Mar 26, 2018

கண்டி வன்முறை நடக்குமென புலனாய்வு துறைக்கு தெரியாதா?
கண்டிய அனர்த்தம் நாட்டின் மற்றுமொரு கறை படிந்த அத்தியாயமாக பதிவு செய்யப்பட்டு விட்டது. இலங்கையின் பேரினவாதம் நாட்டிலுள்ள இரண்டு சிறுபான்மைகள் மீதும் தனது அத்துமீறலை வெளிக்காட்டி விட்டது. சுற்றுலா நகரமான கண்டியில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டது என்பதில் ஐயமில்லை.

கண்டிய அனர்த்தங்கள் லொறிச் சாரதியின் மரணத்துடன் சம்பந்தப்பட்ட உடனடி நிகழ்வல்ல. இது ஒரு திட்டமிடப்பட்ட இன வன்முறை என்பது தாக்குதல்களின் வடிவத்தைப் பார்க்கும் யாருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வகையில் இவ்வளவு கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட ஒரு நெடுந் தாக்குதலை கீர்த்தி மிகு இலங்கையின் புலனாய்வுத் துறை முன்கூட்டியே அறிந்து கொள்ளவில்லை என்பதை நம்புவதற்கு மக்கள் கஷ்டப்படுகின்றனர்.

தாக்குதல்களின் பின்னர் பலதடவைகள் ஊரடங்கு உத்தரங்கு பிறப்பிக்கப்பட்ட பொழுதெல்லாம் கூட தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு படையாகத் திரண்டு வந்து தாக்குதல் நடத்திய கும்பலை ஒரு ட்ரோன் கமெரா மூலம் கண்காணித்து, ஊர்வலமாக வந்ததையும் தாக்குதல் நடத்தியதையும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நமது புலனாய்வுத் துறை பலவீனமானது என்பதை மக்களால் நம்ப முடியவில்லை.

தாக்குதல் நடத்துவதற்கான அழைப்பு, ஒழுங்குபடுத்தல்கள் எல்லாமே சமூக ஊடகங்கள் மூலமாகவே நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு அசாதாரண சூழலில் சமூக ஊடகங்களைக் கண்காணித்து, தாக்குதல் ஒன்றுக்கான திட்டமிடல் நடைபெறுவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக் கூடிய தொழில்நுட்பம் இலங்கையில் இருக்கவில்லை என்பதும் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

குறித்த சிங்கள இளைஞனின் மரணச் சடங்கில், அந்த இளைஞனுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத, வெறுப்புப் பேச்சு மற்றும் நடவடிக்கைகளுக்குப் பேர்போன ஞானசார தேரரும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதியும் வந்து விட்டுப் போகும் போதே, மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படலாமோ என்ற முன்னெச்சரிக்கை உணர்வு பிரதேசத்திலுள்ள சாதாரண முஸ்லிம் பொதுமகனிடமும் எழுந்திருக்கிறது. அளுத்கம தாக்குதல் தொடர்பில் நன்கறிந்து வைத்திருந்த புலனாய்வுப் பிரிவுக்கு இந்தச் சந்தேகம் வரவில்லை என்றால், புலனாய்வுப் பிரிவினரின் தரத்தில் மக்கள் நம்பிக்கை வைப்பது தப்பென்றாகிறது.

இதேவேளை, யுத்த காலத்தில் உளவுப் பிரிவு முஸ்லிம் அதிகாரிகளினாலேயே எனவும், முஸ்லிம் சமூகம் எப்போதுமே எம்முடன் இருந்து எம்மைப் பாதுகாத்துள்ளது எனவும் இராணுவத் தளபதி விஜே குணவர்தன சிலாகித்துப் பேசியுள்ளார். தமது உயிரையும் துச்சமாக மதித்தே முஸ்லிம் அதிகாரிகள் யுத்த களத்துக்குச் சென்று தகவல் திரட்டினர். வடக்கில் வாழ்ந்த முழு முஸ்லிம் சமூகத்தினதும் இருப்பை முஸ்லிம்கள் இதற்கு விலையாகக் கொடுத்தனர். இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் மீதான சிங்கள இனவாதிகளின் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டு பிடித்து, நாட்டைப் பாதுகாத்த முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பதற்கு இலங்கையின் புலனாய்வுத் துறை முன்வராதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. உதட்டளவிலான பாராட்டுகளை விடுத்து உண்மையான நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி விட்ட கதையாகவே இது அமைகிறது.

எனவே, காய்தல் உவத்தல் இன்றி இந்தப் பாரிய சதிக்குப் பொறுப்பான சூத்திரதாரிகளை கண்டு பிடித்து வெளிப்படுத்தி, புலனாய்வுப் பிரிவு தனது தரத்தையும் முஸ்லிம்கள் மீதான நன்றியுணர்வையும் வெளிப்படுத்த வேண்டும்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post