நான் பதவி விலகப்போவதில்லை! பிரதமர் அறிவிப்பு!பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலக வேண்டும், ஜனாதிபதி இவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்ற கருத்துக்கள் தென்னிலங்கையில் பலமாக எழுந்தன.

புதிய பிரதமராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க வேண்டும் என்ற தகவல்களும் அப்பப்போது வெளிவந்துகொண்டு இருந்தன. பிரதமர், ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, கட்சி உறுப்பினர்கள் என அடுத்தடுத்து இடம்பெற்ற விசேட கூட்டங்களால் கொழும்பு அரசியல் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

இவ்வாறான இக்கட்டான நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பை அலரி மாளிகையில் நடத்திவருகின்றார்.

இதில் கருத்து தெரிவித்த பிரதமர்,

“2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும், நான் பதவிவிலகப் போவதில்லை. அப்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

19ஆவது திருத்தச்சட்டத்தின் படி பிரதமரை பதவி விலக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. அவ்வாறு பதவி விலக்க வேண்டுமானால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்தால் அதற்கு முகம்கொடுக்கவும் தயாராக இருக்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டை எனக்கு தெரிவித்துள்ளனர். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் கூறியுள்ளோம். ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியினரும் சந்திக்க உள்ளதாக கூறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கடந்த செவ்வாய் கிழமை என்னுடன் தொலைபேசியில் பேசினார், நான் பதவி விலக போவதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறித்து கேட்டார். நான் அப்படி எதுவும் இல்லை, பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று கூறினேன்.

அதேவேளை கடந்த காலத்தில் நடந்த குற்றச் செயல்கள் சம்பந்தமான விசாரணைகளில் தலையீடுகளை செய்வதில்லை. நான் அறிந்த வரையில் ஜனாதிபதியும் விசாரணைகளில் தலையிடவில்லை.அத்துடன் அமைச்சரவை மாற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்” என குறிப்பிட்டார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...