நாட்டின் இனவாத செயற்பாடுகள் குறித்த நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய விசேட உரை
“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்பு நாட்டில் இனங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸ் திணைக்களத்திலுள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்க வேண்டும்”  என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று நாடர்ளுமன்றத்தில் தெரிவித்தார். 

அத்துடன், திகனையில் ஏற்பட்ட இனவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் தவறியமையினாலேயே இன்று பாராதூரமான விளைவுகளை சந்திக்க நேர்ந்துள்ளது எனவும், இதனால் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

குற்றங்களைத் தடுத்தல் குற்றங்களைக் குறைத்தல் தொடர்பான விவாதம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நாட்டில் குற்றச்செயல்கள் - இனங்களுக்கிடையிலான வன்செயல்கள் செயற்பாடுகள் மிகமோசமாக நடந்து கொண்டிருக்கின்ற போது குற்றச்செயல்களைத் தடுப்பது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம். குற்றச்செயல்களை தடுக்க வேண்டுமாக இருந்தால் பதவியில் இருக்கின்ற அரசு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். சட்டத்தை தமக்கு விரும்பிய நேரங்களில் விரும்பியவர்களுக்கு மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த தவறுமாயின் ஒருபோதும் நாட்டில் சட்டத்தை நிலைநாட்டவோ, குற்றச்செயல்கள் - வன்செயல்களைக் குறைக்கவோ முடியாது. 

நாட்டில் புரையோடிப் போயிருந்த யுத்தத்தை நிறைவு செய்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திய அரசையே அளுத்கம சம்பவத்தின் காரணமாக மக்கள் தூக்கி எறிந்து புதிய நல்லாட்சியை பதவிக்கு கொண்டு வந்தார்கள். 
எனினும், நல்லாட்சி அரசாங்கத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் - செயற்பாடுகள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. அந்தவரிசையில் கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்திலும் பல சம்பங்கள் பதிவாகியுள்ளன. 

கண்டி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் முஸ்லிம்களுடைய சொத்துக்கள் - உடமைகள் தாக்கப்பட்டுள்ளது. சுமார் 25  பள்ளிவாசல்கள் முழுமையாகவும் - பகுதியாகவும் தாக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டும் முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வியாபார ஸ்தலங்கள் எரிக்கப்பட்டு கோடிக்கணக்கான சொத்துக்கள் - பெருளாதாரங்கள் அழிக்கபட்டுள்ளன. 

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தும் தங்களது வீடுகளை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். நேற்று (நேற்று முன்தினம்) கண்டிக்குச் சென்று அவர்களுடைய தலைவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. இந்த பிரச்சினைகள் உருவான தினத்திலிருந்து ஜனாதிபதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த பிரதமருடன் தொடர்ச்சியாக முஸ்லிம் தலைமைகள் பேசிக்கொண்டிருகின்றோம். “இவைகளை கட்டுப்படுத்துகின்றோம் - சட்டத்தை நிலைநாட்டுகின்றோம், சட்டத்தை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள்” என்று உறுதி மொழிகள் எமக்கு வழங்கப்பட்ட போதிலும் அவையொன்றுமே களத்தில் நடைமுறைப்படுத்தாதையிட்டு நாங்கள் மிகவும் கவலையடைகின்றோம். 

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பார்த்துக் கொண்டிருக்கின்ற போது பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், வீடுகள்  சூறையாடப்பட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.  

இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த மக்களை பாதுகாக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை. அவ்வாறான ஒரு அரசு தங்களுக்கு வாக்களித்த மக்களை நிர்க்கதியாக்கியுள்ளதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம். பொலிஸாரும், இராணுவத்தினரும் போதியளவில் அந்த பிரதேசங்களில் நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கு இருக்கவில்லை. பாதுகாப்பு கடமைகளின் ஆளணி பற்றாக்குறை உள்ள ஒரு பிரச்சினையை நாங்கள் கண்டோம். ஆளணி இல்லாத நிலையில் எந்தவொரு அரசாங்கத்தினாலும் இவ்வாறான ஒரு சூழ்நிலையில்  முழுமையான பாதுகாப்பை வழங்கவோ உறுதி செய்யவோ முடியாது. 

எனவே, நாட்டில் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் பொலிஸ் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். இதனடிப்படையில் நாட்டிலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் அவர்கள் கடமையில் ஈடுபடுத்துவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த விடயம் சம்பந்தமாக நான் தொடர்ச்சியாக பேசி வருகின்றேன். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடத்திலும் தெரிவித்துள்ளேன். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக எழுத்து மூலமாகவும் இதனை தெரியப்படுத்தியுள்ளேன். 

இவ்வாறான செயற்பாடுகளினாலேயே நாங்கள் இந்த நாட்டில் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும். பாதுகாப்பு தரப்பினர் தம்மால் முடிந்தளவு பணிகளைச் செய்த போதிலும் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் முழுமையாக தங்களுடைய பணிகளைச் செய்யவில்லை. எம்மை பாதுகாப்பதற்கு அவர்கள் தவறியுள்ளார்கள் என்று பாதுகாப்பு தரப்பினர் மீது முஸ்லிம்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவற்றைத் தடுப்பதற்காக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
எதிர்காலத்தில்  இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். அதுவரை ஒவ்வொரு பிரதேசங்களிலும் கிராமங்களிலும் முஸ்லிம் இளைஞர்கள் தொண்டர் அடிப்படையில் உள்வாங்கப்பட்டு அவசரமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு பொலிஸாருடனும், இராணுவத்தினருடனும் சட்டரீதியான முறையில் ஆயுதங்களோடு முஸ்லிம் பிரதேசங்களையும் - ஏனைய பிரதேசங்களையும் பாதுகாக்குகின்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாக மாத்திரமே இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக் காண முடியும். 

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற போதும் கூட கண்டி மாவட்டத்தில் சில பகுதிகளில் பிரச்சினைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்பிரச்சினை நாளை இன்னொரு மாவட்டத்துக்கு, பிரதேசங்களுக்கு பரவலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட்டம் கூடி கலந்துரையாடுவதன் மூலமாகவோ, உறுதிமொழிகள் வழங்குவதன் மூலமாகவோ ஒருபோதும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. ஆகவே, பொலிஸாருடனும், இராணுவத்தினருடனும் சட்டரீதியான முறையில் முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து செயற்படக்கூடிய நிலையை உருவாக்குவதன் மூலம் பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.  

இலங்கை எமது நாடு. இவ்வாறான செயற்பாடுகினால் எமது நாட்டுக்கே அபகீர்த்தி ஏற்படுகின்றது.  எனவே, சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் இணைந்து செயற்படுவதன் மூலம் இவ்வாறான செயற்பாடுகளை தோற்கடிக்க முடியும்.

நாங்கள் 30 வருட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்தோம். மீண்டும் இனவாதத்தை தூக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகள் மேலும் வலுவடையுமாக இருந்தால் பொருளாதார ரீதியாகவும், சர்வதேச ரீதியிலும் நாங்கள் அரசாங்கம் என்ற ரீதியில் ஏராளமான பிரச்சினைகளையும் - சவால்களையும் எதிர்நோக்க நேரிடும். தற்போது இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருகின்ற வன்செயல்கள் காரணமாக சர்வதேச ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐ.நா. சபை கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன், பிரான்ஸ், அமெரிக்கா, அரபு நாடுகள் தங்களது சுற்றுலா பயணிகளை இலங்கை வர தடைசெய்துள்ளன. தொடர்ந்து மேலும் பல நாடுகள் அவ்வாறான தீர்மானங்களை எடுக்குமாக இருந்தால் இலங்கையின் முக்கிய பொருளாதாரமாக கருதுகின்ற உல்லாசப் பயணத்துறை முழுமையாக பாதிப்படையும். இதனால் நாங்கள் எதிர்வரும் காலங்களிலும் பொருளாதார ரீதியில் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். 

எனவே, இந்த விடயம் சம்பந்தமாக அரசாங்கம் மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும். நாட்டிலே வாழ்கின்ற சகல மக்களும் தங்களுடைய மக்கள் என்ற உணர்வோடு செயற்பட வேண்டும்.  சிங்கள , தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாட்டுடன் செயற்படத் தொடங்கினால் இந்த நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. 

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஏனைய மாவட்டங்களுக்கு பரவாமல் தடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். ஆகவே, இவற்றைத் தடுக்க வேண்டுமாக இருந்தால் சட்டரீதியிலான செயற்பாடுகள் மூலமாகவே தடுக்க முடியும். 

சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மந்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தப் பதவியை ஏற்கின்ற போது இனவாத செயற்பாடுகளினால் நாடு எறிந்து கொண்டுள்ளது. ஆகவே இந்த அமைச்சுப் பதவியின் ஊடாக முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரெல்லாம் பள்ளிவாசல்கள், கடைகள், வீடுகளைத் தாக்கி தீ வைத்தார்களோ அவர்கள் அனைவரும் தராதரம் பாராது கைது செய்யப்பட்டு  சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அவ்வாறு சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் அன்று திகனையிலேயே இந்தப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும். ஆனால், சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிஸ் திணைக்களம் தங்களது கடமையினை சரிவர நிறைவேற்றவில்லை. அதன் காரணமாகவே இன்று இவ்வளவு பெரிய பாரதூரமான விளைவுகளை நாங்கள் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்பு நாட்டில் இனங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகளை நீக்க வேண்டும். இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும். – என்றார். 


Share on Google Plus

About NEWS

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment