கம்பஹா மாவட்டத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு!அண்மைய காலங்களில் நிகழ்ந்த மனிதப் படு கொலைகள், பாரிய கொள்ளைகள் மற்றும் பிரதானமான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பெரும்பாலான சம்பவங்கள், கம்பஹா மாவட்டத்திலேயே இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாக, கம்பஹா மாவட்ட பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, மீரிகம, உடுகம்பொல மற்றும் கிரியுல்ல ஆகிய பிரதேசங்களில், மண் அகழ்வு நடவடிக்கைகள் சட்டவிரோதமான முறையில்  பாரியளவில் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக பாதாளக் கோஷ்டிகளுக்கு இடையில் கைகலப்புக்களும் மோதல்களும்  அதிகரித்துள்ளன. இவ்வாறான மோதல் சம்பவங்களினால், இதுவரையில் 40 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

   இதேவேளை, கொச்சிக்கடை, நீர்கொழும்பு, கட்டுநாயக்க, ஜா -எல, மஹபாகே, வத்தளை, பேலியகொடை மற்றும் களனி ஆகிய பிரதேசங்களில் கப்பம் (பணம்) பெறுதல் உள்ளிட்ட ஹெரோயின் மற்றும் கஞ்சா விநியோகிப்பு நடவடிக்கைகள் பரவலாக சூட்சுமமான முறையில் இடம்பெற்று வருகிறது.

   பாதாளக் கோஷ்டிகள், பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவி, போதைப் பொருள் வியாபாரத்தைத் தொடர்ந்தும் நடத்தி வரும் நிலையில், இது தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, கலால் போதைப் பொருள் பொலிஸ் பிரிவு ஆகியன இணைந்து திடீர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வந்தாலும் கூட, கம்பஹா மாவட்டத்தில் பாதாளக் கோஷ்டியின் போதைப் பொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )