Feb 28, 2018

அம்பாறை பௌத்த விகாராதிபதியிடம் அமைச்சர் ரிஷாட் எடுத்துரைப்பு!
இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினை தோற்றுவித்து அதன் மூலம் மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்கு இட்டுச் செல்லும் பணியில் ஒரு சிலர் ஈடுபடுவது நாட்டுக்கு ஆபத்தானதாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அம்பாறையில் தெரிவித்தார்.

அம்பாறை பிரதான பௌத்த விகாரையின் விகாராதிபதி சீலரத்ன ஹிமியினை அம்பாறை அரசாங்க அதிபர் பணி மனையில் வைத்து சந்தித்து தற்போதைய நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறியதாவது,

அம்பாறை மாவட்ட வரலாற்றில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டுள்ளமை கவலை தருகின்றது.சிறுபான்மை சமூகமாக வாழும் எந்த வொரு சமூகத்தின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் பொறுப்பு பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தது,இந்த சம்பவத்தின் போது அது மீறப்பட்டுவிட்டதாக கருத நேரிட்டுள்ளது.

கடந்த 70 வருட இலங்கையின் சுதந்திரத்தின் பிற்பாடு 3 தசாப்தங்கள் இந்த நாடு எதிர் கொண்ட யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளிலிருந்து இன்று, மீண்டெழுவதற்கு முயற்சிக்கின்ற போது முஸ்லிம்களின் சொத்துக்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதுடன், மதத் தலங்கள் மிகவும் மோசமாக அடித்து நொருக்கப்பட்டும், எரியூட்டப்படுகின்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் இடம் பெறுகின்றன.மதங்கள் மனிதர்களை புனிதத்துவமும்,பண்புள்ளங் கொண்டவர்களையும் உருவாக்கும் உயரிய கலாசாலையாகும்.

இதன் மீது எந்தவொரு மதத்தினரும் அச்ச உணர்வற்ற நிலையில் தாக்குதலை நடத்தமாட்டார்கள் என்பது எனது கருத்தாகும்.இந்த நிலையில் அம்பாறை மாவட்ட மக்களை அச்ச நிலைக்குள் ஆழ்த்தியிருக்கும் மேற்படி சம்பவத்தின் பின்னணி தொடர்பில் அறிந்து கொள்ள தவறுவோமெனில் இதன் பின்னணியில் உள்ள சக்திகளை வெளிப்படுத்த முடியாது போகும் நிலை ஏற்படுவதுடன், நாடு மீண்டும் ஆபத்தானதாக மாற நேரிடும் என்பதாகும்.

இந்த நிலையில் இன ஒற்றுமையினை பற்றி பேசுவதன் மூலம்,அதனை நடை முறையில் கொண்டு வர தவறி விட்டோமா என கேட்கின்றேன்.சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த அம்பாறையில் முஸ்லிம்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள அச்ச நிலையினை சுமூக நிலைக்கு கொண்டுவர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்தோடு சட்டம் குற்றவாளிகளை அடையாளப்படுத்துவதன் மூலம்,எவரும் சட்டத்தை தான் தோன்றித்தனமாக தமது கைகளில் எடுக்க மாட்டார்கள்.தவறும் பட்சத்தில் இவ்வாறான சம்பவத்தில் ஈடுபடும் சக்திகள் தொடர்ந்தும் மக்களை அச்சத்தில் ஆழ்த்துவார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.இந்த நிலையினை வளர விடாமல் தடுப்பது சட்டத்தை பின்பற்றும் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

அதே வேளை இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிடப்பட்ட முறையில் சதிகளை ஆரம்பித்துள்ளார்களா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது என்றும் அமைச்சர் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலி, முன்னாள் ராஜாங்க அமைச்சரும், ஜக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான ஹஸனலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நௌசாத்,காரியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.மஜீத்,அமைச்சரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர்.ஏ.ஆர்.எம்.ஜிப்ரி,அம்பாறை ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர்.ஏ.எல்.ஹாரூன்,அம்பாறை அரசாங்க அதிபர் துசித குமார.அம்பாறை பிரதி பொலீஸ் மா அதிபர் நுவான் வெதஆராச்சி உட்பட பலரும் கலந்து கொண்டனர்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network