Mar 29, 2018

ஜெனீவாவில் எதிரொலித்த முஸ்லிம்கள் மீதான வன்முறையும் புதுப்பிக்கப்பட்ட நல்லுறவும்எழுத்து : சுதன்ராஜ் 
ஜெனீவாக் களம் மீண்டும் ஒரு தடவை ஆடி அடங்கியுள்ளது. அரசுகளின் இந்த ஆடுகளத்தில், ஒடுக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினை வேண்டியும், ஓடுக்கியவர்கள் பொறுப்புக் கூறுவதில் இருந்து தப்பித்துக் கொள்வதிலும் தள்ளாடிக் கொண்டுள்ளனர். அவ்வகையில் நடந்து முடிந்த ஐ.நா மனித உரிமைச்சபையின் 37வது கூட்டத் தொடர் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. பல கோணங்களிலும் இருந்தும் அதுபற்றிய விடயங்கள் தாராளமாகவே வெளிப்பட்டிருக்கின்றது.
இருப்பினும் முஸ்லீம் சமூகத்தை மையப்படுத்திய ஜெனீவாச் செயற்பாடுகள் குறித்து ஒருசில விடயங்களை இவ்விடத்தில் உற்று நோக்குவது பொருத்தமாக இருக்கும்.
சமீபத்திய நாட்களில் சிங்கள இனவாதிகளினால் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் ஜெனீவாவில் பல்வேறு மட்டங்களில் எதிரொலித்திருந்ததனை தாராளமாகவே அவதானிக்ககூடியதாக இருந்தது.
தமக்கு இழைக்கப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, மேற்குலக இராஜதந்திரிகள் என பல்வேறு தரப்பினைரையும் சந்தித்து முஸ்லீம் தரப்பினர் முறையிட்டிருந்தனர்.
ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தார்கள் என்பது மட்டுமல்ல, கேட்போர் கூடங்களில் பக்க நிகழ்வுகளையும் முன்னெடுத்திருந்தனர்.
இதனை முன்னெடுத்திருந்த முஸ்லீம் பிரதிநிதி ஒருவர் இக்கட்டுரையாளருக்கு கருத்து தெரிவிக்கையில், "மைத்திரி - ரணில் கூட்டு அரசாங்கத்தின் மீது முஸ்லீம் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முஸ்லீம்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களும், தற்போதைய தாக்குதல்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவையாக உள்ளன. ஆட்சி மாறியிருந்தாலும் வன்முறைகளில் தொடர்சி காணப்படுகின்றது. தனிப்பட்ட சம்பவங்களாவோ அல்லது தனித்தனி சம்பவங்களாகவோ காண முடியாது. ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இவைகள் நடைபெறுகின்றன.
முஸ்லீம்களை அல்லது சிறுபான்மை மக்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்குடன்தான் இந்த இனவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளன.
ஆளும் அரசில் 21 முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு அமைச்சு பிரதமர் கையில் இருந்தது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட முப்படைகளின் தளபதியாக ஜனாதிபதி இருக்கின்றார்.
அவசரக் காலச்சட்டம் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில்தான் முஸ்லீம்கள் தாக்கப்பட்டார்கள்.
இந்த ஆட்சிக்கு பெருவாரியான முஸ்லீம் மக்கள் வாக்களித்திருந்தனர்.
இதற்கு பின்னரும் இந்த அரசாங்கத்தினை நம்பி முஸ்லீம் சமூகத்தினர் வாழத் தயார் இல்லை என்ற நிலைமைக்கு வருகின்றது.
வரும் தேர்தலில் முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதோடு, இந்த அரசாங்கத்துக்கு பதிலீடாக இன்னுமொரு இனவாத சக்திகள் ஆட்சிக்கு வர துணை நிற்கமாட்டர்கள்"
கடந்த காலங்களிலும் சரி, சமகாலத்திலும் சரி தமிழர் தரப்பு தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரநீதி கோரி பல்வேறு தளங்களிலும் தமது செயற்பாடுகளை ஜெனீவாவில் மேற்கொண்டு வந்துள்ளனர்.
குறிப்பாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் கட்டவிழத்துவிடப்பட்ட வேளையில், ஜெனீவாவில் முஸ்லீம்கள் மௌனமாகவே இருந்துள்ளனர். தமிழர் தரப்பு தமது பக்க நிகழ்வுகளில் முஸ்லீம்களுக்கு எதிரான சிங்கள இனவாத வன்முறைகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர். மறுவளம், இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தினை மையப்படுத்தி, கொழும்பு ஐ.நா அலுவலகம் முன்னால் முஸ்லீம்களை அணிதிரட்டி ஐ.நாவுக்கு எதிராகவும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் இடம்பெற்றன என்பது கடந்த கால கசப்பான உண்மைகளில் ஒன்றாகவுள்ளது.
ஆனால் இம்முறை நடந்த வன்முறைகளுக்கு எதிராக முஸ்லீம்கள் ஜெனீவாவில் மௌனமாக இருக்கவில்லை என்பது தெளிவாகியிருந்தது.
ஒப்பீட்டளவில் தற்போதைய ஆட்சியில் கிடைத்துள்ள ஜனநாயக வெளியினை தமது நலன்சார்ந்து கையாண்டுள்ளார்கள்.
அன்றைய ஆட்சியாளர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1983ல் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறையினை கட்டவிழ்த்து விட்டிருந்தார், தற்போது அவரது மருமகனார் ரணில் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளார் என்ற கருத்தும் கலைந்த மௌனத்தின் ஒரு பதிவாகியிருந்தது.
இதேவேளை, முள்ளை முள்ளால் எடுப்பது போல், ஜெனீவாவில் கலைந்த முஸ்லீம்களின் மௌனத்தினை நாகரீகமாக அடக்க முனைந்த இலங்கை அரசு, தனது அமைச்சரவை முஸ்லீம் பிரமுகர் ஒருவரை ஜெனீவாவுக்கு அனுப்பியிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
'சிங்கள் சசோதரர்களுக்கு நடுவில் வாழும் நாம், அவர்களை சீண்டும் வகையில் ஜெனீவாவில் நடந்தால், தொடர்ந்தும் வன்முறைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்' என செல்லமாக தமது சகோதரர்களுக்கு சொல்லப்பட்டதாக செவிவழிச் செய்தியும் ஜெனீவாவில் உலாவி இருந்தது.
இவற்றையெல்லாம் கடந்து சில வேளைகளில் தீமைகளிலும் சில நன்மை உண்டு என்பது போல், முஸ்லீம்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளின் வன்முறைக்கு எதிரான குரல்கள் தமிழர் தரப்பு இம்முறையும் தனது கண்டனத்தினை பதிவு செய்திருந்ததோடு, முஸ்லீம் சமூகத்தினரது சமய-பண்பாட்டு உரிமைகளுக்கான தோழமையினையும் ஜெனீவாவில் ஈழத்தமிழர்கள் வெளிக்காட்டி இருந்தனர்.
முஸ்லீம் சமூகத்தினர் முன்னெடுத்திருந்த பக்க நிகழ்வுகளில் ஈழத்தமிழர்கள் பலர் பங்கெடுத்திருந்ததோடு, தமது கருத்துக்களையும் பதிவு செய்திருந்தனர். ஆங்காங்கே இருதரப்பும் மனம்விட்டு பேசியும் இருந்தனர்.
இது நாடுகடந்த நல்லிணக்கத் தோழமையாக அமைந்திருந்தது.
'தமிழர்களும், முஸ்லிம்களும், ஏனைய இனங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே சிங்கள-பௌத்த இனஅழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து தற்காப்பை மேற்கொள்ள முடியும். தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு அனுசரணையாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டியதுடன் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து பலம்பொருந்திய சக்தியாக செயற்படவேண்டிய வரலாற்று அவசியமும் இன்று ஏற்பட்டுள்ளது.
இத்தருணத்தில் முஸ்லிம் சகோதர்களோடு நாம் ஒருமைப்பட்டு நிற்கின்றோம் என்பதையும் முஸ்லிம் மக்களோடு தோளோடு தோள் நின்று அவர்களின் பாதுகாப்புக்காக பாடுபடுவோம் என்பதையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது என இக்காலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையும் முக்கியமானதாக இருந்தது.
இந்த அறைகூவலுக்கு பதில் கூறிய புலம்பெயர் முஸ்லீம் பிரமுகர் ஒருவர், 'நாம் அனைவரும் தமிழ் பேசுகின்ற சகோதரர்கள். அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்ட இலங்கை என்ற நிலைப்பாட்டில் ஒன்றுபட்டு போராடவும் வாழவும் தயாராகவே இருக்கின்றோம்' எனத் தெரிவித்திருந்தார்.
2013ம் ஆண்டு முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தில் நிலைப்பாடுகள் தொடர்பிலான 10வது சரத்து பின்வருமாறு கூறுகின்றது : 'தமிழீழத்தில் வாழும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான மக்களின் உரிமைகள் மதிப்பளித்துப் பேணப்படும். முஸ்லீம் மக்களின் தனித்துவமான அடையாளங்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்கள் விரும்பும் வகையில் தமது வாழ்வை ஒழுங்கமைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும். தமிழீழத்தில் தமது வகுபாகத்தினைத் தாமே உருவாக்குவதில் பங்குபற்றும் உரிமை முஸ்லீம் மக்களுக்குக் கொடுக்கப்படும்'


இவ்வாறு ஈழத்தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையில் தொடங்கியுள்ள இந்த பரஸ்பரம் உரையாடல், இரு தரப்பிலும் நிகழ்ந்த கடந்த கால கசப்பான சம்பங்களை கடந்து, சிங்கள இனவாதத்தினை எதிர்கொள்ளவும், தமக்கான உரிமைகளையும் நீதியினையும் நிலைநாட்டவும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்பதுதான் பலரது எதிர்பார்பாக உள்ளது.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post