இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறைக்கு உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறைக்கு உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பு!

Share This


40 சதவீதத்திற்கும் அதிகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் துறையில் மிக ஆர்வமாக ஈடுபடுகின்றன. இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையானது, ஆடை தொழில்துறையை விட விசாலமானது என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வாரம் கொழும்பு, கிங்ஸ்பேரி ஹோட்டலில் இடம்பெற்ற உணவுப் பொதியிடல் மற்றும் உற்பத்திக் கண்காட்சியை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் இந்திய மற்றும் சீனாவிற்கான தொழில்துறை பிரதிநிதியும், இலங்கை உணவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மலிக் டி அல்விஸ் மற்றும் அதன் செயலாளர் துசித் விஜேசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஆகஸட் மாதம் நடைபெறவிருக்கும் 17 வது “பதப்படுத்திய உணவு மற்றும்  பொதியிடல்” கண்காட்சியில், வேளாண்மை வணிக தொழில்துறை ஒன்றாகத் தொடர்புபடுவதினால் அது ஒரு சிறப்புக் கண்காட்சியாகக் கருதப்படுகின்றது.

2001 ஆம் ஆண்டில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் கண்காட்சியானது, தெற்காசியாவில் மிகப்பெரிய உணவு, பானங்கள், பொதியிடல், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பொதியிடல் துறைக்கு உதவுவதற்கான எனது அமைச்சின் ஒரு முயற்சியாகும். 2001 ஆம் ஆண்டில் இந்தத் தொடரின் துவக்கத்தின்போது பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றம், பொதியிடல், தயாரிப்பு, வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்த பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பொதியிடல் கண்காட்சியில், 50 க்கும் மேற்பட்ட இந்திய, சீனா நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

எங்கள் உணவு மற்றும் பொதியிடல் துறைகளில் முதலீடு செய்து பங்காளராக செயலாற்றுவதற்கு, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகளை அழைக்கின்றேன். இந்த துறைகளை மேம்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகள், எமது பாரிய ஏற்றுமதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

எனது அமைச்சு இத்துறைகளுக்கு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இலங்கையின் தொழில்துறை அபிவிருத்தி சபையினால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அங்கீகாரம் பெற்ற உணவு ஆய்வகம் அமைப்பது மிகவும் முக்கியமானது.

உணவு, பானவகை மற்றும் விவசாயத் துறை தொடர்பில், நாட்டில் இடம்பெறும் மிகப்பாரிய நிகழ்வாக கருதப்படுகின்ற இந்நிகழ்வில், பாரிய சர்வதேச தொழிற்பாட்டாளர்களாக விளங்கும் இந்தியா மற்றும் சீனா பங்குபற்றவுள்ளன.

இந்த துறையை அபிவிருத்தி செய்வதற்காக, எனது அமைச்சு தொடர்ச்சியான ஆதரவை கொடுக்கவிருக்கிறது. மேலும், இந்த ஆண்டு எனது அமைச்சு, சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஏற்ப ஒரு சிறப்பு மேடை ஏற்பாடு செய்வதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உண்மையில், இந்த நிகழ்வு எனது அமைச்சின் பொது, தனியார் கூட்டு முயற்சி தொழில்துறை வளர்ச்சிக்கு ஓர் சிறந்த உதாரணம். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் நுண் உற்பத்தித் துறைக்கு கைத்தொழில், வணிக அமைச்சு பக்கதுணையாக இருக்கும்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், உணவு மற்றும் பொதியிடல் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 240 மில்லியன் அமைச்சினால் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை 1.5 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்துகின்றது. அதன்  வருடாந்த உள்நாட்டு உற்பத்தியில் 100 மில்லியன் ரூபா எட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அமைச்சர் கூறினார்.

-ஊடகப்பிரிவு-
-கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு- 

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE