கம்பஹா குடிநீர் விநியோகத்திட்டங்களில் 897 கோடி ரூபா மோசடி!( ஐ. ஏ. காதிர் கான் )

மினுவாங்கொடை, அத்தனகல்ல, கம்பஹா ஆகிய பிரதேசங்களுக்கு குடி நீர் விநியோகிப்பதற்காக, சீன உதவித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வரும் நீர் விநியோகிப்புத் திட்ட நடவடிக்கைகளில் பாரிய நிதி மோசடிகள்  இடம்பெற்று வருவதாகத் தெரிய வருகிறது. இந்நிலையில், இத்திட்ட அமுலாக்கத்தை உடனடியாக நிறுத்தி முழு அளவிலான விசாரணைகளை  துரிதமாக நடத்துமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நிதி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

   குறித்த நீர் விநியோகத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட தொகைக்கு மேலதிகமாக, 57.5 மில்லியன் டொலர் (897 கோடி ரூபா) நிதி செலவழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிதியை சீன இயந்திரவியல் பொறியியலாளர் நிறுவனத்திற்கு வழங்கப்படுவதனை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அவசரக் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

   இந்த நீர் விநியோகத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட தொகை 172 மில்லியன் அமெரிக்க டொலர் (2683 கோடி ரூபா) வாகும். எனினும், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போது, இது 229.5 மில்லியன் அமெரிக்க டொலர் (3580 கோடி ரூபா) வாக இருப்பதாகவும், இந்தத் தொகை நூற்றுக்கு 34.8 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி, நிதி அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
 
மினுவாங்கொடை, அத்தனகல்ல, கம்பஹா ஆகிய பிரதேசங்களில் அமுல்படுத்தப்படும் இந்த நீர் விநியோகத்திட்டம் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், இந்த நடவடிக்கைத் திட்டங்களை மேற்கொள்ள குறித்த சீன நிறுவனத்திற்கு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
   குறித்த நீர் விநியோகத்திட்டங்களுக்கு செலவாகும் முழுத்தொகை, 35.8 பில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பஹா குடிநீர் விநியோகத்திட்டங்களில் 897 கோடி ரூபா மோசடி! கம்பஹா குடிநீர் விநியோகத்திட்டங்களில் 897 கோடி ரூபா மோசடி! Reviewed by NEWS on March 27, 2018 Rating: 5