Mar 9, 2018

வன்முறைகளைக் கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்
வன்முறைகளைக் கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

 தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வேண்டுகோள்

எம்.வை.அமீர் -

அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜக செயல் மற்றும் அதன்பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழல் தொடர்பிலும் நாட்டில் சுமூக நிலையை விரைந்து ஏற்படுத்தும் பொருட்டு தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆற்றவேண்டிய பங்கு குறித்து அன்று இடம்பெற்ற ஆரம்பகட்ட கலந்துரையாடல் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸீல் தலைமையில் பல்கலைக்கழக இஸ்லாமிய மற்றும் அரபு பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலாநிதி ஏ.றமீஸின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் ஊடகவியலாளர்களும் கருத்துக்களை முன்வைத்தனர்.

இறுதியில் இங்கு நிகழ்வு பற்றிய அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.முஸ்லீம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பாக 08.03.2018 அன்று இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வினை அடுத்து பல்கலைக்கழக சமூகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை

கடந்த சில நாட்களாக முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையினை நாம் மிக வன்மையாக கண்டிக்கின்றோம். வரலாற்றுநெடுகிலும் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்கள் இந்நாட்டில் நல்லுறவுடனேயே வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் அண்மைய நாட்களில் இடம்பெற்றுவரும் வன்முறைகளும் கலகங்களும் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளாகவே கருதமுடிகின்றது. கடந்த பல தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்றுள்ள சூழ்நிலையில்; இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது இந்நாட்டின் ஐக்கியத்திற்கும் இன நல்லிணக்கத்திற்கும் ஆபத்தாக அமையும் என்பதுடன் நாட்டின் அபிவிருத்தியினை பாதிப்புறச்செய்யும் என்பதில் ஐயமில்லை. 

அண்மைக்காலமாக இனவாத அடிப்படையில் செயற்படுகின்ற கடும்போக்குவாதக் குழுக்கள் சில முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவது கவனிக்கத்தக்கது. முஸ்லீம் வழிபாட்டுத் தலங்கள், கலாசார அடையாளங்கள், வியாபாரத் தளங்கள் போன்றன இக்குழுக்களின் பிரதான இலக்காக உள்ளன. மேற்குறிப்பிட்ட விடயங்களில் பாதிப்பினை ஏற்படுத்துவதன் மூலம் முஸ்லீம்களை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமுறச் செய்ய முடியும் என இக்குழுக்கள் நம்புகின்றன.

சனத்தொகைப் பெருக்கம், பொருளாதார பலம், கருத்தடை விவகாரம் போன்றன குறிப்பிட்ட கலகங்களுக்கும் வன்முறைகளுக்குமான நியாயங்களாக முன்வைக்கப்படுவது அபத்தமானது. அரசியல் ரீதியான உந்துதல்களுடன் இளைஞர்களை ஒன்றுதிரட்டுவதற்கான முயற்சியின் ஒரு அங்கமாகவே இத்தகைய தவறான வியாக்கியானங்களை பார்க்க வேண்டியுள்ளது. இக்குற்றச்சாட்டுக்களிலிருந்து இனத்துவ சிறுபான்மை சமூகங்களை மீட்டெடுக்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

இந்நிலையில் சிங்கள - முஸ்லீம் முரண்பாடுகளின் பின்புலமாக அமைந்துள்ள உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களையும் வியாக்கியாகளையும் முறியடித்து உண்மை நிலையினை வெளிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கு சகல தரப்பினரதும் ஒன்றிணைந்த கூட்டு முயற்சி அவசியமாகும். இதற்கான முயற்சியினை மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூக அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், நாடுகடந்த அமைப்புக்கள், சர்வதேச சமூகம் உள்ளிட்ட பலரும் முன்னெடுக்க முடியும்.

இந்நாடு பன்மைக் கலாசார சமூகப் பின்னணியினைக் கொண்ட ஒரு நாடு என்றவகையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள இனங்களை அனுசரித்துச் செல்வது தொடர்பில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதனைப் போன்று சிறுபான்மை இனங்களும் தமது பொறுப்பினை தட்டிக்களிக்கமுடியாது. இந்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் மற்றைய இனங்களுடன் நல்லுறவினைப் பேணுவதன் மூலமே இந்நாட்டினை சுபீட்சம் நிறைந்த நாடாக மாற்றமுடியும். .

அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.  குறித்த நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையில் கவனம்செலுத்துவதுடன் வன்முறையின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கும் அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். நாட்டின் ஐக்கியத்திற்கு குந்தகத்தினை ஏற்படுத்தும் இத்தகைய வன்முறை நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறாது இருப்பதனை உறுதி செய்வதற்கான வேலைத் திட்டங்களிலும் அரசு கவனம்செலுத்த வேண்டும். 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network