சமூக வலைத்தளத்தினுாடாக இனவாதத்தை தூண்டும் விதத்தில் செய்திகளை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு பாடசாலை மாணவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிபதி லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.


இவர்களை மாகோள சிறுவர் தடுப்பு முகாமில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொழும்பு முன்னணி பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த சந்தேகநபர்கள், “சிங்களே அபி” எனும் பெயரில் “வட்ஸ்அப்” வலைத்தளப் பக்கமொன்றை நடாத்தி வந்துள்ளனர்.

இதில், இனவாதத்தை தூண்டி, இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டுள்ளனர். இவர்களது சகபாடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் இவர்களை மீண்டும் தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இவர்கள் க.பொ.த. சாதாரண தரத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் என்பதனால், எந்தவொரு நிபந்தனையின் கீழாலும் இவர்களுக்கு பிணை வழங்குமாறு இவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கேட்டுக் கொண்ட போதிலும், இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தமது நீதிமன்றத்துக்கு இல்லையெனவும் மஜிஸ்ட்ரேட் நீதிபதி நேற்று (22) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Share The News

Post A Comment: