புதிய உள்ளூராட்சி மன்றங்களின் அமர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முதல் அமர்வு, எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம்  திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்  கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

   இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “முன்னதாக, புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முதலாவது அமர்வு, பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என வர்த்தமானி  அறிவித்தல் மூலம்  வெளியிடப்பட்டிருந்தது. 

   எனினும், முதல் அமர்வு மார்ச் மாதம் 2 ஆம் திகதியே நடைபெறும். இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும். கடந்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களினதும் உறுப்பினர்களின் பட்டியலைத் தயார் செய்வதற்கு நீண்ட கால அவகாசம் தேவை.

   நேரடியாக வட்டார ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் ஏற்கனவே தெரியவந்துள்ளது. ஆனால், விகிதாசார முறையில் கிடைத்துள்ள ஆசனங்களுக்கான தமது பிரதி நிதிகளின் பட்டியலை,  அரசியல் கட்சிகள் முன்மொழிய வேண்டும்.

   இதனைக்  கட்சிகளின் பொதுச் செயலாளர்கள்தான் மேற்கொள்ள  வேண்டும். அதற்கு,  குறிப்பிட்ட கால அவகாசம் தேவை. இதனால், முதல் அமர்வை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி  நடத்துவதற்குப் பதிலாக, மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

   இதேவேளை,  உள்ளூராட்சி மன்றங்களின் அமர்வுகளை நடத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள்,  ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )