Feb 6, 2018

வன்னி பணத்தினால் மூதூர் மக்களின் மானத்தை வாங்கமுடியாது!வன்னியிலிருந்து பணத்தை கொண்டுவந்து, பொருட்களை கொடுத்து மூதூர் மக்களின் மானத்தை விலைக்கு வாங்க முடியாது என்பதை மாற்றுக்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். கட்சியின் கோட்டைகள் எதிலுமே ஓட்டைகள் விழாதபடி, கட்சியை பாதுகாப்பதற்கு போராளிகள் என்றும் தயார்நிலையில்தான் இருக்கின்றார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மூதூர் பிரதேச சபைக்காக மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மூதூர் அரபுக் கலாசாலைக்கு முன்னால் நேற்றிரவு (05) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

மூதூர் மண்ணில் ஏராளமான அனர்த்தங்களையும், இழப்புகளையும் நாங்கள் சந்தித்திருக்கின்றோம். போராளிகள் பல தியாகங்களை இந்தக் கட்சிக்காக செய்திருக்கிறார்கள். அப்படியான மண்ணில், மக்கள் மத்தியில் எங்களது கருத்துகளை சொல்வதை தடுப்பதற்காக, வன்னியிலிருந்து பணத்தை வாரியிறைத்து, மக்களை விலைக்கு வாங்கமுடியாது என்பதை மாற்றுக் கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் பாட்டுப் போடுவார்கள். தயவுசெய்து நீங்கள் அதைக் கேட்கவேண்டாம். அதைக் கேட்டால் நீங்கள் அவர்களுக்கே வாக்களித்துவிடுவீர்கள் என்று வன்னி அமைச்சர் இங்கு புலம்பித் திரிகின்றார். வன்னியிலிருந்து பணத்தை வாரியிறைத்து, எங்களது கட்சிக்குப் பயந்து, இப்படி புலம்பித் திரிகின்ற அவரது அரசியல் நிலவரம் குறித்து நாங்கள் உண்மையில் வருத்தப்படுகிறோம்.

ஏனைய கட்சிகள் செய்வதுபோல மற்ற கட்சிகளை தூற்றி அரசியல் செய்யவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. வன்முறைக்கு ஏவாத இயக்கமாகவே முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியலை கண்ணியமாக செய்துகொண்டு வருகிறது. மூதூர் பிரதேச சபையின் ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு மக்கள் வழங்கும் ஆணையை யாராலும் தோற்கடிக்க முடியாது. 

மூதூர் மண்ணில் முஸ்லிம் காங்கிரஸ் பல வகையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. ஆனால், மாற்றுக் கட்சியின் இங்கு வந்து என்ன அபிவிருத்திகளை செய்திருக்கிறார் என்று நாங்கள் கேட்கிறோம். வரலாறு காணாத அபிவிருத்தியை இந்த மண்ணுக்கு கொண்டுவருவதற்கு தகுதியுள்ள கட்சியாக, மூதூர் பிரதேச சபையின் ஆட்சியை திறம்பட செய்கின்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸை தவிர வேறெந்த கட்சிகளும் இருக்கமுடியாது.

மூதூர் வைத்தியசாலையில் யாருமே செய்யாத அபிவிருத்திகளை நாங்கள் செய்திருக்கிறோம். இந்த வைத்தியசாலை விவகாரத்தில் போராட்டங்கள் நடந்தபோது, நான் அங்கு வந்து சில வாக்குறுதிகளை கொடுத்தேன். அதன்பிரகாரம் இந்த தள வைத்தியசாலையை ஏ தரமுள்ள ஒரு வைத்தியசாலையாக மாற்றிக்கொடுத்துள்ளோம். எங்களுடைய அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி அமைச்சர் மூலம் இதனை தரமுயர்த்திக் கொடுத்தோம்.

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் எதைப் பேசினாரோ, எதைப் பின்பற்றினாரோ அதன் பின்னணியில்தான் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. எமது கொள்கையில் எவ்வித பிசகுகளும் இல்லாமல் நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கிறோம். கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் இப்போது அவற்றை பிழைகாண்கின்றனர். அவர்களுக்கு பதவிகள் இல்லையென்றபோது, முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை பிழைகாண்கின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவிலில் ஒரு தாருஸ்ஸலாம் அமைக்கவுள்ளோம். அதேபோல, திருகோணமலை மாவட்டத்தில் மூதூரில் ஒரு தாருஸ்ஸலாம் அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். கட்சிக்கு நெருக்கமாக இருக்கின்ற மூதூரில் அமைக்கப்படும், தாருஸ்ஸலாமில் இருந்துதான் திருகோணமலைக்கான அனைத்து கட்சி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதிர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஜே.எம். லாஹிர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network