Mar 1, 2018

இன,மத பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டமிட்டு அபிவிருத்தி செய்ய இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார்.

வவுனியா சாளம்பைக்குள ஆயிஷா பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் பைசல் தலைமயில் இன்று (01) காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக்க மற்றும் வவுனியா மாவட்ட இணைப்பளர் முத்து முஹம்மது உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

இன ரீதியாகவும், மத ரீதியாகவும் சிந்தித்ததன் விளைவினாலேயே நமது பிரதேசம் அபிவிருத்தியில் பின்னடைந்து காணப்படுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரசைப் பொறுத்தவரையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தின் அபிவிருத்தியிலும், முன்னேற்றத்திலும் எந்தவிதமான பாகுபாடின்றி பணியாற்றி வருகின்றது.

நாங்கள் திட்டமிட்டு மேற்கொண்டு வந்த பல்வேறு வேலைத்திட்டங்கள் சிலரின் இடையூறுகளினால் இடைநடுவில் நிறுத்தப்பட்டு, கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. பிரதேச ரீதியாகவும், வட்டார ரீதியாகவும் நாங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ஐந்து வருடகால அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளினதும், அரசியல்வாதிகளினதும் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றோம்.
வன்னி மாவட்டத்தை வளங்கொழிக்கும் பூமியாகவும், செல்வம்கொழிக்கும் பிரதேசமாகவும் மாற்ற அனைவரும் பேதங்களை மறந்து செயற்படுங்கள்.
கடந்த காலத்தில் நாங்கள் இந்தப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, கொட்டில்களாக இருந்த வகுப்பறைகளை, அழகான கட்டிடங்களாக மாற்றி மாணவர்களின் கல்விக்கு உரமூட்டி இருக்கின்றோம். வளப்பற்றாக்குறைகளை முடிந்தளவு தீர்த்து வைத்துள்ளோம்.

பாடசாலைகள் கல்வியை வழங்குவதுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்திக்கொள்ளாது, மாணவர்களுக்கு சிறந்த ஒழுக்கத்தையும், நற்பண்பையும் கற்றுக்கொடுக்கும் கலாசாலைகளாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்களினதும், அதிபர்களினதும் தார்மீகப் பொறுப்பு இந்த விடயத்தில் முக்கியமானது. தற்போதைய மாணவ சமூகம் சீரழிந்து போகின்ற நிலையை அவதானிக்க முடிகின்றது.

ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்துகின்ற தன்மை மாணவர்களிடம் அருகி வருகின்றது. எனவே, அதிபர்கள், ஆசிரியர்கள் இந்த விடயத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி பெற்றோர்களுடன் நெருக்கமான உறவை ஆசிரியர்கள் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு பிள்ளைக்கு ஆரம்பக் கல்வியே அடித்தளமாக அமைகின்றது. எனவே, பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியில் கவனஞ்செலுத்துவது கட்டாயமானது.  மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென்ற ஆசையும், விருப்பமும் அதிபர், ஆசிரியர்களின் மனதில் ஏற்படுவதன் மூலமே இது சாத்தியமாகும்.

யுத்தம், எமது மக்களின் வாழ்விலே பல்வேறு சீரழிவுகளை ஏற்படுத்தியது. ஓர் ஊரில் வாழ்ந்த மக்களை கட்டாய இடப்பெயர்வு, பல்வேறு துருவங்களாக மாற்றி வெவ்வேறு ஊர்களில் வாழவைத்து, அந்த சமுதாயத்தை வேற்றூரவர்கள் போல பிரிந்து வாழ நிர்ப்பந்தித்தது.

மீள்குடியேறிய பின்னர், முன்னர் இருந்த பழைய சமுதாயக் கட்டமைப்பும், ஊர்ப்பற்றும் சிதைந்ததினால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின. இந்த நிலையை நாம் தொடர்ந்து அனுமதித்தால் வரலாறு நம்மை பழி கூறும். எனவே, ஊர்ப்பெரியவர்கள், தர்மகர்த்தாக்கள் ஒன்றிணைந்து நிர்வாகத்தை மையப்படுத்தி சிறந்ததொரு கட்டமைப்பை ஏற்படுத்துமாறு அன்பாய் வேண்டுகின்றேன். இதன்மூலமே, வேற்றுமைகளை போக்கி, நிலையான அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும் என பெரிதும் நம்புகின்றேன் என்றார்.         

ஊடகப்பிரிவு-

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network