கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள, அதற்குரிய படிவங்களை விரைவாக பூர்த்தி செய்து கண்டி மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரிவித்தார்.
கண்டி, த யங் பிரெண்ட்ஸ் (The Young Friends) மற்றும் கண்டி நகர வர்த்தக சங்கம் ஆகிய இணைந்து நேற்று (25) கண்டி ஜின்னாஹ் மண்டபத்தில் நடத்திய நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
வழங்கப்பட்ட விண்ணப்படிவம், பொலிஸ் முறைப்பாட்டு பத்திரத்தின் பிரதி, இழப்புகளின் பதிப்பீடு அறிக்கை, உறுதிப்பத்திரம், வங்கி கணக்கு புத்தகத்தின் பிரதி மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி என்பவற்றை இணைத்து கண்டி மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கண்டி வன்முறை தொடர்பான விசேட கவுண்டரில் ஒப்படைக்குமாறு அவர் தெரிவித்தார்.
சுமார் 660 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் சுமார் 130 விண்ணப்பங்கள் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், இழப்பீடு பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டவர்கள் சிலர் தமது காசோலைகளை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், அவற்றை பெற்றுக்கொள்ளுமாறும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீன் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, உறுதிப்பத்திரங்களை இழந்தவர்கள் பிரதேச செயலகத்தின் ஊடாக தமது பதிவை உறுதிசெய்து ஒப்படைக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார். 

Share The News

Post A Comment: