நித்திரை செய்பவரை பிரதமராக்காதீர்கள் - ஜனாதிபதிக்கு கடிதம்
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவை, பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதை நினைவுபடுத்தியுள்ள இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம், அவரை பிரதமராக நியமிக்க வேண்டாம் எனக் கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.  

அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, 

“தன்னுடைய அமைச்சுக்குரிய மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல், போகிற இடங்களிலெல்லாம் மக்கள் முன்பாக நித்திரை கொள்வதுடன், தன்னுடைய சொந்த வாழ்க்கை தொடர்பில், சமூகத்தில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவை, அடுத்த பிரதமராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த 12ஆம் திகதி, எம்மால் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“மேலும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, எமது சங்கத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை இல்லாதொழிக்கக் கொண்டுவரப்பட்ட 25,000 ரூபாய் அபராதத் தொகை குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவே வற்புறுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என, மோட்டார் சைக்கிள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

“இவ்வாறு மக்களுக்கு எதிராகவும் நல்லாட்சியை அழிப்பதற்கும்  தகுதியற்ற அமைச்சரைப் பிரதமராக்கும் யோசனையை முன்வைக்கவோ அல்லது நியமிப்பதுக்கோ, அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரமையாளர் சங்கத்தின் மத்திய குழு உள்ளிட்ட சகல குழுக்களும் இதன் மூலம் எதிர்ப்பை வெளியிடும்” என்று, அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...