தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 27, 2018

சாய்ந்தமருது போராட்டம் தடம் புரள்கிறதா?இலங்கை நாட்டு முஸ்லிம்களுக்கே முன் மாதிரியை காட்டும் வகையிலான ஒரு போராட்டம் சாய்ந்தமருது மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இப் போராட்டத்தை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல் நிர்வாகத்தினர் முன் நின்று வழி நடாத்தியிருந்தனர். இவர்கள் தங்களது பலத்தின் உச்சத்தை, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் வெளிக்காட்டி இருந்தனர்.

அவர்களின் பலமே, அவர்களது பலவீனத்துக்கு அடிப்படையாக அமையப்போகிறதென, யாருமே சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம்பெற்ற, சாய்ந்தமருது சுயேட்சை குழுவின் சத்திய பிரமான நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் கலந்து கொண்டிருந்தார். இது சாய்ந்தமருது போராட்டத்தை ஆதரித்த உள், வெளி ஆதரவாளர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மர காங்கிரசினர் சாய்ந்தமருது போராட்டத்துக்கு மயில் சாயம் பூசிக்கொண்டிருந்த நிலையில், அவர்களோ குதிரைச் சவாரி செய்யப்போவதாக வெளிப்படுத்தியுள்ளனர். இரு விதங்களில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் சத்திய பிரமானத்துக்கான வருகை நியாயப்படுத்துவதை அறிந்துகொள்ள முடிகிறது. முதலாவது, அவர் கிழக்கு மாகாண ஆளுநரை சத்திய பிரமான நிகழ்வுக்கு அழைத்து வர உதவினார்.

இதனோடு, அவர் தொடர்புபட்டதன் காரணமாக, கிழக்கு மாகாண ஆளுநர், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வையும் அழைத்து வந்தார் என்பதாகும். இரண்டாவது, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் சாய்ந்தமருதுக்கு ஒரு தனி சபையை பெற்றுத்தர வாக்குறுதியளித்தே வந்தார் என்பதாகும். இவை இரண்டுக்கும் அப்பால், சில இடங்களில் மாகாண சபை உறுப்புருமையை பெற்றுக்கொள்ளும் காய் நகர்த்தலுக்கான அடிப்படை என்ற கதைகளும் உலாவுகின்றன.

கிழக்கு மாகாண ஆளுநர் முன்னணியில் தான், சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமுமில்லை. சத்தியப்பிரமாணம் செய்ய சாதாரண ஒரு சமாதான நீதவானே போதுமாகும். அப்படித் தான், செய்ய வேண்டுமாக இருந்தால், அதற்கு முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் காலை பிடித்தே செல்ல வேண்டிய அவசியமில்லை.

இன்று சாய்ந்தமருது மக்கள், சாய்ந்தமருது சுயேட்சை குழுவுக்கு தேர்தல் மூலம் வழங்கியுள்ள அங்கீகாரமானது ஆளுனரை சாய்ந்தமருதுக்கு ஓடி வரச் செய்ய போதுமானதாகும். இதற்கு அதாவுல்லாஹ்வை விடுத்து அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை பாவித்திருந்தால் கூட, இத்தனை விமர்சனம் எழுந்திருக்காது. எனவே, அதாவுல்லாஹ்வை வருகையை நியாயப்படுத்த முன் வைக்கப்படும் முதலாவது நியாயம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.

இவ்விடத்தில், சாய்ந்தமருது சுயேட்சை குழுவினர் சத்திய பிரமாணம் செய்ய ஆளுநர் பொருத்தமானவரா என்பதும் ஆராய வேண்டிய ஒரு பகுதியாகும். சாய்ந்தமருது மக்களின் போராட்டமே, தங்களை கவனத்தில் கொள்ளாத, உயர் அதிகாரத்தில் உள்ளவர்களை நோக்கியதே. இப்படி சத்தியப்பிரமாணம் செய்ய ஆளுநர் போன்றோரின் காலில் விழுவது, அவர்களது போராட்ட கொள்கைக்கு முற்றிலும் முரணானது.

இரண்டாவது நியாயம், சாய்ந்தமருதுக்கான தனியான சபை வாக்குறுதியாகும். யார் இந்த அதாவுல்லாஹ்? அவருக்கு இன்றுள்ள அரசியல் அதிகாரம் தான் என்ன? குறித்த உள்ளூராட்சி அமைச்சையே தன்னிடம் வைத்திருந்த போது செய்து கொடுக்காதவர், எந்த வித அரசியல் அங்கீகாரமும் இன்றி, அரசியல் அநாதையாக நிற்கும் தற்போதைய நிலையில், இதனை செய்து கொடுப்பார் என நம்புவதைப் போன்ற மடமை வேறு எதுவும் இருக்காது.

சாய்ந்தமருதின் முதற் துரோகி, அதனை செய்து கொடுக்கத்தக்கதான அதிகாரத்தை தன்னிடம் வைத்திருந்தும், செய்து கொடுக்காத அதாவுல்லாஹ்வே! இப்போதும் அவர் எங்கும் வெளிப்படையாக, இவ் வாக்குறுதியை வழங்கவில்லை. ஒரு சிலரே இச் செயலை நியாயப்படுத்த கூறித் திரிகின்றனர். இதற்கு முன்னர், அவர் வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் அலைந்து கொண்டிருக்கின்றன. வாக்குறுதி தான், வேண்டும் என்றால் அமைச்சர்களான ஹக்கீமிடமும் றிஷாதிடமும் கேட்டிருக்கலாம். வகை வகையாக அள்ளி வீசியிருப்பார்கள். இதன் போது முன் வைக்கப்படும்  இரண்டாவது நியாயமும் ஏற்க முடியாததாகும்.

நான் பெற்றுக்கொண்ட ஒரு சில தகவல்களின் படி, எதிர்வரும் மாகாண சபை தேர்தலை முன்னிறுத்திய காய் நகர்த்தல்களின் அடித்தளமே இது என கூறப்படுகிறது. மாகாண சபை உறுப்புருமை தான், சாய்ந்தமருது மக்களின் பிரச்சினை என்றால், இன்று சாய்ந்தமருது மக்கள் ஒரு அணியில் திரண்டு நிற்பதன் காரணமாக, அவ் உறுப்புருமையை உறுதி செய்து, வாக்குகளை அள்ளிச் செல்ல, எத்தனையோ கழுகுகள் வரும். அதாவுல்லாஹ்வை விட அம்பாறை மாவட்டத்தில் பலம் பொருந்திய நிலையில் அ.இ.ம.கா மற்றும் மு.கா ஆகிய கட்சிகள் உள்ளன. அவற்றிடம் சென்றால், உறுப்புருமையை இன்னும் பலமாக உறுதி செய்து கொள்ளலாம். மாகாண சபை உறுப்புருமையை நோக்கிய காய் நகர்த்தல் என்றாலும், அதற்கு அதாவுல்லாஹ் பொருத்தமானவரல்ல.

இதன் மூலம் சாய்ந்தமருது மக்களின் போராட்டம் சற்று தடம் புரண்டுள்ளது. சாய்ந்தமருது மக்கள் பலரும்  அதிருப்தியுற்றுள்ளதை வெளிப்படையாக அறிந்து கொள்ள முடிகிறது. இதுவரையில், தங்களது செயற்பாட்டை நியாயப்படுத்தும் வகையிலான எந்த அறிக்கைகளையும் சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகத்தினர் வெளியிடாமையே, அவர்களது குற்றத்தை அறிந்து கொள்ளச் செய்கிறது. இவர்களின் போராட்டத்தில் புகுந்து விளையாட, சிறு துவாரமாவது கிடைக்குமா என எதிர்பார்த்த அரசியல் வாதிகளுக்கு, இது பாரிய வழியை வழங்கியுள்ளது.

இன்னும் சொல்லப் போனால், இவர்களின் இச் செயலானது, இப் போராட்டத்தை பின் நோக்கி நகர்த்தியுள்ளது. இந் நிலையில், இப் போராட்டம் மலினப்படுத்தப்ப்படுமாக இருந்தால், அதனை மீள கொண்டுவருவது மிகக் கடினமாக அமையும். எனவே, சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகத்தினர் மீண்டும் தங்களது போராட்டத்தின் திசையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

துறையூர் ஏ,கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Post Top Ad

Your Ad Spot

Pages