமையில் ஒரு செயலணியை உருவாக்கியுள்ளேன். அதில் அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். மக்களுக்கு சேவையாற்றுவதற்கு கட்சி ரீதியாக பிரிந்திருப்பது நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. உங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். அவர்கள் மூலமாக உங்களுக்கு சேவை செய்ய இலகுவாக இருக்கும். எங்களுக்கு வாக்களிக்கா விட்டாலும் வீடு, கிணறு மற்றும் பாதைகள் செய்து கொடுப்போம். நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது எனக்கு அன்ன சின்னத்தில் வாக்களித்திருந்தீர்கள் ஆகவே மதம் கட்சி இனபேதம் பார்க்காமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். கடந்த காலத்தில் ஒரு கட்சியை சேர்ந்தவர்களுக்கு சேவையாற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலில் உங்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட நான் வன்னிப்பகுதிக்கு வருவேன். நான் ஜனாதிபதியானதன் பின் கடந்த மூன்று வருட காலமாக நிம்மதியாக நீங்கள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். முன்னைய ஆட்சியில் வடக்கில் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் பலர் காணாமல் போயிருந்தார்கள். பலர் வெள்ளை வானில் முன்னைய அரசாங்கத்தால் கடத்தி செல்லப்பட்டிருந்தார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாது. யுத்தத்திற்கு பிறகு கூட அதே விதத்தில் அவர்களை கொன்று குவித்திருந்தார்கள். யுத்தம் முடிந்த பின்னரும் கொலைகள் கடத்தல்கள் ஏன் நடந்தது என நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். பத்திரிகையாளர்கள் தெருவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்கள், பத்திரிகை அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக அவ்வாறான சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை எனவே எனக்கு வாக்களித்த மக்கள் பெருமைப்பட வேண்டும். எமது நாட்டை அபிவிருத்தி செய்ய உலக நாடுகளிடம் உதவிகளை பெற்று வருகிறேன். எனவே நீங்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும், சில பிரதேசங்களில் நாங்கள் கை சின்னத்தில் போட்டியிடுகிறோம், மலையகத்தில் சேவல் சின்னத்திலும் கிழக்கிலங்கையில் குதிரை சின்னத்திலும் போட்டியிடுகிறோம். பல சின்னங்களில் கூட்டமைப்பாக செயல்படுகிறோம். எனவே இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்வதற்கு கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் ராஜபக்ச ஆட்சி காலத்தில் நாட்டு மக்களின் சொத்துக்கள் எவ்வாறு களவாடப்பட்டது என உங்களுக்கு தெரியும். எனவே கள்வர்களை பாதுகாப்பதற்காக அவர்கள் அமைத்துள்ள கட்சிதான் புதிய கட்சி, அதற்கான சாட்சிகள் உள்ளது. உங்களுக்கு தெரியும் நான் இரண்டு ஆணைக்குழுக்களை உருவாக்கி அதன் அறிக்கைகள் வந்துள்ளது. ராஜபக்ச அரசாங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அதிலே பல குற்றங்கள் இருக்கிறது. மத்திய வங்கியில் 2008 தொடக்கம் 2016 வரை ஊழல் நடந்திருப்பதாக அந்த ஆணைக்குழு எங்களுக்கு தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சிகாலத்தில் தவறு செய்தவர்களுக்கும் எனது ஆட்சிகாலத்தில் தவறு செய்தவர்களுக்கும் ஒரு போதும் மன்னிப்பு கொடுக்கப்பட போவதில்லை. சட்டத்தின் முன் அவர்கள் அனைவருக்கும் நாங்கள் தண்டனை வழங்குவோம். விமான சேவைகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாக்கள் களவாடப்பட்டுள்ளது. அதனை கண்டுபிடிப்பதற்கும் கடந்த வாரம் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளேன். இந்த நாட்டிலே தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள். ஜனாதிபதியாக நான் காணும் கனவு ஒன்று இருக்கிறது. இந்த நாட்டு மக்கள் தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற பேதமில்லாமல் ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே எனது கனவு, அந்த கனவை நனவாக்குவதற்கு நீங்களும் நாங்களும் ஒன்று சேர்ந்து கொள்வோம். கட்சி, ரீதியாக மத ரீதியாக, இன ரீதியாக இல்லாமல் இலங்கையர் என்ற ரீதியில் நாங்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இந்த நாட்டில் வறுமை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ஆட்சிக்கு வருகின்ற அரசியல்வாதிகள் உங்கள் சொத்தை களவாடுகின்றார்கள் அதுதான் இந்த வறுமைக்கு காரணம். லஞ்சம் பெறுகின்ற இந்த மோசமான அரசியல் வாதிகளை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் அப்போதுதான் இந்த நாட்டிலே வறுமை இல்லாமல் போகும். களவெடுக்காத நல்ல அரசியல் வாதிகளை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு நல்ல நாட்டை கட்டியெழுப்ப முடியும் நாங்கள் பிரிந்திருந்து ஒன்றும் செய்ய முடியாது ஆகவே நாங்கள் ஒன்றுபடவேண்டும். நான் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் எனது பெற்றோர் விவசாயக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் உங்கள் கஷ்டம் எனக்கு தெரியும் ஆகவே எமது வாக்காளரை வெற்றிபெறச் செய்யுங்கள் என தெரிவித்தார்‌.

சிலோன் முஸ்லிம் நிருபர்
வாஜித்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network