தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 8, 2018

இனவாத தாக்குதல்களை உடன்கட்டுப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது


நாட்டின் கண்டி மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத தாக்குதல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
இதேவேளை, இனவாத தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் சொத்து இழப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், சுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் தன்னால் முடியுமான சகல நடவடிக்கைகளையும் அந்த மக்களுக்காக மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார். 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 
நேற்று புதன்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தோம். இதில் பாதுகாப்பு படையின் பிரதிநிதிகள், சர்வமத மதகுருமார், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 
இதன்போது பல தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன், நிலைமையினை கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது என்றும், அவசரமாக மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு  கடமையில் ஈடுபடுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 
அத்துடன், பௌத்த மதகுருமார்களும், இஸ்லாமிய மதகுருமார்களும் நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், அரசியல் தலைமைகள் தங்களது பேச்சுக்களை பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. 
பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு என மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான இராணுவு அதிகாரி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு தேவையான ஆலோசனைகளும் - வழிகாட்டல்களும் - பணிப்புரைகளும் வழங்கப்பட்டன. அத்துடன், கடற்படைத் தளபதிக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டு அவர் தலைமையில் மூன்று விசேட குழுக்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 
ஆகவே, நாங்கள் மிகவும் பொறுமையோடு – நிதானமாக செயற்பட வேண்டும். அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனைகளில் அதிகம் ஈடுபட வேண்டும். கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் இழப்புக்கள் சம்பந்தமாகவும் அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவது சம்பந்தமாகவும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். சுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் என்னால் முடிந்தளவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.
திகன தாக்குதலில் சஹீதாக்கப்பட்ட அப்துல் பாஸித்திற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் பிரார்த்திக்கின்றேன். பாஸித்தின் இழப்பால் கவலையுற்றுள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். – என்றார். 

Post Top Ad

Your Ad Spot

Pages