Mar 11, 2018

சட்டரீதியான நடவடிக்கை மூலம் இனவாதத்தைத் தோற்கடிப்போம் அமைச்சர் பைசர்ஐ. ஏ. காதிர் கான் 

 பேரினவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான கண்டி - திகன பிரதேசத்துக்கு,  விஜயம் மேற்கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சர் பைஸர் முஸ்தபா,  பாதிக்கப்பட்ட மக்களுடன் நடைபெற்ற விவகாரங்கள் தொடர்பில் ஒன்றரக் கலந்துரையாடினார். 

திகன  உள்ளிட்ட அப்பிரதேசங்களில் தாக்குதல்களுக்குள்ளான  பள்ளிவாசல்களின் தலைவர்கள்  உட்பட நிர்வாக உறுப்பினர்கள்  மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் ஆகியோர்களுடன் விசேட கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டார். 

கண்டி - மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களையும் சந்தித்து, அவர்களுக்கும் இது தொடர்பில் விளக்கமான தெளிவூட்டல்களை எடுத்துரைத்தார். 

இதன்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள் கட்டுமானப் பணிகள், மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டது.  மக்களின் தற்போதுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.  

இதன்போது கருத்துத் தெரிவித்த  அமைச்சர் பைஸர் முஸ்தபா,       முஸ்லிம்களின் முன்னேற்றம், பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை இல்லாமல் செய்வதற்காகவே இவ்வாறான இனவாதத்  தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகம் நிதானமாகவும் - அவதானமாகவும் செயற்பட வேண்டும். திகனையில் ஏற்பட்ட சம்பவம் முஸ்லிம் சமூகத்துக்கு பல படிப்பினைகளைத் தந்துள்ளது. அழுத்கம கலவரத்தின் பின்னர் இந்த நாட்டில் மீண்டுமொரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்படும் என்றே எதிர்பார்த்தோம். என்றாலும், சட்டம் ஒழுங்கை அமுல்படுத்த வேண்டிய தரப்பினர் திகனை சம்பவத்தின் போது தமது கடமையினைச்  சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டனர். இதன் காரணமாகவே,  கண்டி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கும் கலவரம் பரவத் துவங்கியுள்ளது. 

இலங்கையில் இனவாதம் பாரியளவில் வளர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர இடமுண்டு.  எனவே, முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு இந்த விடயத்தில் அதிக பொறுப்புள்ளதை நாம் உணர்கின்றோம். சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் இனவாதத்தைத்  தோற்கடிப்பதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்  என்பது தொடர்பிலேயே கவனம் செலுத்த வேண்டும்  என்றார். 
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து திகன, ரஜவெல்ல, கும்புக்கந்துர, பலகொல்ல, பல்லேகல, அக்குரணை, அம்பதென்ன  போன்ற பகுதிகளில் பேரினவாத தாக்குதல்களினால் தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும்  வியாபார நிலையங்களையும் அமைச்சர்  இவ்விஜயத்தின்போது சென்று  பார்வையிட்டார். 

இந்த விஜயத்தின் போது,  அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றியாஸ்தீன் சில்மி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய, மெனிக்ஹின்ன, அக்குறணை, அம்பதென்ன, கட்டுகஸ்தொட்டை உள்ளிட்ட பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் காரணமாக சொத்துக்களை இழந்த மக்களுக்கு, 

அரசாங்கத்திடமிருந்து நஷ்ட ஈடுகளைப்  பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளையும்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சர் பைஸர் முஸ்தபா  ஆரம்பித்துள்ளார். 

இனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்கு, கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விஜயம் மேற்கொண்ட  அமைச்சர் பைஸர் முஸ்தபா, இப்பிரதேச  பள்ளிவாசல்களில் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். 
  
இதுதவிர, தனது அமைச்சின் ஊடாகவும்  இக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,  வெகு விரைவில் நஷ்ட ஈடுகளைப்  பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளையும் அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார். 
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post