Feb 26, 2018

அக்கரைப்பற்றில் தே.கா வெற்றிபெறவில்லை, வீழ்ச்சியை சரி செய்து கொண்டிருக்கின்றது


இன்றுள்ளவர்கள் பலர் வெளித்தோற்றங்களையும், வாய் வழிப் பேச்சுக்களையும் மனதில் பதித்து நடை பயில்பவர்கள். நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து,  அக்கரைப்பற்றில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வும், காத்தாங்குடியில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் பாரிய வெற்றியை சுவைத்துவிட்டதான விம்பம் நிலவுகிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சபைகளில், இவ்விரு சபைகளுமே தனித்து ஆட்சியமைக்கக் கூடிய நிலை இருப்பது, இதற்கான பிரதான காரணமாக சுட்டிக்காட்டலாம். இதில் அக்கரைப்பற்றில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் வெற்றி பெற்றாரா? என்பதை உட்புகுந்து ஆராய்வதே இப் பகுதியின் நோக்கமாகும்.

ஒருவர் செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை, அவருக்கு வழங்கிய சொத்து அவரது ஊரில் உள்ள அனைவரையும் விட, யாருமே அருகில் நெருங்க முடியாதளவு அதிகமானதாகும். காலம் செல்லச் செல்ல சொத்தின் அளவு பெரிய வீதத்தினால் குறைந்து கொண்டே வருகிறது. குறைந்து வரும் நிலையில், அவரது சொத்து ஊரில் உள்ள அனைவரையும் விட அதிகமானதாக இருந்தாலும், இவர் தனது நிலையை தக்க வைப்பதில் வெற்றிகண்டவரக குறிப்பிட முடியாது. இப்படித் தான் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் வெற்றியையும் நாம் நோக்க வேண்டும். அமைச்சர் அதாவுல்லாஹ் எதிர்கொண்ட பொதுத் தேர்தல்களில், அவர் பெற்றுக்கொண்ட வாக்குகளை எடுத்து நோக்கினால், அவைகள் பெரும் வீதத்தினால் குறைந்து கொண்டு வருவதை அவதானிக்கலாம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் படு தோல்வியை சந்தித்திருந்தார். நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்தவிதமான அதிகாரமுமின்றி, அவர் அக்கரைப்பற்றின் ஆட்சியை தன் வசப்படுத்தியுள்ளார். இவர் அக்கரைப்பற்றின் ஆட்சியை தன் வசப்படுத்தியிருந்தாலும், முன்னர் போன்று இலகுவாக ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை என்றே கூற வேண்டும். 2011ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில், அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் தனித்து களமிறங்கியிருந்த தே.கா 77.15வீத வாக்குகளை பெற்றிருந்தது. இம்முறை 64.40வீத வாக்குகளையே பெற்றுள்ளது. 12.50 வீத சரிவு. அது போன்று, 2011ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் தனித்து களமிறங்கியிருந்த தே.கா 72.82 வாக்குகளையும், இம்முறை 61.99 வீத வாக்குகளையும் பெற்றுள்ளது. இது 10.83வீத சரிவாகும். இங்குள்ள வாக்குச் சரிவு பெரும் வீதமாகும். அது மாத்திரமல்ல, அவர் ஐம்பது சதவீதத்தை நெருங்கி கொண்டிருகின்றார். இதுவெல்லாம் அதாவுல்லாஹ்வின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கு ஆரோக்கியமானதல்ல.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், அக்கரைப்பற்றில் தனது பாராளுமன்ற வாக்குச் சரிவை ஓரளவு நிவர்த்தி செய்துள்ள போதும், அவரால் முழுமையாக நிவர்த்தி செய்ய முடியவில்லை. இதுவே அக்கரைப்பற்றில் உள்ள அவரது பெரும் செல்வாக்காக நோக்க முடியும். எதிர்காலத்தில், இதனை விட அவரது செல்வாக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு. அது மாத்திரமன்றி அக்கரைப்பற்று மாநகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்புமனு நிராகரிகப்பட்டிருந்தது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், இன்னும் ஒரு சிறிய சரிவை தே.கா சந்தித்திருக்கும். அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 16.06வீத வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் அதாவுல்லாஹ் தனது ஊரான அக்கரைப்பற்றிலேயே இந்தளவு சரிவை எதிர்கொண்டால், அனைத்து இடங்களிலும் பரவலான ஆதரவு தேவைப்பட்ட  எதிர்கால தேர்தல்களில், அவர் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டி வரும். அதாவுல்லாஹ்வின் பலமே அக்கரைப்பற்று வாக்கு வங்கியேயாகும். வெற்றி என்பது அனைவரையும் விட அதிக வாக்கு பெறுவதல்ல. தனது பழைய நிலையை பாதுகாத்து, முன்னேறிச் செல்வதேயாகும். இத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் வெற்றிபெறவில்லை. மாறாக தனது வீழ்ச்சியை சரி செய்து கொண்டிருக்கின்றார்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network