ஹிஸ்புல்லா ஒரு வெற்றுப் பாத்திரம். சத்தம் வரும் உள்ளே எதுவுமில்லை - ஹக்கீம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

ஹிஸ்புல்லா ஒரு வெற்றுப் பாத்திரம். சத்தம் வரும் உள்ளே எதுவுமில்லை - ஹக்கீம்

Share This


தற்காலிக வட, கிழக்கு இணைப்பின்போது முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமை சாசனத்தின் எதிரொலியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வட, கிழக்கு இணைப்பை ஆதரித்து முஸ்லிம்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஹிஸ்புல்லா புலம்பித் திரிகின்றார். ஹிஸ்புல்லா ஒரு வெற்றுப் பாத்திரம். வெற்றுப் பாத்திலிருந்து அதிக சத்தம் வரும். ஆனால், உள்ளே எதுவும் இருக்காது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபைக்காக தராசு சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (31) காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதுபோல, ஹிஸ்புல்லா ஒவ்வொரு தேர்தலிலும் இப்படியாகத்தான் குற்றம்சாட்டி வருகிறார். தனிமனிதன் ஒருவர், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கும் மற்றவர்களை குறைகூறுவதற்கு ஊழல் மாநாடு நடத்துகிறார் என்றால், அவர் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று பாருங்கள். 

காத்தான்குடியிலுள்ள ஹிஸ்புல்லா குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவது போல இருந்துகொண்டு, முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை விமர்சித்துக்கொண்டிருக்கிறார். நாடு முழுவதும் ஓடியோடி பிரசாரம் செய்கின்ற நான் இதுகுறித்து அலட்டிக்கொள்ளவில்லை. ஒரு ஊருக்குள் மாத்திரம் பிரசாரம் செய்பவர் எப்படி செல்வாக்குடன் இருக்கவேண்டும். ஆனால், எங்களை விமர்சித்து அரசியல் செய்யவேண்டும் என்ற அவரது நிலைமை பரிதாபத்துக்குரியது. 

1948ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த்தரப்பு சமஸ்டி பற்றி பேசுகிறது, வட–கிழக்கு இணைப்பு தொடர்பாக பேசுகிறது. சுதந்திரம் கிடைத்ததலிருந்து 70 வருடங்களாக தமிழ் மக்கள் இந்த வட–கிழக்கு இணைப்பு குறித்து பேசிவருகின்றனர். இந்த இணைப்பு குறித்து பேசுவதற்கு தந்தை செல்வா முதலில் மட்டக்களப்புக்குத்தான் வந்தார்.

தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பம் ஆகியோரின் நினைவுக்கூட்டங்களில் நான் பல தடவைகள் அவர்கள் குறித்து பேசியிருக்கிறேன். தமிழ் மக்கள் அவர்களுடைய கூட்டங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை அழைக்கின்றனர். காரணம், நான் அவர்களது போராட்டங்களை கொச்சைப்படுத்தாமல் சில விடயங்களை நேரடியாக பேசிவருகிறேன். இதையெல்லாம் கிழக்கு மக்களுக்காகத்தான் பேசிவருகிறேன். நான் வட, கிழக்குக்கு வெளியே பிறந்திருந்தாலும், கிழக்கு மக்களை  ஒருபோதும் வம்பில் மாட்டிவிட மாட்டேன். 

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை என்றவகையில், இந்த மண்ணில் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே தேவையில்லாத குரோதங்களை என்னால் வளர்க்கமுடியாது. முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் ஒரு மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கிறது. ஆனால், இதற்கு மாற்றமாக செயற்படுகின்ற பித்தலாட்டக்கார அரசியல்வாதிகள் தற்போது பிரிந்திருக்கின்ற வடக்கையும் கிழக்கையும் இணைக்கப்போவதாக பூதாகரமான செய்திகளை பரப்பிவருகின்றனர். சும்மா இருக்கின்ற மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி அதில் குளிர்காய முயற்சிக்கின்றனர்.

இடைநடுவில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்த காலத்தில், ஜே.ஆர். ஜயவர்தனவும் இந்திய அரசாங்கமும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக வடக்கும், கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. இந்த இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்போது முஸ்லிம்களுக்கு எதிராக எழுதப்பட்ட அடிமை சாசனத்துக்கு போர்க்கொடி தூக்கித்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த இயக்கத்தை ஆரம்பித்தோம்.

முஸ்லிம்களின் அனுமதியில்லால் வட–கிழக்கை இணைத்ததுதான் அடிமை சாசனம் என்று நாங்கள் முழங்கினோம். இப்போது முஸ்லிம்களின் அனுமதியில்லாமல் வட, கிழக்கை இணைக்கமாட்டோம் என்று சம்பந்தன் ஐயா சொல்கிறார். முஸ்லிம்களின் அனுமதியில்லாமல் இணைக்க முடியாது என்பதற்காதத்தான் அப்படி சொல்கிறார். இந்த விடயத்தில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம் இருக்கிறது என்று தெரியவில்லை.

அரசியல் யாப்பு தெரியாதவர்போல, சும்மா இருக்கும் வட–கிழக்கை முஸ்லிம் காங்கிரஸ் இணைந்துக் கொடுக்கப்போவதாக மக்களை உசுப்பேற்றுகிறார். ஜனாதிபதியை அழைத்துவந்து காத்தான்குடியில் கூட்டம் நடத்தியிருக்கிறார். எல்லா கட்சிகளிலும் சேர்ந்த ஹிஸ்புல்லா இப்போது ஜனாதிபதியிடம் சரணைந்திருக்கிறார். வெற்றுப் பாத்திரமான அவரைப் பற்றி ஜனாதிபதி வாய்திறக்கவில்லை. வெற்றுப் பாத்திலிருந்து அதிக சத்தம் வரும். ஆனால், உள்ளே ஒன்றும் இருக்காது. 

அரசியல் பிழைப்புக்காக அதாஉல்லாவும், ஹிஸ்புல்லாவும், றிஷாத் பதியுதீனும் வட–கிழக்கு இணைப்பு பற்றித்தான் பேசுகிறார்கள். முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதற்கு எதுவுமில்லாத காரணத்தினால், இந்த விடயத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு வியாபாரம் செய்கின்றனர். 

வட–கிழக்கு இணைப்பில் முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரிய அநியாயம் நடந்தபோதும், சர்ஜன வாக்கெடுப்பு சம்பந்தமாக பேசப்பட்டது. ஆனால், தமிழர்களின் ஆசைக்கு ஒரேயடியாக குறுக்கே நிற்கக்கூடாது என்பதற்காக மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்றார். இந்த இணைப்பை முஸ்லிம்கள்தான் தடுத்தார்கள் என்று காட்டிவிடக்கூடாது என்றுதான் அஷ்ரஃப் பயந்தார்.

ஒரு பேனையால் இடப்பட்ட ஜே.ஆர். ஜயவர்தனவின் கையொப்பத்தை மறு பேனையால் அழித்துவிடலாம் என்று அஷ்ரஃப் சொன்னார். இதையே உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் சில்வா கண்டுபிடித்தார். ஜே.ஆர். ஜயவர்தன சரியான முறையில் கையொப்பமிடவில்லை. பாராளுமன்றத்தில் உரிய முறையில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வட–கிழக்கு தற்காலிக இணைப்பு பிரிக்கப்பட்டது. ஜே.வி.பி. முறைப்பாடு செய்து பிரித்த இணைப்புக்கு அதாஉல்லா சம்பந்தம் கொண்டாடுகிறார். 

தெற்கு ஆசியாவிலுள்ள சனச்செறிவுள்ள கிராமமான காத்தான்குடியில், நிலத்தடி நீர் மாசடைவதை தடுப்பதற்காக கழிவுநீர் தொகுதி அமப்பதற்கு 1990ஆம் ஆண்டிலேயே அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது. எனது அமைச்சின் கீழ் கழிவுநீர் திட்டம் வருகின்ற காரணத்தினால் அதனை நான் செய்துகொடுப்பதற்கு தீர்மானித்தேன்.

இத்திட்டத்தை செய்வதற்கு முன்வந்த சீனாவின் ஹுனான் எக்ஸிம் வங்கியின் வட்டிவீதம் அதிகமாக இருந்தது. இந்த கழிவுநீர் திட்டத்தினூடாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு எவ்வித வருமானம் கிடையாது. ஆகவே, இந்தக் கடனை திறைசேரியே வட்டியுடன் திருப்பிச் செலுத்தவேண்டும். ஹுனான் எக்ஸிம் வங்கியின் வட்டிவீதம் அதிகம் என்பதை காரணம்காட்டி திறைசேரி இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

வாழைச்சேனை – ஓட்டமாவடி நீர் வழங்கல் திட்டம், ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டம், காத்தான்குடி கழிவுநீர் திட்டம் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் நான் நான்கு தடவைகள் சீனாவுக்கு சென்றிருக்கிறேன். சீன வங்கிகள் இதற்கு கடன் வழங்க தீர்மானித்திருந்தாலும் அவற்றின் வட்டி வீதங்கள் அதிகமாக இருந்தன. இவற்றை பேசுவதற்காகவே நாங்கள் சென்றோம்.

வெளிநாடுகளை கடன்களை பெறுவது நாங்களல்ல. அதனை ற்கான செயற்படுத்துவதை மாத்திரமே எனது அமைச்சின் ஊடாக செய்கிறோம். கடனைப் பெறுவதற்கு திறைசேரியும் பிரதமரின் கீழுள்ள வெளிநாட்டு வளத் திணைக்களமும் அனுமதி வழங்கவேண்டும். இதற்காக பிரதமர்தான் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும். இந்நிலையில், நான்தான் சொல்லித்தான் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாக ஹிஸ்புல்லாவின் பொய் சொல்லிக்கொண்டு திரிகின்றார்.

சீனா – இலங்கை அரசாங்க மட்டத்தில், எனது அமைச்சுடன் சம்பந்தப்பட்ட கழிவுநீர் திட்டத்தை நான் சொல்லித்தான் செய்வித்தேன் என்பது மிகவும் ஹிஸ்புல்லாவின் கீழ்த்தரமான அரசியல் பிரசாரமாகும். பிழைப்பு அரசியலுக்கான என்னை விற்று அரசியல் செய்துகொண்டிருக்கின்ற இவரது நிலைமை பரிதாபத்துக்குரியது என்றார்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE