Feb 7, 2018

உங்கள் சிந்தனைக்கு!


வன்னி மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை ஒருசில நூறு வாக்குகளினால் இழந்தமைக்கு, நமது சமூகம் பல கட்சிகளுக்குப் பிரிந்து வாக்களித்ததே காரணம் எனவும், அதே தவறை இம்முறை செய்து மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை வீணாக்கிவிட வேண்டாமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு பிரதேச சபைத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று மாலை (06) அடம்பனில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

கடந்த தேர்தலில் உள்ளூராட்சி சபைகளை வேறு கட்சிகளுக்கு கையளித்ததனால், நமது பிரதேசம் எந்தவிதமான அபிவிருத்தியையும் அடையவில்லை என நீங்கள் உணர்வீர்கள். வாக்குகளைச் சேகரிப்பதற்காக அப்போது வந்தவர்கள், மீண்டும் இந்தத் தேர்தலில் தலைகாட்டி இருக்கின்றனர். யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் பாதை இருக்கவில்லை. குளங்கள் இருக்கவில்லை. மின்சாரமும் இருக்கவில்லை. மொத்தத்திலே வாழ்வதற்கான எந்தவிதமான வசதிகளும் இல்லாத நிலையில், பூச்சியத்திலிருந்தே நாம் அபிவிருத்தியைத் தொடங்கினோம். 

மத்திய அரசின் உதவியுடனும், மக்களின் ஒத்துழைப்புடனும் இதனைச் செய்ய முடிந்தது. யுத்த அழிவைக் கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்து கொண்டிருக்கையிலேதான் மாகாண சபைத் தேர்தல் நடந்தது. வடமாகாணத்தில் உள்ள சுமார் 80 சதவீதத்துக்கு மேலானவர்கள், மாகாண ஆட்சியை தமிழ்க் கூட்டமைப்பினரிடம் கையளித்தனர். எமது திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டன. அபிவிருத்திச் செயற்பாடுகளில் தலையீடு மேற்கொள்ளப்பட்டதனால் அவை முடக்கப்பட்டன. எங்களை எதுவும் செய்யவிடாது தடுத்தவர்கள், தாங்களாவது செய்துள்ளார்களா? என்ற கேள்வியை நீங்கள் கேட்டுப்பாருங்கள். அதேபோன்று, வடமாகாணத்தில் ஓரிரண்டு உள்ளூராட்சி சபைகளைத் தவிர அத்தனையையும் கைப்பற்றியவர்கள், மக்கள் நலனுக்காக என்ன செய்திருக்கின்றார்கள்? 

தேர்தலுக்காக மட்டுமே அரசியல் செய்யும் ஒரு கூட்டம், மக்கள் உணர்வுகளைத் தட்டியெழுப்பி வாக்குகளைப் பிரித்ததனால், எமது கட்சிக்குக் பல உள்ளூராட்சி சபைகளில் கிடைக்க வேண்டிய அதிகாரங்களையும் இழக்க நேரிட்டது. வன்னி மாவட்டத்திலே தாங்களும் அரசியல் செய்வதாக, வெளியுலகுக்குக் காட்டுவதற்காகவும், தமது கட்சியின் பிடி வன்னியில் இருப்பதாக கூறுவதற்காகவுமே, ஓரிரு பிரதிநிதிகளையாவது பெற்றுக்கொள்ள இவர்கள் நினைக்கின்றனர்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3900 வாக்குகளையும், மக்கள் காங்கிரஸ் 3600 வாக்குகளையும், முஸ்லிம் காங்கிரஸ் 1800 வாக்குகளையும் பெற்றது. ஆக 300 வாக்குகளினால் அதிகாரத்தை இழந்தோம். இவற்றை உங்கள் சிந்தனைக்கு விடுகின்றேன்.

அவ்வாறான செயற்பாட்டை இம்முறைத் தேர்தலிலும் இவர்கள் செய்கின்றனர். எனினும், கடந்த உள்ளூராட்சித் தேர்தலை விட இம்முறை கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் பணியை செய்ய முடியாதவர்கள், இதுவரை செய்யாதவர்கள் இவ்வாறு போட்டியிட்டு வாக்குகளைப் பிரிப்பதன் மூலம், சமூகத்துக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின்றனர். 

அதன்மூலம், இன்னும் நான்கு வருடங்களுக்கு அபிவிருத்திச் செயற்பாடுகள் பின்தள்ளியே போகும் என்பதை உணர்ந்து, எங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகின்றேன் என்றார்.

-ஊடகப்பிரிவு-SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network