புத்தளத்தில் முஸ்லிம் காங்கிரசை இறுதி நேரத்தில் ஏமாற்றிய ஐ.தே.கட்சியும், கைகொடுத்த மகிந்தவும்!
புத்தளம் நகரசபையானது பதினொரு வட்டாரங்களை கொண்டது. அதில் எட்டு முஸ்லிம் வட்டாரங்களும், ஏனைய மூன்றும் சிங்கள வட்டாரங்கள் ஆகும்.
நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிட்டு எட்டு முஸ்லிம் வட்டாரங்களில் ஏழு வட்டாரங்களை கைப்பெற்றி அமோக வெற்றியினை பெற்றது.

இந்த தேர்தலில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தும் எந்தவொரு வட்டாரத்தினையும் கைபெற்ற முடியவில்லை.

ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு பட்டியல் உட்பட மொத்தமாக கிடைத்த ஏழு ஆசனங்களில் மக்கள் காங்கிரசுக்கு ஒரு ஆசனம் வழங்கப்பட்டது. இதில் சிங்கள உறுப்பினர்களே அதிகமாகும்.

பத்தொன்பது ஆசனங்களைக் கொண்ட நகரசபையை ஆட்சி அமைப்பதுக்கு பத்து ஆசனங்கள் தேவையாகும். அதனால் மு.கா தலைமையில் ஐ.தே கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்பொருட்டு ஐ.தே கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மு. கா தலைவர் ரவுப் ஹக்கீம் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.

இரு கட்சி தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு அமைவாக புத்தளம் நகரசபை மு.கா தலைமையில் ஐ.தே கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அந்த தீர்மானத்துக்கு அமைவாக கடந்த 27.03.2018 செவ்வாய்க்கிழமை முதலாவது சபை அமர்வு நடைபெற்றபோது முதல்வர் பதவிக்காக முஸ்லிம் காங்கிரசினால் பிரேரிக்கப்பட்ட கே.ஏ. பாயிஸ் அவர்களை எதிர்த்து அதே பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியல் உறுப்பினரான மக்கள் காங்கிரசை சேர்ந்த அலிசப்ரி அவர்கள் போட்டிக்காக களமிறக்கப்பட்டார்.

இது முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதனை தடுக்கும்பொருட்டு திடீரென சற்றும் எதிர்பாராதவிதமாக நடைபெற்ற குள்ளத்தனமான சதிமுயட்சியாகும்.
ஐ.தே கட்சி தலைவர் உடன்பாடு கண்ட விடயத்துக்கு மாற்றமாக இவ்வாறு நடைபெறுவதென்றால் மு. கா ஆட்சி அமைப்பதனை தடுப்பதற்காக நம்பவைத்து சதி செய்யும்பொருட்டு ரணில் விக்ரமசிங்க மு.கா தலைவருடன் நயவஞ்சகதனமாக நடந்திருக்க வேண்டும். அல்லது அவரது தீர்மானத்தினை கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் தட்டிக்களித்திருக்க வேண்டும்.

இந்த இக்கட்டான நிலைமையில்தான் முஸ்லிம் காங்கிரசுக்கு உதவுவதற்கு மஹிந்த அணியை சேர்ந்த பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் முன்வந்தார்கள். அவர்களது ஆதரவுடன் கே.ஏ. பாயிஸ் அவர்கள் முதல்வராக தெரிவானார்.

மகிந்த தரப்பினர் எவருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலையாக இருந்திருந்தாலும் முஸ்லிம் காங்கிரசே ஆட்சி அமைத்திருக்கும். இருந்தாலும் அது ஓர் பதட்டமான நிலைமையாகும்.

எனவே மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தும் பட்டியல் மூலமாக ஆசனம் வழங்கப்பட்ட மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அலிசப்ரி அவர்களை புத்தள நகரசபை தவிசாளர் பதவியில் அமர்த்துவதுக்கு ஐ.தே கட்சியின் சிங்கள உறுப்பினர்களுக்கு என்ன தேவை இருக்கின்றது ?.

விடயம் இதுதான் புத்தளம் நகரசபையினை முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதனை எப்படியாவது தடுக்கும்பொருட்டு திங்கக்கிழமை இரவு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு கோடிகளில் பணம் பரிமாரப்பட்டிருந்தது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.


முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...