Mar 8, 2018

முஸ்லிம்களின் சொத்துக்களையும், பள்ளிவாசல்களையும் குறிவைத்து நடத்தப்படுகின்றதா?
கண்டி கலவரம்:

முஸ்லிம்களின் சொத்துக்களையும், பள்ளிவாசல்களையும் குறிவைத்து நடத்தப்படுகின்றதா?

-சுஐப் எம்.காசிம்-

தம்புள்ள, அளுத்கம, பேருவளை, தெஹிவளை இன்னும் பல முஸ்லிம் பிரதேசங்களில் 2016 வரை மேற்கொள்ளப்பட்ட இன, மத குரோத வெறியாட்டங்களை நிறுத்த முடியாமல் போனதற்காகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை பிரிந்து, அவருக்கெதிராக தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டிய அவசியம் எமக்கேற்பட்டது. அதன் அவசியத்தை முஸ்லிம்களிடம் உறுதிப்படுத்தி, ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு முன்னுதாரணமாக நாம், எமது பட்டம் பதவிகளைத் துறந்து மகிந்தவின் ஆட்சியில் இருந்து வெளியேறினோம்.

நமது தூரதிருஷ்டியான முடிவினதும், உழைப்பினதும் காரணமாக முஸ்லிம்களின் வாக்குகளாலேயே மகிந்தவின் தோல்வி இறுதியாகத் தீர்மானிக்கப்பட்டது. அதன் விளைவாக மைத்திரி - ரணில் நல்லாட்சி உதயமாயிற்று. நம் நாட்டு முஸ்லிம்கள் நம்பிக்கையாகவும் நிம்மதியாகவும் பெருமூச்சு விடும் நிலைக்கு நாமே அத்திவாரமிட்டோம்.

எனினும், மகிந்தவிற்கு ஆதரவான சிங்கள பௌத்த தேசிய இனவாதிகள் மகிந்தவை தோற்கடித்ததற்காக முஸ்லிம்களை பழிவாங்கும் எண்ணத்தை தம்முள் மறைத்துக் கொண்டு தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது எங்கள் கவனத்தை விட்டும் தப்பிப்போகவில்லை.

அதனால் நாம் சிங்கள இனவாதிகளை சீண்டிவிடும் எந்த கருமத்தையும் ஒதுக்கியே செயற்பட்டு வந்தோம். அந்தக் காலத்திலும் அங்கிங்கு நடந்த முஸ்லிம் இனவிரோத செயல்களை நாம் பெரிது படுத்தாமல், நல்லாட்சியின் ஊடாக நாட்டை முன்னேற்றும் வழிகளில் அரசாங்கத்திற்கு முஸ்லிம்களின் அதியுச்ச ஒத்துழைப்பை வழங்கியே வந்தோம்.

எதிர்பார்த்தது போலவே இரட்டைத் தலை நல்லாட்சிக்குள் தன்னார்வ போட்டி பொறாமைகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. அதனால் நல்லாட்சியைக் காப்பாற்றும் பொறுப்பும் முஸ்லிம்களுக்கு
அதிகரித்ததை உணர்ந்து இந்த நல்லாட்சியை தொடர்ந்தேர்ச்சியாய் கொண்டு செல்லும் பணியையும் எம்மீது நாம் கடமையாக சுமந்துகொண்டோம். அதற்காக முஸ்லிம்களுக்கு மத்தியில் நல்லாட்சிக்கான நல்லெண்ணத்தை அதிகரித்து, ஆதரவை பரவலாக்குவதற்காக இலங்கை முஸ்லிம்களை எமது செயற்பாடுகளாலும், உத்தரவாதங்களாலும் நல்லாட்சியின் முதல்தர ஆதரவாளர்களாக வளர்த்தெடுப்பதில் கடுமையாக உழைத்ததே நமது வரலாறு ஆகும்.

நல்லாட்சியின் ஒருமைப்பாடு பிளவு படுவதில் அதிகரித்தே சென்றது. நாளுக்குநாள் நல்லாட்சி பொது மக்களின் முன் பலகீனமாகத் தொடங்கிற்று. எல்லாரும் எதிர்பார்த்திருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நல்லாட்சிக்கு மறக்க முடியாத மாதமாக அமைந்தது. நல்லாட்சிக்குள் ஏற்பட்ட விரிசல்கள் அதன் படுதோல்விக்கு காரணமாக அமைந்ததுடன் அதனை மேலும் பலகீனப்படுத்தியது. பௌத்த தேசியத்தின் மக்கள் ஆணை பொதுஜன பெரமுனவுக்குச் சென்றது. நல்லாட்சியை சிங்களவர்கள் நிராகரித்தனர். தமிழ்த் தேசியத்தினர் தமது வாக்குகளை தமக்குள்ளேயே பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் இந்த நாட்டில் தென்மேற்புறத்து, வடகீழ்ப்புறத்து முஸ்லிம்கள் அனைவரும் தமது வாக்குகளை நல்லாட்சியின் ரணிலுக்கும், மைத்திரிக்குமே அளித்து தமது விசுவாசத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

மொத்த முஸ்லிம்களின் நல்லாட்சிக்கான இந்த அர்ப்பணிப்பை சிங்கள பௌத்த தேசியம் சிங்களவர்களுக்கு எதிர்ப்பாகவே எடுத்துக்கொண்டனர். அதனால் முஸ்லிம்கள் மறக்க முடியாத பாடத்தை அவர்களுக்கு கற்பித்தே தீரவேண்டும் என்று தீர்மானித்து தமக்குள் துடித்துக் கொண்டிருந்தனர். நல்லாட்சிக்கு முஸ்லிம்கள் அளித்த வாக்குகள் சிங்கள பௌத்த தேசியத்திற்கு எதிரான வாக்குகளாக, மகிந்தவுக்கு எதிரான வாக்குகளாக அவை எடுத்துக் கொண்டன.

பெப்ரவரி 10 இல் உள்ளுராட்சித் தேர்தல்களின் மகிந்த அணி மாபெரும் வெற்றியைப் பெற்று, மூன்று வாரங்கள் முடிவதற்குள்ளாக சிங்கள பௌத்த தேசியம் காடைத்தனங்களைக் கட்டவிழ்த்து, முஸ்லிம்களின் வியாபாரத் தலங்களை அடித்து நொருக்கி அம்பாரை நகர ஜும்ஆப் பள்ளிவாசலை அடித்து உடைத்தது. அங்கிருந்த வாகனங்களை எரித்து நாசமாக்கியது. இந்த அசம்பாவிதங்கள் பொலிசாரின் முன்னிலையிலேயே நடத்தப்பட்டுள்ளன.

அம்பாறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஐந்து பேரை பொலிஸார் கைது செய்த போதும், பள்ளிவாசலை அடித்து நொருக்கிய சம்பவத்தை மறைத்து, இரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவமாக அம்பாறை நாசகாரச் செயலைக் காட்டி, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தி, நாசகார சக்திகளுக்கு பிணையை பொலிஸார் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீதான இந்த நாசகாரச் செயலை இனவாத சம்பவம் கிடையாது எனவும், இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினை எனவும் பொலிஸார் நாக்கூசாமல் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தைப் பேண வேண்டியவர்கள், மக்களைப் பாதுகாப்பவர்கள் இவ்வாறு கேவலமாக நடந்துகொண்டிருப்பது, நல்லாட்சி அரசின் ஓட்டைகளையே வெளிப்படுத்தியுள்ளது.

மனுதாரரின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தும், நல்லாட்சி அரசின் காவலர்கள், பூரணப்படுத்தப்படாத பி(B) அறிக்கையை நீதிமன்றத்தில் வழங்கி, சந்தேகநபர்களுக்கு ஆதரவாக நீதிமன்றில் பிணை கேட்டு, அவர்களை பிணையில் விடுவிக்கச் செய்திருப்பது மிகவும் மோசமான செயலாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

கடந்த காலங்களிலும் இனவாத பௌத்த தேரர்களின் வெளிப்படையான அட்டகாசங்களையும், அட்டூழியங்களையும் மறைத்து பொலிஸார் பிணை வழங்கி இருக்கின்றனர். இப்போது, இனவாத மதகுருமார்களே நல்லாட்சியை வழிநடாத்துவது வெளிப்படையாக வெட்டவெளிச்சமாகி உள்ளது.

அம்பாறை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ததன் பின்னர், இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் குறிப்பாக, சட்டத்தின் மீதும், நல்லாட்சியின் மீதும் மேலும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இந்த அரசாங்கத்தில் தமக்கு எந்தவிதமான பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லையென அவர்கள் கருதுகின்றனர். கவலையடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு வார காலத்துக்குள் கண்டி திகன பிரதேசத்தில் இனவாதிகள் காட்டு மிராண்டித்தனமான அட்டகாசங்களை புரிந்திருக்கின்றனர். கண்டி திகன பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த ஐந்து இளைஞர்களைக் கொண்ட குழுவொன்று, பெரும்பான்மையின லொறிச் சாரதி ஒருவரை அடித்துக் காயப்படுத்தியதனால், அவர் இறந்ததை காரணமாக வைத்துக்கொண்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், அந்தப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்கியும், பள்ளிவாசலை உடைத்தும், முஸ்லிம்களை காயப்படுத்தியும் அட்டகாசம் புரிந்துள்ளனர்.

மதுபோதையில் சென்ற இந்த இளைஞர் குழு லொறிச் சாரதி ஒருவருடன் வீணாக முரண்பட்டு அதன் பின்னர், அவரை தாக்கியதனால் கரலியத்த வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட தாக்குதலுக்குள்ளானவர் அகாலமரணமானார். இந்த லொறிச் சாரதி அம்பாலை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தக் கிராமத்தில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளை அடித்து நொருக்கி, சேதப்படுத்தினர்.

அதன் பின்னர், திகன பிரதேசத்தின் ஏனைய முஸ்லிம் கிராமங்களிலும் பதட்டம் நிலவியது. எந்த நேரத்திலும் அசம்பாவிதங்கள் நடக்கக் கூடிய சூழ்நிலை நிலவியமை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

முஸ்லிம் பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டிக்கொண்டதற்கு இணங்க பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கண்டி பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில், அந்தப் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் நல்லாட்சி அரசின் தலைவர்களும், பொலிஸ்மா அதிபரும் முஸ்லிம் அமைச்சர்களிடமும், எம்.பிக்களிடமும் மீண்டும் மீண்டும் உறுதியளித்தனர்.

இறுதிக் கிரியைகள் நடக்கப் போகும் தினத்தில் இனவாதிகள் முஸ்லிம்களின், சொத்துக்களையும், பள்ளிவாசல்களையும் தகர்ப்பதற்கு திட்டமிட்டு வருவதாக, முஸ்லிம் அரசியல்வாதிகள் பலமுறை அரசின் உயர்மட்டத்துக்கு தெரிவித்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், பாரிய கலவரம் வெடிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

எனினும், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், விஷேட அதிரடிப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு மீண்டும் மீண்டும் தெரிவித்த போதும், அதற்கு மத்தியிலேதான் பட்டப்பகலிலே இந்த இனவாத சங்காரம் நடந்து முடிந்துள்ளது.

ஒரு குறித்த இளைஞர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சமாதானத்துடன் முடிவடைந்த போதும், அந்தப் பிரதேசத்தில் இனவாத ரீதியாக சிந்திக்கும் தீய சக்திகளினால் பெரும்பான்மை சமூகம் உசுப்பேற்றப்பட்டு, இரண்டு சமூகங்களுக்கிடையிலான கலவரமாக இதனை மாற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அந்த இளைஞர் குழுவில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருந்த போதும், வேண்டுமென்றே முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
மரணமடைந்த இளைஞரின் பிரேதத்தை சுமந்துகொண்டு ஊர்வலமாக, கண்டி திகனை பிரதேசத்தில் உள்ள எல்லேபொல, அம்பகல, பல்லகல, அம்பகஹாவத்த, அளுத்வத்த ஆகிய முஸ்லிம் கிராமங்களை ஊடறுத்து இனவாதிகள் சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் சென்ற இனவாதக் கும்பல், அந்த வழியில் உள்ள கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் சுமார் 50 க்கு மேற்பட்ட வீடுகளை தீக்கிரையாக்கி உள்ளனர். திகன டவுன் பள்ளி, பல்லேகல ஜும்ஆப் பள்ளி, கெங்கல்ல ஜும்ஆப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிவாசல்களும் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

திகன நகரில் உள்ள  முஸ்லிம்களுக்குச் சொந்தமான தாஜ் ஹோட்டல், மதீனா ஹோட்டல், நுவர கடை, உடதும்பர ஸ்டோர்ஸ், அக்ரம் புடவைக் கடை, திகன பேக் ஹவுஸ், பாத்திமா குரோசரி, மேக்ரோ கேக் ஹவுஸ், இசட் ஐ கொமினிகேஷன் உட்பட பல கடைகள் எரித்தும், நொருக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டன. இனவாதிகள் பல்லேகலையில் வீடுகளை எரித்த போது, அங்கு சிக்கிய அப்துல் பாஷித் என்ற இளைஞன் மூச்சுத் திணறலினால்  பலியாகியுள்ளார்.

இனவாதிகளின் அட்டகாசம் கட்டுக்கடங்காது போனதனால் கண்டி நிருவாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ஹலீம், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஹரீஸ் உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

கண்டி நிருவாக மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர், மேலதிக பொலிஸாரும், இராணுவத்தினரும், விஷேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டதாக கூறப்பட்டது.

திகனையில் இடம்பெற்ற அட்டூழியங்களை அறிந்து, அமைச்சர் ஹக்கீம் கொழும்பிலிருந்து விரைந்தார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனும், பாராளுமன்ற உறுப்பினர் இஷாக், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், பிரதேச சபை உறுப்பினர் அன்சில் ஆகியோரும் அன்று மாலை அங்கு சென்றனர். அமைச்சர்களான ஹலீம், பைசர் முஸ்தபாவும் களத்தில் நின்றார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திகனைக்கு சென்று கொண்டிருந்த போது, கட்டுகஸ்தோட்டையில் பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்தது. அவசரமாக கட்டுகஸ்தோட்டைக்கு சென்ற போது, இரவு 9.00 மணியை எட்டியிருந்தது. அமைச்சர் குழாம் அங்கு செல்வதற்குசில மணி நேரங்களுக்கு முன்னர், 20 பேர் கொண்ட இனவாதக் குண்டர்கள் கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலுக்குள் நுழைந்து, அதனை முற்றாக சேதப்படுத்தி இருந்தனர். அங்கிருத்த ஐந்து முஸ்லிம்கள் மூன்றாவது மாடியின் வழியாக வெளியேறி தப்பி ஓடி உயிர் பிழைத்ததாகத் தெரிவித்தனர். சிலநிமிடங்களில் அமைச்சர் ஹலீமும் சம்பவ இடத்துக்கு வந்திருந்தார். அமைச்சர் ஹக்கீமும் அந்த இடத்தை பார்வையிட்டிருந்தார். 

கட்டுகஸ்தொட்டை தக்கியா பள்ளியையும் இனவாதிகள் தாக்கியிருந்தனர். மூன்று மோட்டார் சைக்கில்களில் வந்த 06 பேர் அந்தப் பள்ளியின் அருகிலிருந்து பெற்றோல் குண்டுகளை வீசி சேதப்படுத்தி இருந்தனர்.

அதன் பின்னர், குருநாகல் மெல்சிரிபுர உஸ்வத்துல் ஹஸனா அரபிக் கல்லூரிமீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. கண்டி, தென்னகும்புர பள்ளிவாசலுக்கும் பெற்றோல் போத்தல் ஒன்று வீசப்பட்டது. அலதெனியவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த பள்ளிவாசலின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருந்தன. அதேநேரம் கண்டி, ஹேதெனிய பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் நிறுவனத்துக்கும்  இனவாதிகள் பெற்றோல் போத்தலை வீசியிருந்தனர்.  
  
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழு,  கட்டுகஸ்தோட்டையில்  தக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அக்குரணை நகரை இனவாதக் கும்பல் ஒன்று தாக்க முற்படுவதாக தகவல் கிடைத்தது. அக்குரணைக்கு அமைச்சர் ரிஷாட் சென்ற போது, அந்தப் பிரதேசத்தின் பிரதான வீதியில் பெரியவர்களும், முஸ்லிம் இளைஞர்களும் திரண்டு நின்று அந்தப் பிரதேசத்தை பாதுகாக்கும் நோக்கில் நின்றுகொண்டிருந்தனர். அக்குறணை ஹஸனா பள்ளிவாசலுக்குச் சென்று அந்த மக்களைச் சந்தித்து அவர்கள் நிலைமைகளை கேட்டறிந்துகொண்டனர்.

அதன் பின்னர், தொடர்ச்சியாக இரவு, பகல் என்று பாராது இனவாதிகள் கண்டி மாவட்டத்திலும், ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலும் ஆங்காங்கே திட்டமிட்டு பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் சொத்துக்களை தீக்கிரையாக்கியும், உடைத்தும் அழித்தும் வருகின்றனர்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் இதுவரை, கணக்கெடுக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் தமது உயிரிலும் மேலாக மதிக்கும் பள்ளிவாசல்களும், கோடிக்கணக்கில் பெறுமதியான சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரங்களை அடுத்து அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ஹலீம், பைசர் முஸ்தபா உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இஷாக் ஆகியோர் களத்தில் மக்களோடு மக்களாக நின்று, அவர்களின் தேவைகளை கவனித்து வருவதோடு, முற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

விஷேட அதிரடிப்படையினருக்கும், பொலிஸாருக்கும் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, நேற்று (07) மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்திருந்த பின்னரும், தொடர்ந்தும் கண்டியில் முஸ்லிம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள், வியாபாரஸ்தலங்கள், வீடுகள் மீது நாசகாரிகள் பெற்றோல் குண்டுகளை வீசி அவற்றை சேதப்படுத்தி வருவதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டினர்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்காக அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ஹலீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக், மஸ்தான், நவவி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டர் மூலம் கண்டிக்கு வருகை தந்திருந்தனர். கண்டியில் தங்கியிருந்த அமைச்சர்களான ரவூப் ஹகீம், பைசர் முஸ்தபா ஆகியோரும் இதில் பங்கேற்றனர். கொழும்பிலிருந்து விஷேட ஹெலிக்கொப்டர் மூலம் வந்திருந்த பௌத்த மதகுருமாரும், கண்டி அஸ்கிரிய மல்வத்த நாயக்க தேரர்களின் பிரதிநிதிகளும், உலமாக்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

கண்டியில் கட்டுக்கடங்காது சென்றுகொண்டிருக்கும் இனவாதிகளின் அராஜகங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறும், முஸ்லிம்கள் எந்த நேரமும் அச்சத்துடனும், கவலையுடனும் வாழ்வதாக முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினர்.

பாதுகாப்புப் படையினர் ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த போதும், அவற்றை எல்லாம் மீறி இனவாதிகள், தொடர்ந்தும் நாசகார செயல்களை மேற்கொண்டு வருவதாக அரசியல்வாதிகள் வலியுறுத்திய போது, அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். இதன்போது கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த தேரர்களும், முஸ்லிம்கள் மீது சிங்கள மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்.

இந்த உயர்மட்டக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர், பாதிக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றுக்கு விஜயம் செய்து, சேதமடைந்த இடங்களை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தனர்.

கண்டியில் கட்டுகஸ்தோட்டை, உண்ணஸ்கிரிய, அக்குரணை 04 ஆம் கட்டை ஆகியவற்றில் இன்று இனவாதிகளால் எரிக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்கள், டைத்தொகுதிகள் மற்றும் வீடுகளையும் பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்ட பிரதேசமான ஹாரிஸ்பத்துவ அங்குறுதெனவுக்கு அமைச்சர் குழு சென்ற போது, அங்கு பள்ளிவாசல் மற்றும் பல வீடுகள் எரிக்கப்பட்டு காணப்பட்டன.

அங்கு வசிக்கின்ற  189 முஸ்லிம் குடும்பங்கள் நேற்றுமுன்தினத்திலிருந்து (06) பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று மாலையிலிருந்து தாங்கள் உணவின்றி அவதிப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர்கள், இனவாதிகள் எந்த நேரத்திலும் தமது கிராமத்தை தாக்கக் கூடும் என அச்சம் வெளியிட்டனர். அமைச்சர் குழாம் அக்குரணைக்குச் சென்று அங்குள்ள பள்ளிவாசலில் மக்களை சந்தித்து, நிலைமைகளை கேட்டறிந்தனர். எந்த நேரத்திலும் தமது கிராமம் தாக்கப்படக் கூடும் என்ற நிலை இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள், படையினரின் செயற்பாடுகளில் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் கூறினர்.

முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்டு வரும் காட்டுமிராண்டித்தனமான, தொடர்ச்சியான வன்முறைகள் குறித்து அரசாங்கம் அதிதீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால், விளைவுகள் மேலும், விபரீதமாகி நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதே யதார்த்தமாகும். 


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network