ஆப்பிழுத்த குரங்காட்டம் விலங்கிடப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்!
இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலையில் உள்ளது. இதன் காரணமாக சிறு கட்சிகளுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. தற்போது, இவ்வரசு அப்படியே தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்ற போதும், இவ்வாறான பிரச்சினைகள் அடிக்கடி எழக்கூடிய சாத்தியமுள்ளது.

இவ்வாறான இக்கட்டான சூழ் நிலைகளில், எமது முஸ்லிம் அரசியல் வாதிகள், யார் பக்கம் தாவுவார்கள் என்பது மிகப் பெரும் கேள்வியாகவும் உள்ளது. யாரும், எந்த முடிவை எடுக்கவும் வாய்ப்புள்ளது. அது பற்றி விரிவாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஏனையோர்களை விட, இவ்வாறான சந்தர்ப்பங்களில் அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் றிஷாத், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் எவ்வாறான முடிவுகளை எடுப்பார்கள் என்பது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும். இப்போதைய அரசியல் மாற்றத்தில், எந்தவித பாராளுமன்ற அதிகாரமுமில்லாத தே.காவின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் நேரடி தாக்கம் செலுத்தாது போனாலும், எதிர்காலத்தில் அவரது அரசியல் செயற்பாடுகள் மறைமுக மற்றும் நேரடி தாக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை எடுத்துக்கொண்டால், அவர் சு.கவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர். இலங்கை முஸ்லிம்களே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து நின்ற வேளை, அவரோடு கை கோர்த்து செயற்பட்டவர். சுதந்திர கட்சி தனி அரசை நிறுவ முயலுமாக இருந்தால், அவரின் முதற் தெரிவு சு.கவாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. சு.க தனித்து ஆட்சியை அமைக்குமாக இருந்தால், முஸ்லிம் அரசியல் வாதிகளில் அதிகம் மகிழ்சியடையக் கூடிய ஒருவராகவும் இவரை நோக்கலாம். இதன் மூலம், அவரால் புதிய மற்றும் பழைய ஜனாதிபதிகளை ஒரே நேரத்தில் திருப்தி செய்துகொள்ள முடியும்.

தேசிய கட்சிகள் தனித்து ஆட்சியமைக்க முயலுகையில், இவரின் முதற் தெரிவாக சு.க இருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் தனித்து ஆட்சியமைக்க கூடிய சாதகமான நிலை இருந்தால், அவர் அதன் பக்கம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் கட்சிகளின் பின்னால் இருப்பதை விட, ஆட்சியாளர்களுடனும் அதிகாரங்களுடனும் இருக்கும் தன்மை கொண்டவர்.

 அவரின் இந்த தன்மை தான், காத்தான்குடியை அபிவிருத்தி மழையில் நனையச் செய்துள்ளது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். அவர் அவ்வாறு ஐ.தே.கவின் பக்கம் செல்லும் பட்சத்தில், அவர் இம் முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலை காத்தான்குடியில் சு.காவில் எதிர்கொண்டிருப்பதால், அவரது உள்ளூராட்சி மன்ற உறுப்புருமைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

இன்றைய இலங்கை அரசியல் பயணித்து கொண்டிருக்கும் பாதையை அவதானிக்கையில், இலங்கை மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை நம்பிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும்.

 அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பக்கம் வழி எடுக்கவே முயல்வார்கள். எதிர்காலத்தில் சு.கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் கூட முரண்பாடுகள் தோன்றலாம். சு.காவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றுமாக இருந்தால், அதில் அதிக பலம் கொண்ட அணியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அணியை எவ்வித சந்தேகமுமின்று குறிப்பிடலாம்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பக்கம் செல்ல விரும்பினாலும், அவரது காத்தான்குடி உள்ளூராட்சி மன்ற உறுப்புருமைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதாவது, அவர் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலை சு.காவில் எதிர்கொண்டுள்ளதன் மூலம், அக் கட்சியிலிருந்து விலக முடியாதவாறு விலங்கிடப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பற்றி கூறிய பல விடயங்கள், முன்னாள் அமைச்சரும் தே.காவின் தலைவருமான அதாவுல்லாஹ்வுக்கும் நன்கு பொருந்தும். அதில் முரண்பாட்டு விடயங்களாக சிலவற்றை குறிப்பிடலாம். தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற சூழ் நிலையில் அதாவுல்லாஹ்வின் ஒரே தெரிவாக சு.கவை உறுதிபட கூற முடியும்.

ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைத்தாலும், அவர் அக் கட்சியுடன் இணைந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் அரிது. இன்று பலமிக்க ராஜாவாக திகழும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை எதிர்பார்த்து, எதிரணி செயற்பாடுகளை முன்னெடுப்பார். ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டால், அவரது செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என கூற முடியாது. பலராலும் செயலால் நிரூபிக்கப்பட்டுள்ள, அரசியலில் நிரந்தர பகைவனுமில்லை, நண்பனுமில்லை என்ற தத்துவத்தை இவ்விடத்தில் நினைவூட்டுவதும் பொருத்தமானது.

அதற்கு அதாவுல்லாஹ் மாத்திரம் விதிவிலக்காகவா இருந்துவிடப் போகிறார்? அதாவுல்லாஹ்வுக்கு ஏனையவர்களைப் போன்று தான் விரும்பிய கட்சிக்கு செல்வதில் எந்த வித இடர்பாடுகளுமில்லை. இம்முறை அவர் அனைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும், தனது குதிரைச் சின்னத்தில் எதிர்கொண்டுள்ளதால், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

ஒரு வகையில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் செயற்பாட்டை, நுட்பமான ஒரு அரசியல்  நகர்வாகவும் நோக்க முடியும். அவர் நினைத்திருந்தால் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சு.கவை பொறுப்பெடுத்து பிரச்சாரம் செய்திருக்க முடியும் ( இது பற்றிய விரிவான கட்டுரைகளை எதிர் வரும் கட்டுரைகளில் எதிர்பார்க்கலாம் ).

இம் முறை சு.கவை பொறுப்பெடுத்திருந்தால், பெரும் பேரம் பேசும் சக்தியை பெற்றிருப்பார். அவ்வாறு செய்யாது, தனது சின்னத்திலேயே அனைத்து இடங்களிலும் களமிறங்கியமை இவ்வாறான சிந்தனைகளையும், வேறு சில சிந்தனைகளையும் அடிப்படையாக கொண்டதாகவே இருக்க வேண்டும்.

இங்கு தான் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தவறிழைத்து கொண்டார் எனலாம். உண்மையில் காத்தாங்குடியில் சு.க பெற்றுக்கொண்ட வாக்குகள் முழுமையாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சொந்தமானவை. அவர்  ஒரு சுயேட்சையிலோ அல்லது ஒரு தனி கட்சியிலோ இத் தேர்தலை எதிர்கொண்டிருந்தால், இந்த சிக்கல் நிலையை தவிர்த்திருக்கலாம். இங்கு தான் ஒரு கட்சியின் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உணர்கிறார்.

ஒருவர் ஒரு கட்சியுடன் நெருக்கமாக உள்ள போது, சுயேட்சையில் களமிறங்குவது, அக் கட்சி மீதான குறித்த நபரின் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தும். தனக்கென்று ஒரு கட்சி இருந்தால், எனது ஊரில், எனது கட்சியில் கேட்கப்போகிறேன் என நேர்படையாக சொல்ல முடியும். இருந்தாலும், இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் முழுமையான பற்றை வெளிப்படுத்த முடியாது போயிருக்கும். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், தான் ஆதரவளிக்கும் கட்சித் தலைவருக்கு முழுமையான ஆதரவை அளிக்கும் பாணியில் செயற்படுவது யாவரும் அறிந்த விடயமே!

தற்போது அமைச்சர் றிஷாத் நல்லாட்சி அரசின் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களில் உள்ளார். இம் முறை ஐக்கிய தேசிய கட்சி, வழமையாக முழு இலங்கையிலும், தனக்கு ஆதரவளித்துவந்த மு.காவை புறந்தள்ளி, புதிதாக அவர்களுடன் கை கோர்த்துள்ள இவரிடம், பல முஸ்லிம் பிரதேசங்களை ஒப்படைத்திருந்தது. இந்த விடயம், ஐக்கிய தேசிய கட்சியானது அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வழங்கும் முக்கியத்துவத்தையும், இவ்விரு கட்சிகளும் பலமானதொரு பிணைப்பை கொண்டிருப்பதையும் அறிந்துகொள்ளச் செய்கிறது.

இருந்தாலும், அமைச்சர் றிஷாத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில், அவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர். அவர் செய்திருந்த சேவைகளையும், அவ்வளவு இலகுவில் மறந்துவிடவும் மாட்டார். தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீதான அச்சம் முஸ்லிம்களை விட்டகன்றுள்ளது. எனவே, அமைச்சர் றிஷாத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியமைத்தால், எந்தவிதமான மன தர்மசங்கடங்களுமின்றி இணைந்துகொள்வார். அவருக்கு இரு பக்கமும் ஒன்று தான். இருந்தாலும், இரு கட்சிகளும் நேரடி மோதல்களில் ஈடுபட்டால், அது அமைச்சர் றிஷாதுக்கு மிகவும் தர்மசங்கடமான நிலையாக அமையும்.

அமைச்சர் ஹக்கீமை பொறுத்தமட்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசுடன், அன்று தொடக்கம் இன்று வரை பின்னிப் பிணைந்துள்ள ஒருவர். அவர் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைப்பதையே அதிகம் விரும்புவார். இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினரோ அல்லது சு.கவினரோ ஆட்சியமைத்தால், அவர்களுடன் நிச்சயம் இணைந்துகொள்வார். அண்மையில் மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், தனது முக நூலில், அமைச்சர் ஹக்கீம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை அ.இ.ம.கா மற்றும் மு.கா ஆகியன பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கும் பட்சத்தில், தங்களது பல உள்ளூராட்சி மன்ற உறுப்புருமைகளை பாதுகாக்க முடியாமல் போய் விடும். இது எதிர்காலத்தில், இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை விட்டும் பிரிந்து செல்லாமல் தடுக்கும் பெருங் காரணியாக திகழும்.

இவர்கள் தங்களுக்கென்று ஒரு கட்சியை வைத்திருந்தும், அதனை சரியான நேரத்தில் பயன்பட தவறிவிட்டார்கள் எனலாம். நடந்து முடிந்த தேர்தலை முஸ்லிம் கட்சிகள் தனித்து எதிர்கொண்டிருக்க வேண்டும். அதுவே சாதூரியமான முடிவாக அமைந்திருக்கும். இதன் காரணமாக, இவர்கள் இதன் மூலம் பெறத்தக்க பேரம் பேசும் சக்தியை குறைந்துக்கொண்டுள்ளனர் என்பதுவே கவலையான விடயமாகும்.

அமைச்சர் ஹக்கீம் கூறியது போன்று, அவர்கள் யானையை மரத்தில் கட்டிப் போட ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ளவில்லை. மாறாக, யானை மரத்தையும் மயிலையும் தனது பிடிக்குள் இருக்கிக் கொண்டுள்ளது. இதனை ஒரு சிறந்த படிப்பினையாக கொண்டு, மிக விரைவில் வரலாமென எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தல்களில், முஸ்லிம் கட்சிகள் தனித்து களமிறங்கும் முடிவை எடுப்பதே பொருத்தமானது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...