சட்டத்தை கையில் எடுத்தவர்களை தண்டிக்கும் திராணி இவ்வரசுக்குள்ளதா..?



அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் திராணி இவ்வரசுக்குள்ளதா என  பானதுறை முன்னாள் பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நேற்று முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவம் ஒன்று அம்பாறை நகரில் பதிவாகியுள்ளது. இது இனங்களுக்கிடையிலான பிரச்சினை என்பதை விட, அரசியல் காய் நகர்த்தலின் ஒரு அங்கம் எனலாம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய காலத்தில் அளுத்கமை சம்பவம் ஒன்றே முஸ்லிம்களுக்கு எதிரான நடைபெற்றிருந்தது. இந்த நல்லாட்சி அரசில் பல அளுத்கமை போன்ற சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன. முஸ்லிம்களின் ஆதரவு என்னவோ இவ்வரசுக்குத் தான் உள்ளது.

நேற்று அம்பாறையில் இடம்பெற்ற சம்பவம் நன்கு திட்டமிடப்பட்டது. அக் கடைக்கு அருகாமையில் காவல் நிலையம் அமையப்பெற்றிருந்த போதும் அவர்கள் அதனை பாதுகாக்க முடியவில்லை. இதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை குற்றம் சுமத்த சிலர் வருவார்கள்.  இன்றும் காவல் நிலையங்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்குள்ளதா? இது போன்று தான், கிந்தோட்டை கலவரத்தின் போதும் பாதுகாப்பு படை அதிகாரிகள் இனவாதிகளுக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இடம்பெற்றிருந்த கிந்தோட்டை கலவரம் உட்பட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு  நீதியை நிலை நாட்டியிருந்தால், இவ்வாறான சம்பவங்களை செய்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இதுவரை இந்த அரசு எடுத்த உருப்படியான ஒரு நடவடிக்கையையாவது குறிப்பிட முடியுமா? இவ்வாறான நிகழ்வுகளில் போது, இனவாத வன்முறைகளை கையில் எடுத்தவர்களை விட்டு விட்டு, முக நூலில் பதிவிட்ட ஒரு முஸ்லிம் வாலிபரே தண்டிக்கப்பட்டுள்ளார். இதுவே இவ்வரசு நீதியை நிலை நாட்டும் விதமாகும்.

என்னை பொறுத்தமட்டில் அளுத்கமை சம்பவத்துக்கு கூட, நீதியை நிலை நாட்டும் கடமை இவ்வரசுக்குத் தான் உள்ளது. அது இடம்பெற்று முடிந்த சில மாதங்களிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருந்தது. இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும், எந்தவிதமான தயவுக்களுமின்றி கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தல் வேண்டும் என குறிப்பிட்டார்.
சட்டத்தை கையில் எடுத்தவர்களை தண்டிக்கும் திராணி இவ்வரசுக்குள்ளதா..? சட்டத்தை கையில் எடுத்தவர்களை தண்டிக்கும் திராணி இவ்வரசுக்குள்ளதா..? Reviewed by NEWS on February 28, 2018 Rating: 5