எனது நண்பர் சுபையிர் நல்ல மனிதர் அவரை வெற்றி பெறச் செய்யுங்கள் : ஜனாதிபதி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

எனது நண்பர் சுபையிர் நல்ல மனிதர் அவரை வெற்றி பெறச் செய்யுங்கள் : ஜனாதிபதி

Share This(றியாஸ் ஆதம்)

முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபையிர் ஒரு நல்ல மனிதர் அவரை இத்தேர்தலில்வெற்றி பெறச்செய்யுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏறாவூர் மக்களிடத்தில் வேண்டிக்கொண்டார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  (3.01.2018) ஏறாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

இன்று இந்த நேரத்தில் ஒரு கூட்டம் நடாத்துவதற்கு எனக்கு நோக்கம் இருக்கவில்லை. நான் அம்பாறை மாவட்டத்தில் பல கூட்டங்களில் கலந்துகொண்டு வருகின்ற வேளையில் என்னுடைய பழைய நண்பா் சுபையிர் சொன்னாா் போகின்ற வழியில் ஏறாவூர் வந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

நான் சுகாதார அமைச்சராக இருந்த போது சுபையிர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்தார். எனவே நான் அவருக்கு உதவ வேண்டும்.  நான் அதிகாரத்தை பரவலாக்குவது சம்மந்தமாக சுகாதார அமைச்சராக இருந்த போது மாகாண சுகாதார அமைச்சருக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்திருக்கின்றேன்.

பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல் நடைபெறப்போகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். அதேபோன்று உங்களுக்கு  கைச்சின்னமும் நன்றாகத் தெரியும். எனவே உங்களுடைய பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்கின்ற சின்னம் மாத்திரமல்ல அந்த கைச்சின்னம். எனக்காகத்தான் உங்களுக்கு அந்த சின்னத்தை அளித்திருக்கின்றேன். நீங்கள் இந்த சுபையிரைப் போன்று பலரை தெரிவு செய்து அனுப்பினால், அவா்கள் உங்கள் பிரதிநிதிகள் மாத்திரமல்ல எனது பிரதிநிதிகளும்தான்.

அவ்வாறு நீங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகளுக்கு சகல வசதி, வாய்ப்புக்களையும் நான் வழங்குவேன். அவர்கள் கட்சியின் பிரதிநிதிகளல்ல ஜனாதிபதியின் பிரதிநிதிகள். அந்த அதிகாரம் வேறு யாருக்கும் கிடைக்காது. எனவே எதிர்வரும் 10ஆம் திகதி கைச்சின்னத்திற்கு வாக்களித்து உங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்யுங்கள்.

நாங்கள் இந்தத் தேர்தலிலே சில இடங்களில் கைச்சின்னத்திலே போட்டியிடுகின்றோம். சில இடங்களில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். இன்னும் சில இடங்களில் குதிரைச்சின்னத்திலும், மலையகத்தில் தொண்டமானோடு இனைந்துகொண்டு சேவல் சின்னத்திலே போட்டியிடுகின்றோம். அது எங்களுடைய ஒரு கூட்டு முன்னனி எனவே நீங்கள் என்மீது நம்பிக்கை வையுங்கள்.

இந்த கிராமங்களிலே பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகிறது. குறிப்பாக இங்கு காணிப் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, பாதை தொடர்பில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. கிராமங்களில் இன்னும் பல வேலைகள் செய்ய இருக்கின்றன. எதிர்வரும் 10ஆம் திகதி கிராமத்தையும், என்னையும் ஒருங்கிணைக்கின்ற பாரியதொரு பொறுப்பிருக்கிறது. அந்தப்பாலம் தான் நீங்கள் வாக்களித்து தெரிவு செய்கின்ற உங்களது பிரதிநிதிகள்.

ஆனால் நீங்கள் தெரிவு செய்கின்ற பிரதிநிதிகள் தவறான வேலைகளைச் செய்வதற்கு நான் இடம்கொடுக்க மாட்டேன்.  இஸ்லாமிய மத்திய கிழக்கு நாடுகள் எந்தளவிற்கு முன்னேற்றமடைந்துள்ளது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். சரியான தண்டனை கொடுக்கின்ற காரணத்தினால் தான் அந்த நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன.

எங்களுடைய நாட்டிலே எல்லா அரசாங்க காலங்களிலும், களவு எடுத்தார்கள். ஆனால் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. தண்டனை வழங்கவும் முடியாது ஏனென்றால் பெரியவரே களவு எடுத்தார். அதுதான் நடந்தது. நான் யாரும் களவெடுப்பதற்கு இடமளிக்கமாட்டேன். சரியான தண்டனை வழங்குவேன். நாம் நல்லதொரு நாட்டை கட்டியெழுப்புவோம். இந்த நாட்டை முன்னேற்றுவோம்.

பெப்ரவரி 10ஆம் திகதி முழு நாட்டிலும் நாங்கள் வெற்றிபெறுவோம். அதற்காக எல்லோரும் ஒன்றுபட வேண்டும். உங்களுடைய வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள். கைச்சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கௌரவத்தோடு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். சுபையிர் ஒரு நல்ல மனிதர் அவரை இத்தேர்தலில் வெற்றி பெறச்செய்யுங்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE